தொல்லை தரும் காது இரைச்சல் (Annoying ear noise)
ஏதோவொரு இரைச்சல் (Ear noise) காதில் எழுகிறது. அக்கம் பக்கத்தில் யாரும் பேசாதபோதும், டிவி கரகரக்காத போதும், வேறு எந்த வித ஓசையுமின்றி நிசப்பதமாக இருந்தபோதும் காதில் ஏதோ சத்தம் கேட்கிறது.
மருத்துவத்தில் இதனை ரினிட்டஸ் (Tinnitus) என்பார்கள். போலி ஒலி எனச் சொல்வதுமுண்டு. கரகரப்பது போலவோ, இரைவது போலவோ, ரீங்காரமிடுவது போல அல்லது வேறு ஏதோ ஓசை போலவோ கேட்கும்.
வெளியிலிருந்து வரும் ஓசையாக அல்லாமல், உள்ளிருந்து எழுவது தான் காது இரைச்சல்(Annoying ear noise). இது பெரும்பாலும் ஆபத்தான நோயல்ல. இருந்தபோதும் பொறுக்க முடியாத தொந்தரவாக இருக்கும்.
அதிகமானோருக்கு சிலநேரங்களில் மட்டுமே இவ்வாறு இரைச்சல் ஏற்படுதுண்டு. அனால் சிலவேளைகளில் மிகக் கடுமையான காது இரைச்சல் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்களது நாளந்தச் செயற்பாடுகள், தொழில், நித்திரை யாவுமே பாதிப்படைகிறதாகத் தெரிகிறது. இதனால் பலர் மனவிரக்திக்கு ஆளாவதும் உண்டு.
பொதுவாக மூப்படையும் போது நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் காது இரைச்சல் வயதானவர்களில் அதிகமாகத் தோன்றுவதுண்டு.
இதனால் ஒருவருக்கு தனது வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஏதோ ஒன்று துன்புறுத்திக் கொண்டிருப்பதாக உணர முடியும். வழமையாக இருப்பது போல அல்லாமல் அமைதியின்றி நிலை கொள்ளாது தவிக்க நேரிடும்.
இது மற்றவர்களால் புரிந்து ஆறுதல் கொடுக்கக் கூடிய நோயல்ல. காய்ச்சலோ, வலியோ, புண்ணோ எதுவும் இருக்காது.
காது இரைச்சல் ஏன் ஏற்படுகிறது (Why ear noise occurs)
காது இரைச்சல் என்பது ஒரு குறிப்பிட்ட உறுப்பிலிருந்து எழுவதில்லை. அது ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வெளிக்காது, நடுக்காது, உட்காது அல்லது காதுக்கு அப்பால், மூளை நரம்புகளிலிருந்தும் ஏற்படலாம்.
சிலருக்கு இது இயல்பானதாகவும் பாதிப்பை ஏற்படுத்தாததாகவும் இருக்கலாம்.
நிசப்பதமான அறைக்குள் நுழையும் போது அல்லது புறச் சத்தங்கள் குறைவாக இருக்கும் போது மட்டும் அவரின் கவனத்தை ஈர்க்கக் கூடும்.
வேறு சிலருக்கு காதிற்குள் குடுமி, அல்லது வெளிப்பொருள் காதை அடைத்திருப்பதால் புறச் சத்தங்கள் குறைவாகவே கேட்பதால் காதின் இரைச்சல் கவனத்தை ஈர்ப்பது அதிகமாகலாம்.
காதில் கிருமித் தொற்று, அதனால் நடுக் காதினுள் நீர் சேர்தல், செவிப்பறை எலும்புகளில் நோய், போன்றவையும் ஏற்படுத்தலாம்.
காதுக்கான நரம்புகளில் ஏற்படும் நுண்ணிய சேதங்கள் மற்றொரு காரணமாகும்.
கடுமையான சத்தங்களுக்கு அதிகமாக முகங்கொடுப்பது முக்கிய காரணமாக மாறிவருகிறது. என்ஜின் ஒலிகள், உச்சஸ்தாயி வாத்திய ஒலிகள், ஆகாய விமான ஒலிகள், துப்பாக்கி வெடிச் சத்தங்கள் போன்றவற்றை தொடர்ந்து கேட்பதாலும் இது நேர்கிறது.
அஸ்பிரின் போன்ற சில மருந்துகளும் காதிரைச்சலை ஏற்படுத்துவதுண்டு.
அதேபோல உட் காதில் ஏற்படுகிற மெனியர்ஸ் (Meniere’s syndrome) நோயும் காரணமாகலாம்.
