கற்பூரவல்லி இலை மருந்துக்குழம்பு (Camphor leaves)
கற்பூரவல்லி இலைகளை (Camphor leaves) வாயில் போட்டு மென்று சாப்பிட காரமும் கசப்பும் ஒருவித நல்ல வாசனையை உணர முடியும். இது சளிக்கு அற்புத மருந்து.
“ஓமவல்லி’ என்றும் இன்னொரு பேர் இதுக்கு உண்டு. கற்பூரவல்லி (Camphor leaves) இலையை சாதரணமா அப்படியே எடுத்து மென்னு சாப்பிடலாம். இல்லாவிட்டால் தேனுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
இருமல் பாடாய் படுத்துகிறதா,சளியா?
அண்டத்துல இருப்பது பிண்டத்துலயும் இருக்குன்னு சும்மாவா சொன்னாங்க. பஞ்சபூதங்களின் செயல்பாட்டில் மாற்றம் வரும் போது, நம்ம உடலிலும் அதற்கு ஏற்ப விளைவு நடக்கத் தான் செய்யும்.
மழை,குளிர் காலத்தில் சளிப்பிடிக்கறது இயற்கையானது தான். இதுக்கெல்லாம் நம் முன்னோர் இரசாயன மருந்தை தேடிப்போகாமல் கொல்லைப்புறத்தில் நட்டு வைத்திருக்கும் செடிகளை பயன்படுத்தி வந்தனர்.அவற்றில் ஒன்று தான் கற்பூரவல்லி செடியும்.
இந்த இலையை தேங்காய், பருப்பு, மிளகாய்வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சட்னியாக சாப்பிடலாம்.
இந்த இலையை சாறெடுத்து நல்லெண்ணெய் சர்க்கரையுடன்ட சேர்த்து நல்லாக கலக்கி நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷத்தாள் வரும் தலைவலி நீங்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண வாந்தியையும் இந்த மூலிகை நிறுத்தக்கூடியது.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்க்கும் இளைப்பு நோய்க்கும் உள்மருந்தாக இது பயன்படுகிறது. கண் அழற்சி ஏற்படும் போது இந்தக் கற்பூரவல்லி இலைச்சாறை மேல் பூச்சாக தடவினால் குணம் தரும்.
அதிகப்படியான கபம் பிரச்சனை இருக்கிறவர்கள், சளி வெளியேறுவதற்கு , இந்த இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, அதோட ஒரு ஸ்பூன் தேன் கலந்து மூன்று நாள் தினமும் இரண்டு வேளை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்பூரவல்லி இலையை சூடான தண்ணியில போட்டு ஆவி பிடித்தாலும் நெஞ்சு சளிக்கு குணமளிக்கும்.
கற்பூரவல்லியின் மருத்துவ குணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கற்பூரவல்லி இலைத்தண்டுகளை நீரில் சூரிய ஒளிபட வைத்தால் ஒரு வாரத்திற்குள் வேர் வந்து விடும். அதனை ஒரு டப்பா மண்ணில் நட்டு வைத்தால் போதும்.
விரைவாக அழாகா வளர்ந்து விடும்.அந்த இலைகள் பார்க்குறதுக்கு பச்சையாக அழகா இருப்பதால்,அழகு செடியாக வீட்டு முன்னாடியாக வீட்டுக்குள்ளும் வைத்து வளர்க்கலாம். சுத்தமான காற்று கிடைக்கும். சுவாசத்திற்கும் நல்லது.
கற்பூரவல்லி மருந்துக் குழம்பு (Camphor leaves recipe)
செய்யத் தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி இலைகள் – 2 கப்
மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா – தலா ஒரு ஸ்பூன்
ஆய்ந்த கறிவேப்பிலை – ஒரு கப்
உரித்த பூண்டு – கால் கப்
புளி – எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் – ஒரு கப்
கடுகு, மஞ்சள்தூள் – தலா ஒரு ஸ்பூன்
பொடித்த வெல்லம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கற்பூரவல்லி இலைகளை அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நைசாக பொடிக்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கற்பூரவல்லி இலைகளை வதக்கவும். பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பச்சை வாசனை போனதும் அரைத்த பூண்டு கருவேப்பிலை விழுதைக் கொட்டி கிளறவும். பின்னர் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
இந்த குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி இருமல், அஜீரணத்தைப் போக்கும் அற்புதமான குழம்பு இது.
விலைமதிப்பற்ற பொக்கிஷம் இது.
இதை அறியாமல் கண்ட இரசாயன மருந்துகளையும் உள்ளே தள்ளி நோய்களை நாமே விலைக்கு வாங்குவதை தவிர்ப்போம்!!