செயற்கை இனிப்புகள் எவ்வளவு ஆபத்தானது?(Are Artificial sweeteners Dangerous?)
செயற்கை இனிப்புகள் (Artificial sweeteners) என்பது ஊட்டச்சத்து அல்லாத இனிப்பு அல்லது அதி தீவிர இனிப்பு ஆகும்.பொதுவாக இது சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படும் ஒரு பொருள். இது உணவில் இனிப்பு தன்மைக்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் சுக்ரோஸ் என்னும் வெள்ளை சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவையைக் கொண்டது இந்த செயற்கை இனிப்பு.
செயற்கை இனிப்புகள் மிகக் குறைந்த அல்லது முற்றிலும் கலோரிகள் அல்லாத சுவையைத் தருகின்றன. ஆகவே இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வேண்டாம் என்று நினைப்பவர்களின் மனம் கவர்ந்த பொருளாக செயற்கை இனிப்புகள் இருப்பதில் வியப்பில்லை.
இயற்கை இனிப்புகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு செயற்கை இனிப்புகள் (Artificial sweeteners) சேர்க்கப்பட்ட எல்லா விதமான பானங்கள், உணவு பொருட்களும் கிடைக்கின்றன.
சோடா போன்ற பானங்கள் முதல் கேக் போன்ற தின் பண்டங்கள், மற்றும் டூத் பேஸ்ட்டில் கூட செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை மிகவும் லேசான உணவுகள், டயட் உணவுகள், சர்க்கரை இல்லாத உணவுகள் என்று மக்களைக் கவரும் விதத்தில் சந்தையில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.
அஸ்பார்டேம், சைக்லமேட் , சக்கரின் ,ஸ்டீவியா,சைக்லேமேட், அசெசல்பேம் பொட்டாசியம், சுக்ராசைட், நியோட்டம், மற்றும் சுக்ரோலோஸ் போன்ற பல அங்கீகரிக்கப்பட்ட செயற்கை இனிப்பு வகைகள் உள்ளன.
சாதாரணஇனிப்புக்கள் நீரிழிவாளர்களுக்கும், உடல் எடை அதிகரித்தவர்களுக்கும் நல்லதல்ல. காரணம் அதில் கலோரி வலு அதிகம். குருதிச் சீனியின் அளவையும் உடல் கொழுப்பையும் எடையையும் அதிகரிக்கும்.
அத்தகைய இனிப்புப் பிரியர்களின் தேவைகளை ஈடுசெய்யவே, கலோரி வலுக் குறைந்த இனிப்புகளான செயற்கை இனிப்புகள் சந்தைக்கு வந்தன.
இவற்றின் நன்மை என்னவெனில் கலோரி வலு குறைவாக இருக்கும் அதே வேளை அவற்றின் இனிப்புச் சுவையானது சீனியை விடப் பல மடங்கு அதிகமாகும். உதாரணமாக 30 மிகி அளவேயான aspartame 5 கிராம் அளவு சீனியின் இனிப்புச் சுவையைக் கொடுக்க வல்லது.
ஒரு கல்லில் இரு மாங்காய்கள். இனிப்புச் சுவையை உண்ண முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
செயற்கை இனிப்புகளில் உள்ள பாதிப்புகள் (Harms in artificial sweeteners)
இயற்கை இனிப்பில் உள்ள அதே சுவை, கலோரி குறைவாக கிடைக்கும் போது, மக்கள் அதனை ஒரு ஆரோக்கிய தேர்வாக நினைத்து வாங்குகின்றனர்.
ஆனால் நாம் அனைவரும் நினைப்பது போல், செயற்கை இனிப்புகளில் ஆரோக்கியம் என்பது வாய்வழி செய்தி மட்டும் தான். இந்த செயற்கை இனிப்புகள்(Artificial Sweets) பாதுகாப்பானவையா என்பது தான் பலரின் மனதில் இருக்கும் சந்தேகம்.
ஆனால் எடை இழப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கான வழிமுறையாக செயற்கை இனிப்புகளை நீங்கள் தேர்வு செய்தால், அவை எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம்.
இவை ஒரு சர்க்கரை மாற்று மட்டும் தான். சர்க்கரையை சாப்பிட வேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர்கள், அதற்கு மாற்றாக இருக்கும் வேறு இயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
அதை விடுத்து, செயற்கை இனிப்புகளை உங்கள் உணவு முறையில் இணைத்து, உடல் பாதிப்புகளை நீங்களாகவே வரவழைத்துக் கொள்வது நல்லதல்ல.
செயற்கை இனிப்புகளுடன் தொடர்புடைய நோய்கள்
அதிகமான அளவு பயன்படுத்துவதால், செயற்கை உணவுகளில் பல ஆபத்துகள் உள்ளன. நீண்டகால சிறுநீரக நோய் , டைப் 2 நீரிழிவு, வளர்சிதை மாற்ற குறைபாடுகள் மற்றும் நரம்பியல் விளைவுகள் போன்ற நாட்பட்ட நோய்களுடன் இந்த செயற்கை இனிப்பிற்கு தொடர்பு உள்ளதாக அறியப்படுகிறது.