மூளைக்குள் தோன்றிய கட்டியால் இது இருக்குமா எனப் பலரும் பயப்படுகிற போதும், மிக அரிதாகவே அவ்வாறு ஏற்படுவதுண்டு.
காதில் இரைச்சலானது தொடர்ந்து இருக்கிறதா அல்லது விட்டு விட்டு வருகிறதா, தலைச்சுற்றும் சேர்ந்திருக்கிறதா, வாந்தி வருகிறதா, தலைச்சுற்றுடன் காதும் மந்தமாக இருக்கிறதா போன்ற விடயங்களை மருத்துவர் அறிய விரும்புவார். இவை நோய்க்கான காரணத்தைக் கண்டறிய அவருக்கு உதவும்.
காது இரைச்சலை தவிர்க்க என்ன செய்யலாம்( To avoid tinnitus)
அடிக்கடி கோப்பி குடிப்பவராயின் அதைக் குறையுங்கள். கொக்கோகோலா போன்ற பானங்களும் கூடாது. புகைத்தலை நிறுத்துவது நிறைய உதவும். உணவில் உப்பைக் குறைப்பதும் உதவலாம்.
சிலரது குருதியில் Zinc ன் அளவு குறைவாக இருப்பதுண்டு. அத்தகையவர்களுக்கு Zinc மாத்திரைகள் உதவலாம்.
காது குடைவது கூடாது. துணி, இயர் பட்ஸ் போட்டு சுத்தம் செய்ய முனையும்போது காதுக் குடுமி மேலும் உட்சென்று செவிப்பறையுடன் அழுத்துப்படும். இதனால் இரைச்சல் ஏற்படும்.
உங்கள் வேலைத்தளம் அதீத இரைச்சல் உடையதாயின் அச் சத்தங்கள் உங்கள் காதுகளைப் பாதிக்காது பாதுகாக்க வேண்டும். அத் தருணங்களில் அதைக் குறைப்பதற்கான இயர் பிளக் உபயோகிப்பது நல்லது.
இசை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், ஏன் பல வணக்கச் ஸ்தலங்களும் அதீத ஓசைகளால் சூழலை மாசுபடுத்துகின்றன.
இவை உங்கள் காதுகளையும் பாதிக்கும். அரசாங்கங்களும் பொலீசும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பதால் எமது காதுகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் வீட்டிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கலாம்.
ஹெயர் ரையர், நீரியக்கும் இயந்திரம், மிக்ஸிகள் போன்ற உபகரணங்களுடன் உங்கள் ரேடியோ, தொலைக் காட்சி, மொபைல் போன்றவையும் அதீத அதிர்வுகளை ஏற்படுத்திக் காதுகளைப் பாதித்து இரைச்சலை ஏற்படுத்தலாம்.
உயர் இரத்த அழுத்தம் மற்றொரு காரணம்.எனவே அவற்றிற்காக மருத்துவர் தரும் மருந்துகளை வேளை தவறாது உட்கொள்வதும் அவசியம்.
மனப்பதற்றம் அதிகமானால் காது இரைச்சலும் அதிகமாகும். எனவே மனதை அலட்டிக் கொள்ளாதீர்கள். காதில் இரைச்சல் தொல்லை கொடுக்கும் போது மனம் அமைதியாக இருக்க முடியாது என்பது உண்மைதான்.
ஆயினும் அந்த இரைச்சலிலேயே உங்கள் மனத்தை ஆழச் செலுத்தினால் மனம் அந்தரித்து நோய் அதிகரிப்பதாகத் தோன்றும்.
வெளிச் சத்தங்கள் குறைந்திருக்கும்போது காது இரைச்சல் அதிகமாகத் தோன்றும். தூங்கச் செல்லும் போது வீடு முழுவதும் துயிலில் ஆழ்ந்திருக்க சூழலே மயான அமைதியில் இருக்கும்போது இரைச்சலின் தொல்லை வெறுக்க வைப்பதாக இருக்கும்.
ஒரு கடிகாரத்தை அருகில் வைப்பதாலோ, மின்விசிறியைச் சுழலவிடுவதாலோ அன்றி ரேடியோவை மெல்லிய தொனியில் போடுவதாலோ, காதின் இரைச்சலை இவற்றால் மேவலாம்.
உடற் பயிற்சி, போதிய ஓய்வு, சோர்வடையாதிருத்தல் போன்ற வாழ்க்கை நடைமுறைகளும் இரைச்சலின் வேகத்தைத் தணிக்கும்.
காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் மருத்துவரைத்தான் நாட வேண்டியிருக்கும்.