வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?(How to clean the stomach?)
தொழிற்சாலையில் (Clean stomach) ஞாயிறு விடுமுறை. எல்லா இயந்திரத்திற்கும் ஞாயிறு ஒரு நாள் ஓய்வு. பிறந்தது முதல் இன்றுவரை நாம், நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கவில்லை. ஓய்வு கொடுக்கவில்லையென்றாலும் ஓவர் லோடு கொடுத்து கெடுத்து வைத்துள்ளோம்.
நம் உடல் ஆரோக்கியம் நம் வாயின் மூலம், வயிற்றுக்குள் எதை, எப்படி எந்த சமயத்தில் கொடுக்கிறோம் என்பதைச் சார்ந்தே உள்ளது. எனவே நம் வயிறு இரவு தூங்க வேண்டும். இதனால் நம் உடல் முழுக்க நல்ல சக்தி கிடைக்கும்.
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மை தான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது.
பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர்.
அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.அந்த வகையில் வயிற்றினை சுத்தம் செய்யும் இயற்கை முறைகள் பற்றி அறிவோம்.
நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு.
இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றர் சித்தர் பெருமக்கள்.
வயிற்றை எப்படிச் சுத்தமாய் வைத்திருப்பது? (How to keep the stomach clean?)
எளிய விதிகள்.யாரும் கடைபிடிக்கலாம்.
ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.
வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.
பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் தனது “ரவிமேகலை” நூலில் “பேதிகல்பம்” என்ற பெயரில் அருளியிருக்கிறார்.
சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே.
சோற்றுக் கற்றாழை மடல்களில் பெரிதாக உள்ள ஐந்து மடல்களை எடுத்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை (ஜெலி )எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடுமாம்.
பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டும்.
அப்படி அருந்தினால் வயிறு கழியும். அத்துடன் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களும் நீங்கும் என்கிறார்.
இதன் மூலம் வயிறு சுத்தமாகி (Clean stomach), அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.
விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய்
சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும்.
இந்த விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் , நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள்.