நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி? (Diabetic foot ulcers)
காலில் புண்கள் (Diabetic foot ulcers) ஏற்படுவது மற்றவர்களையும் விட நீரிழிவு நோயாளர்களுக்கு அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட.
நீரிழிவினால் கால்புண்கள் ஏன் ஏற்படுகின்றன?(Why Diabetes Causes Foot Ulcers)
குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில்புண்கள் ஏற்படுகி்ன்றன.
- அதோடு இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். சிலவேளைகளில் விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது.
- மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிவாளர்களுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
- உணர்வு குறைவு என்பதால் புண்கள் பெரிதாகும் வரை தெரிவதும் இல்லை.
வெறும் காலுடன்நடந்து திரிவதால் காலில் ஏதாவது குத்திக் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உதாரணமாக் கோயிலுக்கு கும்பிடப் போவதைக்குறிப்பிடலாம்.
காலில் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள்
- குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவும்.
- உங்கள் காலுக்கு பொருத்தமான காலணிகளையும் சொக்ஸ்களையும் அணியவும்
- காலணிகள் அணியாது வீட்டு முற்றம், வீதி, காணி எங்கும் காலெடுத்து வைக்காதீர்கள்
- தினமும் உங்கள் பாதங்களை ஒழுங்காக அவதானியுங்கள். உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போல அவதானித்தால் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
- நகம் வெட்டும்போது ஓரங்களை வளைத்து வெட்டாது, நேராகவும், அருகில் உள்ள சருமத்தைவெட்டாதபடியும் மிகுந்த அவதானம் தேவை. குளித்த பின் நகங்கள் மிருதுவாக இருக்கும் நேரத்தில் வெட்ட வேண்டும்.
- கால்களை முகத்தை பராமரிப்பது போல பாதத்தை பராமரிக்க வேண்டும்.அதாவது அதிக கவனம் கொள்ள வேண்டும்.
- புகைப்பதையும், மது அருந்துவதையும் தவிர்க்கவேண்டும்.
இரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாக இருக்கும் பல நீரிழிவு நோயாளர்களுக்கு புண்கள் சுலபமாகக் குணமாகிவிடுகின்றன. ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவை மிக அக்கறையோடு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பலரின் புண்கள் மாதக்கணக்கில் மாறாது தொல்லை கொடுக்கன்றன.
இது ஏன்?
இரத்தத்தில் சீனி அதிகரிப்பதால் புண்கள் ஆறாதிருக்கும் நிலை உடனடியாக ஏற்படுவதில்லை. அது தொடர்ந்து அதிகரித்திருக்கும் போது, உடலில் படிப்படியாக தோன்றும் பல்வேறு பாதிப்புகளால் தான் புண்கள் ஆறாத நிலை ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளர்களின் புண்கள் காயாதிருப்பதற்குரிய காரணங்கள் (Reasons why diabetic ulcers do not heal)
நீரிழிவு நோயாளர்களின் புண்கள் காயாதிருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம்.
முதலாவது கால்கள் நீரிழிவு நோய் காரணமாக மரத்துப் போவதாகும். நரம்புகள் பாதிப்புறுவதால் அவற்றின் செயற்திறன் குறைந்து கால்களில் உணர்வு குறைந்து போகும். ஆரம்ப கட்டத்தில் நோயளர்கள் இதை உணர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் நாட் செல்லச் செல்ல கால்களில் விறைத்த உணர்வு தெரியவரும். நடக்கும் போது மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும். பின்பு செருப்பு கழன்றால் கூடத் தெரியாத நிலை ஏற்படலாம். முள்ளு அல்லது ஆணி குத்தினாலோ, செருப்பு வெட்டினாலோ, தார் வீதி சுட்டுக் கொப்பளிப்பதோ தெரிவதில்லை.கால்கள் மரத்திருப்பதால் ஏதாவது காயம் ஏற்படும்போது, வலி தெரியாது. அதை உணராது, மேலும் மேலும் அழுத்தி நடப்பதால் புண்கள் மாறாதிருப்பதுடன் பெருகவும் செய்யும்.
இரண்டாவதாக நீரிழிவு நோய் காரணமாக காலிலுள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய இரத்தம் பாய்ச்சப்படுவதில்லை.
எனவே காயம் அல்லது புண் உண்டாகும் போது அவற்றிக்கு போதிய இரத்தம் கிடைக்காது, இதனால் திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் புண்கள் ஆறுவதற்கும் தேவையான ஒட்சிசன் கிடைக்காது போய்விடுகிறது.
மூன்றாவதாக விரைவில் கிருமிகள் தொற்றுவதாகும். முதல் கூறிய இரண்டு காரணங்களாலும் நீரிழிவு நோயாளர்களுக்கு புண்களில் கிருமி தொற்றுவதும், பெருகுவதும் அதிகம். இதனால் புண்கள் விரைவில் ஆறுவதில்லை. எனவே நீரிழிவு நோயுள்ளவர்கள் தமது இரத்த சீனியின் அளவை ஆரம்பம் முதல் எப்பொழுதும் சரியான அளவில் பேணுவது அவசியம். அதனால் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதும் அவற்றை இலகுவாக குணமாக்குவதும் சாத்தியமாகும்.
ஆனால் நாட்பட்ட புண்கள் ஏற்பட்ட பின்தான் நீரிழிவைக் கட்டுப்படுத்த முயல்வதாவது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது தான்.