பாரம்பரிய முறைப்படி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எப்படி?(Deepavali)
இன்று தீபாவளி திருநாள்(Deepavali). தீபாவளி திருநாள் அன்று நம் பாரம்பரிய முறைப்படி நம் வீட்டில் வழிபாட்டை கொண்டாட்டத்தை எப்படி மேற்கொள்வது, தீபாவளி தினத்தில் முன்னோர்களுடைய வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டாடுவோம்.
தீபாவளியை(Deepavali) தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.
தீபாவளி (Deepavali)பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள்.
கங்கா ஸ்நானம்
முதலில் தீபாவளி(Deepavali) என்றாலே காலையில் நாம் செய்ய வேண்டிய விஷயம் கங்கா ஸ்நானம். தீபாவளி அன்று அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.
பாவங்களுக்கு விமோசனம் தரும் கங்காதேவி, தீபாவளி தினத்தன்று நம் எல்லோரது வீட்டிலும் இருக்கக்கூடிய வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் வாசம் செய்கின்றாள் என்பது ஐதீகம்.
தீபாவளி தினத்தன்று எல்லோரும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து நீராடி கொள்ளவேண்டும்.
அமாவாசை தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் இருக்கும். தீபாவளி தினத்தோடு சேர்ந்து வரும் அமாவாசை என்பதால் இந்த நாளில் எந்த தோஷமும் கிடையாது. அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
பூஜை செய்யும் நேரம்
முடிந்தவரை நாளை காலை 5.30 க்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.
காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்த பின்பு பூஜை அறையை அலங்கரித்து வைத்து, பூஜை அறையில் குறைந்தது ஐந்து தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதிகபட்சம் உங்களுடைய விருப்பம் எத்தனை தீபங்கள் வேண்டுமென்றாலும் ஒற்றைப்படையில் ஏற்றிக் கொள்ளலாம்.
காரணம் தீப ஒளியில் கொண்டாடுவதுதான் தீபாவளி. தீபங்களை ஏற்றி வைத்து விட்டு சுவாமிக்கு முன்பு வாழை இலையை விரித்து தீபாவளிக்கு நீங்கள் செய்த இனிப்பு பலகாரங்கள் அத்தனையையும் அந்த இலையில் வைத்து, புத்தாடைகளை வைத்து, புது துணிகளை வைத்து குல தெய்வத்தையும் உங்கள் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்யவேண்டும்.
நிறைய பேருக்கு தீபாவளி பண்டிகையின் போது முன்னோர்களின் வழிபாட்டை எப்படி செய்வது என்பதில் சந்தேகம் இருக்கின்றது. காலை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது சேர்த்து முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வது மிக மிக நல்லது.
இந்த அமாவாசை தினத்தில் அவரவர் வீட்டு வழக்கப்படி தர்ப்பணம் கொடுக்கும் விஷயத்தையும் மறந்துவிடக் கூடாது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும்.
பூஜையறையில் பூஜையை நிறைவு செய்துவிட்டு நீங்கள் இறைவனுக்காக தீபாவளி பலகாரங்கள் எல்லாவற்றையும் முதலில் காகத்துக்கு வைத்துவிட்டு, அதன் பின்பு நீங்கள் சாப்பிட வேண்டும்.
கேதார கௌரி நோன்பு
சில வீடுகளில் நோன்பு இருக்கும் பழக்கம் இருக்கும். சில வீடுகளில் நோன்பு இருக்கக்கூடிய வழக்கம் இருக்காது. நோன்பு என்பது அவரவர் வீட்டு வழக்கப்படி பாரம்பரியமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு விஷயம். அவரவர் வீட்டு வழக்கப்படி நோன்பை கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த நோன்பின் தாத்பரியம் என்ன என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த தீபாவளி தினத்தன்று, அதாவது ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படும் இந்த கௌரி விரதம் சிவபெருமானை நினைத்து இருக்கக்கூடிய விதமாக சொல்லப்பட்டுள்ளது.
சக்திதேவியை தான் இந்த இடத்தில் கௌரி என்ற நாமத்தை கொண்டு நாம் அழைக்கின்றோம். சிவபெருமானுடன் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தவம் இருந்து விரதம் மேற்கொண்டு, ‘சிவனில் பாதி பார்வதி தேவி’ என்ற வரப்பினை பெற்ற நாள் தான் இந்த ஐப்பசி மாத அமாவாசை நாள்.
ஆக கணவனும் மனைவியும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கேதார கௌரி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
பிரிந்திருக்கும் கணவன் மனைவி இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. சிலபேர் இந்த தினத்தில் தங்கள் வீட்டில் கன்னி தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள்.
