சித்தர் பௌர்ணமி (Chitra Pournami)
சித்ரா பௌர்ணமியும் சித்தர்கள் பெருமையும் (Chitra Pournami & Sithars)
சித்தர்கள் அனைவரும் இந்த பூமிக்கு வரும் உன்னத நாளான சித்தர் பௌர்ணமி என்று ஒரு நாள் உண்டு. இந்த நாளே பின்னாளில் மருவி சித்ரா பௌர்ணமி(Chitra Pournami) என்று அழைக்கப்பட்டது.
சித்திரைக்கும் சித்தர் பெருமக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று வரலாறு கூறுகிறது. பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்தாலும், “வாசி” எனப்படும் சுவாசம் மூலமாக காலம் கணிக்கப்பட்டிருப்பதையும் சித்தர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.
இதயம் என்ற தாமரை வழியாக சுவாசம் போகும் போது, நான்கு அங்குலம் போக மீதி சரியாகத் திரும்பி வரும் போது சுவாசத்தைக் கணித்திருக்கிறார்கள். அது இருபத்தோராயிரத்து அறுநூறு முறை நடக்கிறது. அதுவே அறுபது நாழிகை கொண்ட ஒருநாள்.
நாழிகை ஒன்றுக்கு நம் சுவாசம் 360. அறுபது நாழிகைக்கு- அதாவது ஒரு நாளைக்கு நம் சுவாசம் 21,600 முறையாகும். இதன்படி கணக்கிட்டுப் பார்த்த போது 360 நாள்- 21,600 நாழிகை கொண்டது என்றும், அதுவே ஒரு வருடம் என்றும் சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.
இயற்கையுடன் இசைந்து வாழவேண்டுமென்பதை நினைவூட்டவே உலக சித்தர்களின் நாள் சித்தர் பௌர்ணமியான “சித்ரா பௌர்ணமி” கொண்டாடப்படுகிறது.
சித்தர்கள் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தியது தான் சித்தமருத்துவம். தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞான சக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்தாக அளித்திருக்கிறார்கள்.
ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக் கொண்ட மருத்துவத்திற்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.
ஒரே சமயத்தில் நான்கு இடங்களில் காட்சி தந்த சித்தர்களும் உண்டு. அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர் பெருமக்களும் உண்டு. சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோவில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
மேலும் சித்தர்கள் ஜீவசமாதியான இடத்திற்குச் சென்று வழிபட்டால் நமது துன்பங்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். கோவில்கள் மட்டுமல்ல, சித்தர்கள் அருளும் சமாதிகளும் தோஷங்கள் நிவர்த்திசெய்யும் தலங்களாகப் போற்றப்படுகின்றன.
சித்ரா பௌர்ணமியன்று (Chitra Pournami)இரவில், ஒருசில பகுதிகளில் பூமியிலிருந்து ஒருவகை உப்பு வெளிப்படும். இதை “பூமிநாதம்” என்று சொல்வர்.
இந்த உப்பு, சித்தமருத்துவத்துறையில் முக்கிய இடத்தைப் பெறும். இது மூலிகையிலுள்ள ஜீவசக்திகள் வீரியத்துடன் விளங்க உதவுகிறது.
இந்த உப்பு, சித்ரா பௌர்ணமியன்று வெளிப்படுவதை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே.
மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள். சித்ரா பௌர்ணமியின் உண்மையையும் சக்தியையும் கண்டு, மனித குலம் நலமுடன் வாழ வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்கள் என்று வரலாறு கூறுகிறது.
சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?
சித்ரா பௌர்ணமி விரதத்தின் பலன்கள் (Benefits of Chitra Pournami Fasting)
பௌர்ணமி யில் சந்திரன் முழுமையான கதிர்களை வெளிப்படுத்துவான்.
எனவே அன்றைய தினம் நிலா ஒளியில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழர்களிடம் சிறப்பான பழக்கமாக இருந்தது. தற்போது அந்த பழக்கம் மறையும் நிலையில் உள்ளது.
என்றாலும் வழிபாடுகளில் மாற்றங்கள் இல்லை. பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது.
அம்பிகை இருப்பிடமாக சந்திரனை ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் சுட்டிகாட்டி உள்ளது.எனவே பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு விளக்கேற்றி வைத்து பூ போட்ட வஸ்திரம் அணிவித்து வழிபட வேண்டும்.
குறிப்பாக பெண்களுக்கு அதிக பலன்களை தரக்கூடியது சித்ரா பவுர்ணமி தினமாகும்.
இந்த வழிபாடு காரணமாக திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆன பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கிரகதோஷங்கள் நீங்கும்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்பிகைக்கு குங்குமம் அர்ச்சனை செய்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் சகல சித்திகளும் கிடைக்கும்.
தாயை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தானங்கள் செய்தால் நற்பலன்களை பெறலாம்.
அடுத்து சித்ரா பௌர்ணமி வழிபாட்டின் முக்கிய அம்சமாக கிரிவலம் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ தலங்களில் கிரிவலம் நடந்தாலும் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம் தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதற்கு காரணம் திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவனாக கருதப்படுவது தான்.