ஆட்டிசம் குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்வது? (Autism)
ஆட்டிசம் (Autism) என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் ஆகும்.
ஆட்டிசம் (Autism) என்பது நோயல்ல. அது ஒரு வகை மனநிலை அதாவது மன இறுக்கம் என்று சொல்லலாம். குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு.
பெற்றோர்களுக்கு ஆட்டிசம் (Autism) குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவை. அப்போது தான்அதிலிருந்து உங்கள் குழந்தையை வெளிக் கொணர்ந்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
இவ்வகைக் குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்துக்கும் இக்குறைபாட்டுக்கும் தொடர்பில்லை.
இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
ஆட்டிச பாதிப்புக்குள்ளான ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகைகளால் மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாக இருப்பதும் நிஜமே.
இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடு, உடல் ஊனம், அதீத வளர்ச்சி போன்ற பல்வேறு வகையான குறைபாடுகளுடன் பிறக்கின்றன.
மன நிலைக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது?
இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் திறமைகள் புதைந்து இருக்கிறது. பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டு வர முடியும்.
பொதுவாக, கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும்.
இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆட்டிசம் குறைபாடுகள் (Autism Disorders)
எந்தவொரு பொருளையும் அல்லது விஷயத்தையும் மூளை உணர்வது கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் வழியே அவை தரும் அடிப்படைத் தகவல்களைப் பரிசீலிப்பதன் மூலம் தான்.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் மூளையுடன் கொண்டுள்ள புறத் தொடர்பு, அதனால் உணரப்படுவதை புத்தி என்று சொல்லலாம்.
அத்தகவல்களின் அடிப்படையில் தான் நாம் மேற்கொண்டு சிந்தித்து, உணர்வு பூர்வமாகவும் உடல் மூலமாகவும் எதிர்வினையாற்றுகிறோம்.
சாதாரணமாக இவையெல்லாம் அனிச்சையாகவே நடக்கும் என்பதால், நாம் இவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.
ஆனால் ,ஆட்டிச பாதிப்பு (Autism) கொண்டவர்களுக்கு இந்த `சென்சரி’ – உணர்வு சார்ந்த தகவல்களைப் பெறுவதிலும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதிலும் நிறைய சிக்கல்கள் உண்டு.
இதனால் , மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.
இக்குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினை கேட்பதில் ஏற்படுவது தான். ஏனெனில், சத்தங்களை உள்வாங்காத போது மனிதனின் தகவல் தொடர்புத்திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஒலிகள் மிகைப்படுத்தப்பட்டும் கேட்கலாம். அல்லது குழப்பமாகவும், தெளிவில்லாமலும் கேட்கலாம்.
ஆட்டிசம் குறைபாடு இருப்பதை எப்படி கண்டுகொள்வது? (How is autism diagnosed?)
இவர்கள் பிறக்கும் போது நார்மலாக இருப்பர். நிற்பது, நடப்பது எல்லாம் இயல்பாக இருக்கும். ஆனால் தாயின் முகம் பார்ப்பதில்லை. மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. பேச்சுத்திறன் குறைவாக இருக்கும். 2 வயதுக்குள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டால், தொடர் பயிற்சியின் மூலம் குணப்படுத்துவது எளிது.
சில பெற்றோர் குழந்தை பேசாததை கண்டு கொள்ளாமல், “டிவி’ முன் உட்காரவைத்து, தங்கள் வேலைகளைச் செய்கின்றனர். இதனால் குழந்தையின் பழகும் திறன் மேலும் குறைந்து விடும். மற்றவர்கலைக் காணும் விதமாக , பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு விஷயத்தையும் நேரில் அழைத்துச் சென்று புரிய வைக்க வேண்டும். மூளையை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் பிரச்சனை தான் இதற்கு காரணம். இதை கவனிக்காமல் விட்டால் இளம் பருவத்தில் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஆறு மாதங்களைக் கடந்ததும், தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல்
- 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல்
- ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்
- ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல்
- 18 – 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல்
- கைகளை உதறிக் கொண்டே இருத்தல்
- ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை
- கதை கேட்பதில் விருப்பமின்மை
- தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு
- கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல்
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று குழந்தைகளிடம் இருந்தாலும் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் பெற வேண்டும். குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம்.
ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்.
ஆட்டிசநிலைக் குழந்தைகளிடம் சமுதாயத்தின் கடமை
இவர்களை “மனவளர்ச்சி குன்றியோர்’ என அடையாளப்படுத்தினாலும், உண்மையில் இவர்களுக்கு மனவளர்ச்சி, சாதாரணமானவர்களை விட சிறப்பாக இருக்கும். இவர்களை மனவளர்ச்சி குறைந்தவர்களாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முக்கியமாக அவரை சிறப்புக் குழந்தை என அழைத்து (special child) வேறுபாடு காட்டத்தேவையில்லை.
அவரை தரக்குறைவாக நடத்தவும் வேண்டியதில்லை. ஏதோ நம்மால் இயன்ற வரையில் அவருக்கு ஏற்ற சிறப்பான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதைத்தான்!
ஆட்டிசம் (Autism) குழந்தைகளுக்கென தனி இயல்புகள் உள்ளன. மிக வேகமாக, துறுதுறுவென இருப்பதால், மற்றவர்கள் இக்குழந்தைகளை வித்தியாசமாக நோக்குகின்றனர்.
அவர்களின் தேவையை அழகாக எடுத்துச் சொல்லும் திறமை படைத்தவர்கள். பேசத் தெரியாவிட்டாலும் பசிக்கிறது என்றால், தட்டை காண்பிக்கத் தெரியும்.அந்தளவுக்கு நுட்பமானவர்கள்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் கூட இவர்களை புரிந்து கொள்வதில்லை. தாமதமாக கற்றுக் கொள்ளும் இவர்களை, “மூளை வளர்ச்சியில்லை’ என்று கேலி செய்கின்றனர்.
இக்குழந்தைகளை தனிமைப்படுத்தினால், நிலைமை மோசமாகும். மற்ற மாணவர்களை பார்த்து பார்த்து, தங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பைத் தர வேண்டும்.
பக்கத்து வீட்டு குழந்தைகளை கூட, இவர்களுடன் விளையாட விடுவதில்லை. பள்ளியிலும், சமுதாயத்திலும், அக்கம், பக்கத்திலும் ஏளனத்திற்கு ஆளாகும் இவர்களுக்குத் தேவை. போதிய பயிற்சி.
இக்குழந்தை களையும், அவர்தம் பெற்றோரையும் ஒதுக்கிவிடாமல் நம்முடன் அரவணைத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
அதனால், இவர்களை புறந்தள்ளாமலும், இவர்களின் வலிகளை புரிந்து கொள்ளவும் முயலவேண்டும். மேலும், ஆட்டிசக் குழந்தைகளுடன் மற்றக் குழந்தைகள் கலந்து விளையாடவும், படிக்கவும் ஏற்பாடு செய்யவேண்டியது நம் எல்லாருடைய கடமையும் ஆகும்.
ஆட்டிசம் அறிகுறிகள் (Symptoms of autism)
- சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் சேராமல் ஒதுங்கி இருப்பது.
- கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது.
- சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.
- பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.
- விளையாட்டுக்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
- தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.
- காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.
- வித்தியாசமான நடவடிக்கைகள் – கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்துகொண்டிருப்பது.
- வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.
- சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.
- அன்றாட செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசௌகரியமாக உணருவது.
- சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது. அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.
- எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.
- தன்னந்தனியே சிரித்துக்கொள்வது.
ஆட்டிச பாதிப்புடைய பலரும் சில நேரங்களில் மூர்க்கமாக நடந்துகொள்வது உண்டு. இது அவர்களுடைய பயம் அல்லது எரிச்சல் காரணமாகவோ, உடல் ரீதியான சில சிக்கல்களாலோ ஏற்படுவது மட்டுமே.
ஆட்டிசத்தின் காரணமாக அவர்கள் குரூரமான வன்முறைகளில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்று.
பெற்றோர்களே மனந்தளராமல் செயல்படுங்கள்
“ஆட்டிசம்’ குழந்தைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்சனையும், வேதனையும் கொஞ்சமல்ல.
ஆட்டிச பாதிப்பு என்பது வரையறுக்கப்பட முடியாதது. எனவே, எந்தக் கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.
வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே, மனதைத் தளர விடாமல் தொடர்ந்து கற்க அவர்களை ஊக்குவியுங்கள்.
பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்குத் தொடர்ந்து அளியுங்கள். இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துங்கள்.
இதனால் அக்குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.
குழந்தையை மற்ற சாதாரணக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு மனம் சோர்வுறவும் தேவையில்லை.
உங்கள் ஆற்றலையெல்லாம் அழுகையில் வீணடிக்காது, விரைவில் உங்கள் குழந்தையை வாழ்வதற்குத் தயார் செய்ய ஆரம்பியுங்கள்.
நம்மைவிட திறமை வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களின் விருப்பத்தை கண்டறிந்து அதில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு ஒருஆசிரியர் என்ற முறையில் தொடர் பயிற்சி அளித்தால், நல்ல நிலைக்கு வருவார்கள்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம்.
