ஆப்பிள் சீடர் வினிகர் தரும் பயன்கள் (Benefits of Apple Cider Vinegar)
ஆப்பிள் சீடர் (Apple Cider) வினிகர் என்பது ஆப்பிள் பழச் சாற்றில் இருந்து செய்யப்படும் ஒரு வகை பானமாகும்.
ஆப்பிள் பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன எனவும், மருத்துவ பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம்.
அதேபோல ஆப்பிள் சீடர் (Apple Cider) வினிகரும் அதிக மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது.
ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு நோய்களை போக்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் அருந்துவதால்..(Daily consumption of apple cider vinegar)
ஆப்பிள் சீடர் (Apple Cider)வினிகரை தினமும் அருந்தி வந்தால், செரிமானம் மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும்.
இவை மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பையும் குறைக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது. மேலும் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தக்கூடியது.
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் இரைப்பைக் குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை போக்க வல்லது.
மேலும் இது குடலில் உணவு செரிமானத்திற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது.
ஆப்பிள் சீடர் (Apple Cider)வினிகரில் உள்ள பெக்டின் (Pectin) என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு அகற்றுகிறது.
குளுக்கோஸ் அளவைக் குறைக்க
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம், ஸ்டார்ச் செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, இரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.
எலும்புகள் வலு பெற
இதில் உள்ள பொட்டாசியம், உடலின் நீர்ச்சத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது.
மக்னீசியம், செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் கல்சியத்தை உயர்த்தி எலும்புகளை வலுவாக்குகிறது.
கீழ்வாதத்தை குணப்படுத்துவதற்கு
கீழ்வாதமானது, உடலில் அமிலப் படிகங்கள் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய அமில படிகங்களை ஆப்பிள் சைடர் வினிகர், உடலின் கார சமநிலையை ஏற்படுத்தி கட்டுப்படுத்துகிறது.
பொடுகைப் போக்க
தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகர் முற்றிலும் நீக்கும். தண்ணீர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சம அளவில் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து உலர விடவும். விரைவில் பொடுகு போய்விடும்.
இரைப்பை அழற்சி, வீக்கம், அஜீரணம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
இது மூக்கடைப்பையும் சரி செய்யும். அத்துடன் மூக்கிலுள்ள மியூகஸை உடைத்து சைனஸைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் 5 மி.லி அளவுக்கு வெறும் ஆப்பிள் சிடர் வினிகரை மட்டும் கலந்து குடித்தால் சைனஸ் குறையும்.
அமில இயல்புகளைக்கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும்.
காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும்.
இப்படிச் செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். ஆனால், இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது .
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான நீரால் கால்களைக் கழுவிவர கால் மற்றும் பாதத்தில் உள்ள பூஞ்சைகள் அழிந்துவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகரின் பயன்பாட்டு அளவுகள்
வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்து வர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும் .
ஆப்பிள் சீடர் வினிகர்யை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதால், உடலில் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும்.
அதிலும் காலையில் முதல் வேலையாக, ஆப்பிள் சீடர் வினிகரை உண்டு வந்தால், அது நல்ல சுத்திகரிப்பானாக செயலாற்றும்.
உடல் எடையை குறைக்க நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, மூன்று வேளை அருந்தவும்.
சளி, இருமல், தொண்டைப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வை அளிக்கும்.
ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.