இரசாயன உட்கொள்ளல்
செயற்கை இனிப்புகளில் (Artificial sweeteners) இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவான உண்மை.இத்தகைய பொருட்களை உடல் ஏற்றுக் கொள்ளும்படி வடிவமைக்கப்படாததால், இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
இனிப்பின் தேடல் அதிகரிக்கிறது
உண்மையான சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவை கொண்டதால் இயல்பாகவே, அதிகமான அளவு இனிப்பை எடுத்துக் கொள்ளும் ஆர்வம் தூண்டப்படுவது தவிர்க்கமுடியாததாகிறது. செயற்கை இனிப்புகளில் கலோரி அல்லாத அல்லது குறைந்த கலோரி அளவுகள் உள்ளதால், இனிப்புத் தேடலை நிர்வகிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது.
கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றதா?
கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் எல்லா உணவுகளும் பரிசோதிக்கப்பட வேண்டும். கர்ப்பிணிகள் செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதென்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
காலத்திற்கு முந்திய மகப்பேறு நிகழலாம் என்றது ஒரு ஆய்வு.
பல பெற்றோர்கள், செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை குழந்தைகள் உட்கொள்வதை ஆதரிக்கிறார்கள். ஆனால் ,பொதுவாக கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் செயற்கை இனிப்புகளை தவிர்க்க வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பு
குடல் பக்டீரியாவிற்கும் எடை அதிகரிப்பதற்கும் தொடர்பு உண்டு. வாழ்வியல் முறையில் மாற்றம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவை ஆரோக்கியமற்ற குடல் பக்டீரியாவை உருவாக்கி, பல்வேறு நோய்களை உருவாக்குகிறது.
செயற்கை இனிப்புகள் குடல் பக்டீரியாவை நேரடியாக தாக்குகின்றன. பக்டீரியா கலவையில் ஏற்படும் மாற்றத்தால் கெட்ட பக்டீரியா அளவு அதிகரித்து எடை அதிகரிப்பிற்கு காரணமாகின்றன என்பது தெரிய வருகிறது.
வளர்சிதை மாற்ற தடை
அடிக்கடி செயற்கை இனிப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் இயல்பான வளர்சிதை மாற்றத்திற்கு தடையாக உள்ளது.
ஞாபக மறதி
செயற்கை இனிப்புகளால் (Artificial sweeteners) உண்டாகும் மற்றொரு பக்க விளைவு , ஞாபக மறதி. தொடர்ந்து செயற்கை இனிப்புகளை பானங்கள் மூலம் எடுத்துக் கொள்வதால், சிறு மூளை பாதிக்கப்பட்டு ஞாபக மறதி உண்டாகும் வாய்ப்புகள் தோன்றலாம்.
செயற்கை இனிப்புகளில் உள்ள நன்மைகள் (Benefits of artificial sweeteners)
- குறைந்த கலோரி
- கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை பாதிக்காது,
- இரத்த சர்க்கரையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது,
- சர்க்கரையை விட இனிமையானது, எனவே சிறிய அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவை பற்களுக்கு மிகவும் உகந்தது என்பது உண்மை. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை உட்கொள்வதை நிர்வகிக்க அவற்றைப் பயன்படுத்தலாம், இது நீரிழிவுக்கான சர்க்கரை ஆபத்துக்களை நிச்சயமாகத் தடுக்கும்.
செயற்கை முறையிலான இனிப்பு சுவை கொண்ட சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று ஃபிட்னஸ் பிரியர்களும் சர்க்கரையை தவிர்க்க செயற்கை இனிப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது அவசியமற்ற தேர்வு என்றே சொல்லலாம்.
உண்மை என்னவென்றால், ஊட்டச்சத்து இல்லாத இனிப்பு மனித மூளையை குழப்புகிறது. இந்த சர்க்கரையை எரிக்க இன்சுலின் சுரக்க வேண்டிய அவசியம் பற்றி மூளை “இனிப்பு ” வருகிறது என கணையத்திற்கு சமிக்ஞை அனுப்புகிறது.
இதன் விளைவால் இரத்தத்தில் இன்சுலின் அளவு உயர்கிறது. மற்றும் சர்க்கரை அளவு வேகமாக குறைந்து வருகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததே. ஆனால் ஆரோக்கியமான நபருக்கு அல்ல!
செயற்கை இனிப்புச் சுவை என்பது சர்க்கரைப் போன்ற இனிப்பை அதாவது போலியான இனிப்புச் சுவையை அளிக்கக் கூடியது. ஆனால் இதனால் உடலுக்கு குறைந்த அளவே ஆற்றல் கிடைக்கிறது.
இயற்கை இனிப்புகளைப் போல் , செயற்கை இனிப்புப் பொருள்கள் எடை அதிகரிப்பு, உடல் பருமன், மற்றும் கலோரிகளால் நிரம்பியிருக்காது. இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கூட,
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இயற்கையான சர்க்கரை மாற்றுகளை செயற்கையானவற்றுடன் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆனால்,நீரிழிவு நோயற்றவர்கள் செயற்கை இனிப்புகளை(Artificial Sweets) உபயோகிப்பது அவசியமற்றது.
உங்களுக்கு இனிப்பிற்கான சிறந்த மாற்றீடு எது என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உடலின் அனைத்து அம்சங்களையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நோயியல்களையும் மருத்துவர் கணக்கில் எடுத்துக்கொள்வார்.
ஆனால் அதிகளவு சீனி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது எல்லாருக்குமே நல்லது.முடிந்த வரை இயற்கை இனிப்புகளான தேன்,கருப்பட்டி ,பனம் வெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.