குழந்தை எதையெல்லாம் செய்யவில்லை என்று யோசித்து சோர்வுறாமல், உங்கள் குழந்தையால் என்னென்னவெல்லாம் செய்விக்கலாம்,என்ன திறமைகள் உள்ளது என் கண்டறிந்து, சின்ன வெற்றியையும் கூட கொண்டாடப் பழகுங்கள்.
புலன் உணர்வு பிரச்சனைகள் கொண்டிருப்பதால், கைகளைத் தட்டுவது, ஆட்டுவது, குதிப்பது போன்ற தேவையற்ற செய்கைகளில் ஈடுபடக்கூடும். ஒரே மாதிரியான செயல்பாடுகளையே விரும்புவர் – மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சிரமப்படுவர்.
உதாரணமாக, வகுப்பறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து பழகிவிட்டால், வேறு இடம் மாறச் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
வழக்கத்துக்குப் புறம்பான சிறு மாற்றத்தைக் கூட, அவர்களிடம் பல முறை சொல்லி, அவர்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும்.
பெண்குழந்தைகளை விட, ஆண்குழந்தைகளே இக்குறைபாட்டில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆட்டிசம் குறைபாட்டினை குணமாக்க மருந்துகள் உண்டா?
இது வரையில் ஆட்டிசத்தை முற்றிலும் குணமாக்க எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆங்கில மருத்துவமோ, இந்திய மருத்துவ முறைகளோ அல்லது இதர மாற்று மருத்துவத்திலும் கூட இதை சரி செய்ய மருந்துகள் கிடையாது.
மாத்திரைகளால் இதை குணப்படுத்தி விடலாம் என்று யாராவது சொன்னால், பெற்றோர் நம்பக்கூடாது. இது நோய் அல்ல. குறைபாடு என்பதால், மற்ற குழந்தைகளோடு பழகவிடுவது தான் சிறந்த பயிற்சி.
ஏனெனில் இதை மருத்துவ உலகம் நோய் என்று சொல்லுவதில்லை. நோய்க்கு மட்டும் தான் சரி செய்ய மருந்துகண்டுபிடிக்க முடியும்.ஆட்டிசத்தை, குறைபாடு என்ற வகையில் தான் சேர்த்துள்ளனர். இதற்கு பயிற்சிகள் மட்டுமே உண்டு.
ஒரு மனிதனுக்கு சர்க்கரை குறைபாடு வந்துவிட்டால் எப்படி முழுமையாக குணப்படுத்தமுடியாதோ, அதே போலத்தான் ஆட்டிசமும். சக்கரையை கட்டுக்குள் வைத்து நீண்ட நாட்கள் வாழமுடியும். ஆட்டிசமும் அப்படியே!
ஆட்டிசக் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்கவேண்டும்?(Kind of training to autistic children)
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம் என்பதால் இக்குழந்தைகளை நன்கு பரிசோதித்து, அதன் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
பொதுவாக அனேக ஆட்டிசக் குழந்தைகளுக்கும், புலன் உணர்வு பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதை, சமநிலைக்கு கொண்டுவர, ‘ஆகுபேஷன் தெரபி’ உதவக்கூடும்.
அதுபோலவே சிறப்புக் கல்வியும், சிலருக்கு பேச்சுப்பயிற்சியும் கொடுக்கப்படவேண்டும்.
இது ஒவ்வொரு குழந்தையின் தேவையைப் பொறுத்து மாறுபடும். இதை குழந்தையின் பெற்றோரே தீர்மானிக்க முடியாது. துறைசார்ந்த வல்லுநர்களின் ஒத்துழைப்போடு அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற பெற்றோர் உதவ வேண்டும்.
இக்குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு மற்ற குழந்தைகளின் பங்களிப்பு முக்கியம்.
அவர்களுடன் கலந்து பழகுவது, சேர்ந்து விளையாடுவது, படிப்பது போன்ற செயல்களால் இக்குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும்.
நவீன தொழில்நுட்பம் மூலம் ஆட்டிசத்தை கருவிலேயே கண்டறிய முடியுமா
(Autism be diagnosed by modern technology?)
சாதாரண ஸ்கேன்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, குரோமோசோம் மாற்றத்தால் உருவாகும் டவுன்ஸ் சிண்ட்ரோமை கண்டறிவதற்கு அதிநவீன கருவிகள் தேவைப்படுகின்றன.
முன்பெல்லாம், கரு உருவான 5 மாதங்களுக்கு பிறகு தான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியலாம்.
இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.