அவகடோவின் அருமை (The awesomeness of avocado)
இப்பழம் அவகோடா (avocado), ஆனைக்கொய்யா, முதலைபேரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இது தனிப்பட்ட மணம் மற்றும் சுவையினை கொண்ட ஒரு தனித்துவமான பழம்.
வெண்ணைப் பழம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இப்பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணை போன்று வழுவழுப்பாக உள்ளது. வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம்.
வெண்ணைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இப்பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், கல்சியம், காப்பர், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6, நார்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.
வெண்ணைப்பழத்தின் மருத்துவப் பண்புகள்
நல்ல செரிமானத்திற்கு
அவகாடோ பழத்தில் (avocado) கரைக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு நச்சுப் பொருட்களை கழிவாகவும் வெளியேற்றுகின்றன.
உணவில் உள்ள நுண்ஊட்டச்சத்துகளை குடல் உறிஞ்சுவதை இப்பழத்தில் உள்ள நார்சத்தானது ஊக்குவிக்கின்றது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு தொடர்பானவற்றையும் நார்ச்சத்து சரிசெய்கிறது.
நமது அன்றாட நார்ச்சத்துத் தேவையில் 40 சதவீதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. எனவே இப்பழத்தினை இவ்வாறு அவகாடோ சலாட் செய்து உண்டு செரிமான பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.

சுவாச புத்துணர்விற்கு
அவகோடா வாய்துர்நாற்றத்தினைத் தடுக்கிறது. உணவினை இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து நன்கு செரிக்கச் செய்வதால் செரிமானமின்மை காரணமாக ஏற்படும் வாய்துர்நாற்றம் தடுக்கப்படுகிறது.
இப்பழத்தில் காணப்படும் பாக்டீரிய எதிர்ப்பு பொருட்கள் வாயில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடைசெய்து வாய்துர்நாற்றத்தைத் தடுத்து சுவாச புத்துணர்ச்சி கிடைக்கச் செய்கிறது.
இதயப் பாதுகாப்பிற்கு
அவகோடா , உடலில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கிறது.
இப்பழத்தில் உள்ள பொட்டாசியமானது இரத்தத்தில் சோடியத்தின் அளவினை சரிசெய்து உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு வருவது தடைசெய்யப்படுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க
இப்பழத்தில் காணப்படும் கரோடினாய்டுகள், நிறைவுறாக் கொழுப்புகள் நம்மை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன.
இப்பழத்தில் காணப்படும் குளுதாதயோன் என்ற ஆன்டிஆக்ஸிஜென்ட் ( cluthathayon) வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, செல்களை காப்பதோடு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
சரும பாதுகாப்பிற்கு
வறண்ட சருமத்தினருக்கு அவகாடோ (avocado) ஒரு வரப் பிரசாதம். அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது. இப்பழத்தில் கரோடினாய்டுகள் சூரிய கதிர்வீச்சிலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
இப்பழத்திலிருந்து தயார் செய்யப்பட்ட எண்ணெயானது(Avacado Oil )சூரிய கதிரினால் ஏற்படும் சரும எரிச்சலுக்கு சரியான நிவாரணத்தை தருகிறது. எனவே இப்பழத்தினை உண்டு சருமப் பாதுகாப்பினைப் பெறலாம்.
கர்ப்பிணிகளின் நலத்திற்கு
கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் இப்பழத்தில் ஏனைய பழங்களைவிட அதிகளவு கிடைக்கிறது. ஃபோலிக் அமிலம் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரிசெய்ய இன்றியமையாதது.
மேலும் இப்பழத்தில் காணப்படும் விட்டமின் கே ,இரத்தம் உறைதலுக்கு துணை புரிந்து தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பினை அளிக்கிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி6 கட்டுப்படுத்துகிறது.
எலும்புகளின் பலத்திற்கு
இப்பழத்தில் காணப்படும் தாதுஉப்புக்களான துத்தநாகம், பாஸ்பரஸ், காப்பர், கால்சியம் ஆகியவையும், பைட்டோ-நியூட்ரியனான லுடீன் ஸீக்ஸாத்தைனும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு எலும்புகளை வலுப்படுத்துகிறது.
விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்திற்கு
விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான சக்தியை இப்பழம் கொடுப்பதோடு, அவர்களின் உடலினை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
இப்பழமானது அப்படியே சப்பிடலாம். அல்லது சாலட்டாகவோ, பழக்கலவையாகவோ உண்ணப்படுகிறது. மேலும் இப்பழம் ஐஸ்கிரீம், பழச்சாறு, ஜூஸ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் வெண்ணைப் பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நலமோடு வாழ்வோம்.