லட்சுமி குபேர பூஜை
குபேரருக்கு பண கஷ்டம் வந்தபோது லட்சுமி தேவியின் கைகளால் வரத்தினை வாங்கிய நாள் இந்த ஐப்பசி மாத அமாவாசை தினம். இந்த நாளில் நாம் லட்சுமி தேவியை வணங்கினால் நமக்கும் குபேர சம்பத்து கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு வீட்டில் லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். லட்சுமி தேவியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தீபங்கள் ஏற்றி வைத்து வணங்கலாம்.
வீட்டில் குபேர தீபம் இருந்தால், குபேரருக்கு முன்பு குபேர தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குபேரனுக்கு முன்பாக ஒரு தாம்பூலத்தட்டில் சில்லரை காசுகளை பரப்பி வைக்கவும்.
பாலினால் செய்யப்பட்ட இனிப்பு நிவேதியத்தினை லட்சுமி தாயாருக்கு வைத்து மனதார உங்கள் பணப் பிரச்சினை தீரவேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும்.
மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற்று விடலாம். பத்து நிமிடங்கள் மனதார அமர்ந்து மகாலக்ஷ்மியை நாளை மாலை 6 மணிக்கு வழிபாடு செய்யுங்கள்.
அந்த லட்சுமிதேவி மனப்பூர்வமாக உங்களுக்கு ஆசீர்வாதத்தை தந்து விடுவாள். பெரும்பாலும் இந்த லட்சுமி குபேர பூஜை வடமாநிலத்தவர்கள் விசேஷமாகக் கொண்டாடுவார்கள்.
இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன.
தீபாவளி பண்டிகை தாத்பரியம் ( Story of Deepavali)
நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும் நராகாசுரன் கதை.
நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன்.
அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது.
நரன் என்றால் மனிதன். மனிதனாகவும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அதுவே நரகாசுரன் என்றானது.
இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார்.
ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான்.
எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார்.
இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.
சத்தியபாமா பூமாதேவியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.
அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.
தீபாவளி பற்றிய இன்னொரு கதை ( Story of Deepavali)
பொதுவாக தீபாவளி (Deepavali)ஐப்பசி மாதங்களில் வரும். ஆனால் ஒருசில வருடங்களில் இந்த மாதத்தில் மாற்றம் நடப்பது உண்டு. ஐப்பசி இல்லை என்றால் புரட்டாசி.
ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார்.
இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீப வழிபாடு தீபாவளி என நாம் கொள்ளலாம்.
மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம்.
புராணங்கள் இப்படிச் சொல்ல, தீபாவளிப் பண்டிகை எப்போதிருந்து கடைப்பிடிக்கப்பட்டது? ஏன் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி வேறு சில விளக்கங்களும் சொல்லப்படுகின்றன.
கி.பி.ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இந்தியாவில் இருந்திருப்பதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
கி.பி. 1117ல் வாழ்ந்த சாளுக்கிய திரும்புவன மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.
கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராத்தி நூலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
பொதுவாக ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். இல்லம் தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம். இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம்.
அந்தக் காலகட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
பண்டையகால தீபாவளி (Deepavali) கொண்டாட்டம்
தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூடக் கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.
பழங்கால இந்திய மன்னர்கள் இந்துக்களாக இருந்தாலும் முகலாயர்களாக இருந்தாலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பல சலுகைகளையும் பரிசுப் பொருட்களையும் அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
அரசனின் தர்பாருக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு அடிப்படை தேவைகளுக்கு அடித்தளம் போட்டு தரும் நாளாக பண்டிகைகள் திகழ்ந்துள்ளன.
முகாலய மன்னர்களில் சிலர் தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளன.
வணிக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம்பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இப்படி பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி. சீக்கியர்களும்,சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
1577ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடகின்றனர். சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
இப்போது கூட இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், மியான்மர்,சிங்கப்பூர், மலேசியா,பிஜி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த தீபாவளியும் அமாவாசை திதியும் சேர்ந்து வருகின்றது. நீங்கள் நோன்பு எடுக்கும் பழக்கம் இருந்தாலும் சரி, பழக்கமில்லை என்றாலும் சரி, உங்கள் வீட்டில் நாளை அசைவம் சமைக்கக் கூடாது.
எந்த தீபாவளி அன்று அமாவாசை திதி சேர்ந்து வந்தாலும் அந்த தினத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது.
தீபாவளி (Deepavali) என்றால் பட்டாசு இல்லாமலா?
மாலை நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து இந்த தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!