ஆடிப்பெருக்கு விழா ஏன் விசேடமானது? (Aadi Perukku)
ஆடிப்பெருக்கு (Aadi Perukku) என்பது நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய அறிவியல்பூர்வமான மரபு விழா.தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு (Aadi Perukku) என்பது ஆன்மிகம் சார்ந்தது மட்டுமல்ல.
நீர் இன்றி அமையாது உலகு
என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், அதைப் போற்றுவதற்காகவும், நன்றிக் கடன் செலுத்துவதற்காகவுமே காலம் காலமாக இவ்விழாவைக் கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
விவசாயிகள், பொங்கல் விழாவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதற்கு நிகராக ஆடிப்பெருக்குக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.
இதனால் ஊரே களைகட்டியிருக்கும். மிகவும் பழைமையான சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரத்தில் உழவன் கோதை, பெருங்கோதை என்ற பாடலில் புதுப்புனல் (பொங்கி வரும் புது நீர்) என்ற பெயரில் ஆடிப்பெருக்கு (Aadi Perukku) விழாவைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
உலகின் பெரும்பாலான மக்கள் அதிசயத்தக்கதாக கருதும் பலவும் மிகச் சாதாரணமாக தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலோடு கலந்துவிட்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு விழாதான் ஆடிப்பெருக்கு(Aadi Perukku).
மண்ணையும் நீரையும் போற்றும் ஆடிபெருக்கு (Aadi peruku respects soil and water)
மற்ற எல்லாவற்றையும் விட நமது மண், நீர் – இந்த இரண்டுமே நமக்கு மகத்தான சொத்து என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக ஆடிப்பெருக்கு (Aadi Perukku) கொண்டாடப்படுகிறது.
எப்படி என்றால், இது மழை, நீர் மற்றும் மண்ணுடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா.
நாம் விவசாய கலாச்சாரமாக இருப்பதால், மழையால் நமது ஆறுகள் அனைத்தும் முழுமையாக பொங்கி பாயும் இந்த நேரம், இந்த பருவ மழைக்காலமானது, விவசாயம், விவசாயி மற்றும் இந்த விவசாயமே மூலமாக இருக்கும் இந்தக் கலாச்சாரத்துக்கும் மிக முக்கியமான நாளாக இருக்கிறது.
ஆடிப்பெருக்கு வரலாறு (History of the Aadi perukku)
சோழப்பேரரசை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும்? பொன்னியின் செல்வன் நாவலில் ஆடிப்பெருக்கு குறித்த கல்கியின் விவரிப்புகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. விதைப்புக்கான நீர் ஆதாரம் ஆடி மாதத்தில் இருந்துதான் கிடைக்கத் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கும்.
ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கும். தென்மேற்குப் பருவமழையால், ஆடி மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்திருக்கும்.
மராமத்து செய்யப்பட்ட ஏரி. குளங்களில் ஆடி 18 அன்று, நீர் தூம்புகள் திறக்கப்பட்டு அன்று வாய்க்கால்களில் வெள்ளோட்டமாகத் தண்ணீர் திறக்கப்பட்டு, பூஜைகள் செய்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
நீர்நிலைகளில் வெள்ளோட்டம் பார்க்கும் நாளாகவும் ஆடிப்பெருக்கு அமைந்துள்ளது. ஆடிப் பெருக்கில் இருந்துதான் விவசாயம் தொடங்குகிறது. நீரைப் போற்றுதலும் நீரை வணங்குதலும் நம்முடைய உழவர் பெருமக்களின் நீண்ட நெடுங்கால வழக்கமாக இருந்து வருகிறது.
`தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்ற சொல்லாடல் கிராமப்புறங்களில் சொல்லப்படுவதுண்டு.
`தாயைப் பழிப்பதே தவறு… அதிலும் தண்ணீரைப் பழிப்பதென்பது மிகவும் தவறான செயல்’ என இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பதற்காக இப்படிச் சொல்லப்படுகிறது.