நலம் தரும் நாட்டுக் கோழி (Healthy Country Chicken)

 நலம் தரும் நாட்டுக் கோழி (Healthy Country Chicken) கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் கொண்டு  சிறந்த உணவாக உள்ளது.

முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள்,பிரசவித்த பெண்கள் நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது நாட்டுக்கோழிக்கறி மற்றும் நாட்டுக்கோழி சூப்.

உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது.

கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்கள்,இயற்கையில் கிடைப்பவைகளைக் கொறித்துத் தின்று விட்டு, உற்சாகமாக வாழும்  நாட்டுக் கோழி(Country Chicken) இறைச்சி சுவையும் ஆரோக்கியமும் தருபவை. 

காரணம் பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டு குறுகிய காலத்திலேயே விற்பனைக்கு தயாராக்கப்படுகின்றது.

இதனால் பல்வேறு நோய்களைத் தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறது பிராய்லர் கோழி.

நாட்டுக் கோழியின் ஆரோக்கிய பயன்கள் (Health benefits of country chicken)

சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி (Country Chicken) ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம்.

நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம். தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன.

சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி (Country Chicken) சிறந்த மருந்து. நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.

வெப்பம் கோழிக்கறி சாப்பிட்டால், சித்த ஆயுர்வேத முறைகள் குறிப்பிடும் வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது. உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் குணம் கோழிக்கறிக்கு உண்டு.

மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு.

 

கருங்கோழி இனம்

கருங்கோழி ,இது ஒரு வகை நாட்டுக்கோழி இனம். குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாத நோய் முதலியவை கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.

முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சுவையிலும் மருத்துவக் குணத்திலும் மேலோங்கி நிற்பது கருங்கோழியின் தனிச்சிறப்பு. கருங்கோழி, ‘கடக்நாத்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஓமம், பெருங்காயம், மிளகு, பிரப்பங்கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.

பிராய்லர் கோழி இறைச்சியால் ஏற்படும் பாதிப்புக்கள்

9 முதல் 11 வயதிலேயே  சிறுமிகள் பருவமடைவதற்கு வெள்ளைக் கோழியில் உள்ள ஹார்மோன் கலப்படங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

பதினொரு வயதுச் சிறுமி, இப்போது வளர்ந்த பெண்ணைப் போலத் தோற்றம் தருவதற்குப் பிராய்லர் கோழியும் ஒரு காரணம்.

பிராய்லர் கோழிகள் விரைவாக வளர்வதற்காகக் கொடுக்கப்படும் வேதிப்பொருட்கள், மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை உண்டாக்கக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடலின் இயக்கங்களைப் புரட்டிப்போடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவருகின்றன பிராய்லர் கோழி ரகங்கள்.

சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன.

நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும், உடல் எடையை அதிகரிக்கவும் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் `ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் விளைவால், கோழிகளிடையே நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகுகிறது.

அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை. 

நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் எப்படி?

இந்த நோய்களின் தாக்கம், அதைச் சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல நீள்கிறது.

ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள் வரை, நோயை உண்டாக்க சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள்(Broiler chicken) செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் விற்பனை செய்வது சாதாரணமாகிவிட்டது.

சிக்கன் 65, சிக்கன் டிக்கா, லாலி-பாப் சிக்கன், கிரில் சிக்கன், சபர்மா என நோய் உண்டாக்கும் பிராய்லர் கோழிகளைக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளுக்கு மயங்காமல், நாட்டுக் கோழி ரகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது.

சில இடங்களில், பல நாட்களாகக் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி (Frozen chicken) மூலம் தயாரிக்கப்படும் உணவு, பல உடல் உபாதைகளை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது.

சுவைக்காகவும் அலங்காரத்துக்காகவும் இறைச்சி உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளும் வேதிப்பொருட்களும் நம் உடல் ஆரோக்கியத்தை நிச்சயம் சீரழிக்கும்.

கோழி உணவுப் பிரியர்கள் பிராய்லர் கோழிகளைத் தவிர்த்து, நாட்டுக் கோழி (Country Chicken) இனங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *