குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க (Family life)
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் (Family life) இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப்படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும் குடும்பம் தான்.
குடும்ப அமைப்பு (Family life) என்பது பொதுவாக நாம் நினைப்பது போன்று சாதாரண அமைப்பல்ல. அது மனித இனத்தை வழிநடத்தும் உயர்ந்த பல்கலைக்கழகம். எத்தனையோ புத்தகங்கள் சேர்ந்து சொல்லிக்கொடுக்க முடியாத கல்வியை அது எளிதாகப் புகட்டுகிறது.
தாய், தகப்பன், பிள்ளைகள் ஆகியோர் ஒரு கூரைக்குக் கீழ் வாழ்வதால் மட்டுமே அதைக் குடும்பம் என்று ஆகிவிடாது. மாறாக, இனிய உறவுகளின் சங்கமமே குடும்பம் ஆகும்.
குடும்பம் (Family life) என்கிற அமைப்பு கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு.
குடும்பம் என்றால் என்ன?
குடும்ப தலைமை என்பது சரியான பாதுகாப்பு ஏற்பாடு என்பதே உண்மை. குடும்ப தலைமை என்பது, அரசு தலைவர் போல, அதிக அதிகாரம் உள்ள பதவி அல்ல. அதிக பொறுப்பு உள்ள பதவி என்பதே பொருள்.
அடக்கு முறைக்கோ, அடிமைத்தனத்துக்கோ குடும்பத்தில் இடமில்லை. ஒருவரை ஒருவர் மதித்து, அவர்களது உணர்வுகளை போற்றி, நம்பிக்கை காத்து அரவணைப்புடன் வாழ்வதே சிறந்த குடும்ப முறையாகும்.
மனிதனுக்குக் குடும்ப அமைப்பு மிகவும் முக்கியமானது. குடும்ப அமைப்பை அறவே இழந்த பிள்ளைகளும் சீரான குடும்பப் பின்னணியற்ற பிள்ளைகளுமே பெரும்பாலும் சிறார் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
ஒரு அன்பான குடும்பம் பற்றிய உலகப்புகழ் பெற்ற சிறுகதை (Story about a loving family)
கணவனிடம் ‘வாட்ச்’ இருந்தது. அதற்கு தங்கத்தில் செயின் வாங்க கணவனுக்கு ஆசை. ஆனால், பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகான கூந்தல். அதை முடித்து வைக்க, ‘தங்க கிளிப்’ வாங்க ஆசை. ஆனால், வசதியில்லை.
முதல் திருமண ஆண்டுவிழாவில், இந்த வாட்சை வைத்து என்ன செய்ய என்று விற்று விட்டு, மனைவி கூந்தலுக்கு தங்க கிளிப் வாங்கி வந்தான் கணவன்.
ஆனால், தன் அழகான கூந்தலை வெட்டி, விற்று விட்டு கணவன் வாட்சுக்கு செயின் வாங்கி வந்திருந்தாள் மனைவி. ஒருவருக்காக மற்றவர், கஷ்டப்பட தயாராகும் போது அங்கு அன்பு வலுவடைகிறது.
நாகரிகத்தின் போக்கில் போவதாய் உலகம் நினைத்துக் கொண்டு நிம்மதியை இழந்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில் தமிழகத்தின் குடும்பங்களில் நிறைவு தவழ்ந்து கொண்டு இருக்கிறது.
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச் சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப்பயணம் எவ்வளவு சுவாரஸ்யமானது!
இனிய உறவுகள்
கணவன்- மனைவிக் கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். பெற்றோர்-பிள்ளைகளுக் கிடையிலான பாசம் பலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தமக்கிடையே ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும்.
இதையே நாம் இனிய உறவுகள் என்போம். குடும்பம் என்பது ஒரு தனிச்சொல்லாயினும் அதைப் பிரித்துப் பார்க்கும் போது அதில் ‘’கொடு இன்பம்’’ என்கின்ற தொனி ஒலிக்கிறது. எனவே, இன்பத்திற்குப் பஞ்சமில்லாத உறவுகளின் சங்கமமே குடும்பம் எனப்படும்.
குடும்பத்தை எதற்காக இயற்கையான அமைப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அது காலம் காலமாக இருக்கிறது. அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்தே குடும்பம் இருந்து கொண்டிருக்கிறது.
முதல் மனிதரின் காலம் தொட்டு இருந்துவரும் தொன்மையான குடும்ப அமைப்பை அழியாமலும் சிதையாமலும் காப்பாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
ஒரு குறிப்பட்ட வயதில் நாம் வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறபோது நிறைவாயிருந்தால் நாம் வாழ்ந்தது சொர்க்கத்தில் அல்லவா?
இன்றைக்கு பல குடும்பங்களிலும் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு பெற்றோர்களுக்கு நேரமில்லை. வேலைப் பளுவும் தொலைக்காட்சியும் நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
பொருளாதார விஷயங்களினால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை. ஒரே படுக்கையில் தம்பதியினர் படுத்தாலும் அவர்களது மனமோ பல மைல்கள் தூரம் அளவுக்கு இடைவெளி கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய குடும்பங்களின் சராசரி காட்சி!.
அதிகமான விவாகரத்துக்கள் ஏற்பட மனம் விட்டு பேசாததே காரணம்.
கூட்டு குடும்ப முறை (Joint family system)
அந்த காலத்தில் ஒரு குடும்பம் என எடுத்து கொண்டால் மிக பெரிய அளவில் இருக்கும். அனைத்து வகை உறவுகளையும் அங்கு பார்க்கலாம்.
அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்தனர். குடும்பத்தில் தற்போது எண்ணிக்கை குறைந்து ஒரு குடும்பம் என்பது 4 பேர் மட்டும் என சாத்தியமாகி விட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும் கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.
மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது.
தமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்கு காரணம். கூட்டு குடும்ப வாழ்க்கையும் அங்கு உருவான அன்பும் தான்.
பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம். அப்படி உறவுகளைப் போற்றும் சந்தோஷ குடும்பங்களின் அனுபவங்களை, பகிர்ந்து கொள்வோம்.
செல்வத்தின் பின் செல்வதே வாழ்வெனத் தவறாகப் புரிந்து இருக்கிறோம். எல்லாவற்றையும் பணத்தின் கண்களால் பார்ப்பது குடும்ப அமைப்பின் நிம்மதியைக் குலைத்துவிடும்.
எப்போதும் குறைகாணும் குடும்ப தலைமை மகிழ்ச்சி தராது. குறைகள் உண்மை என்றால், அதை சரி செய்து கொண்டால் முன்னேற முடியும் என்று அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும்.
எதிர்தரப்பில் குறை இருந்தால் கூட, நமக்கு அவர்கள் மீது அன்பு இருந்தால், குறை தெரியாது.குறையே இருந்தாலும் சொல்ல மனம் வராது.
அதை போல குடும்பத்திலும், கணவன், மனைவி உறவில் சண்டை வந்தால், அந்த வலி குடும்பத்திற்குத்தான், என்று நினைத்து, குடும்பத்தில் சண்டையை விடுத்து, வாழ்வில் சுகம் காண விழைய வேண்டும்.
குடும்ப வாழ்வு நிலைக்க (Family life)
குடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மதிக்க பழகுங்கள். மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுவோம்.
- தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாக பேசுகள். மனம் திறந்து பாராட்டுவோம்.
- சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு கை, கால் வைத்து அழகுபடுத்த வேண்டாம். எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம் நேரடியாக பேசுவோம்.
- தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேண்டாம். பதிலடி கொடுக்க முயற்சி செய்வதை தவிர்த்து வாழ்க்கையின் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுவோம்.
- நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதனை மனதில் கொண்டு சிரித்தமுகத்துடன் பேசி பழகுவோம்.
- உங்கள் இஷ்டம் போல் உங்கள் குடும்பத்தவர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணம் வேண்டாம். மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுவோம்.
- குழந்தைகளுடன் சந்தோஷமாக பேசி, விளையாடி இருபோம்.குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசிப்போம். சேட்டை அதிகமானால் கண்டிக்க தவறாதீர்கள்.
- உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும். முடிந்த வரை குடும்ப ஆரோக்கியத்தை காப்போம்.
- எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்கு பிடித்த காரியங்களில் ஈடுபடுங்கள்.உடலுக்கும் மனதுக்கும் ஒய்வு கொடுப்போம்.
- குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் பொழுதோ அல்லது டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவுகளைதவிர்த்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்திற்காக நேரம் அவசியம்
உறுதியான குடும்ப பிணைப்பை ஏற்படுத்துவது, பெற்றோர்களாகிய இருவரது கடமையாகும். பெற்றோர்களுக்கு, சிறந்த ஒழுக்க நெறிகளோடு குழந்தைகளை வளர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
சில சமயங்களில், நம்மால் உலகத்தை திருத்த முடியாமல் போகலாம். ஆனால், நம் குழந்தைகளின் மனதில், ஒரு ஆழமான நல்ல தாக்கத்தை உண்டாக்க முடியும்.
ஒரு குழந்தை, சமுதாயத்தில் முழுமையானவனாக மாறி, வெளியில் நல் முறையில் காட்சி தந்தால், அதற்கு முழு காரணம், தாய் தந்தையே.
ஒரு பிள்ளை, பிற்காலத்தில் சிறந்த தொழில் அதிபராகவோ, பிறர் போற்றும் அளவுக்கு காணப்படுகிறார் என்றால், அதற்கு முழு காரணம், தகப்பன் ஆகும்.
எனவே, குடும்பம் என்ற அமைப்பில், தாய், தகப்பன், பிள்ளைகளுக்கு இடையே உள்ள பிணைப்பு முக்கியமானது.
இந்த குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், உங்கள் குழந்தைகளோடு செலவழிக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட காலமா வரை தான் சிறியவர்களாக இருக்கிறார்கள்.
அப்போது நீங்கள் செய்ய வேண்டியதை செய்ய தவறி விட்டால், பிறகு இரண்டாம் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது.
எனவே, சிறிது நேரம் கிடைத்தால் கூட, உங்கள் குடும்பத்தோடு செலவழிக்க பாருங்கள். அதை விடுத்து, இருக்கும் சிறிது நேரத்தில், பிள்ளைகளை கண்டிப்பது , திருத்துவது, கட்டுப்படுத்துவது போன்ற காரியங்களை மட்டுமே செய்யாதீர்கள்.
அதற்கு மாறாக அவர்களோடு, அன்போடு நல்ல உறவை நாம் ஏற்படுத்திக்கொண்டால், குழந்தைகளும் நமக்காக பிற்காலத்தில் எதையும் செய்யதுணிவார்கள். நம்மீது பற்றுதலும், பிரியமும் அதிகமாக காணப்படும்.
அன்பாய் இருப்போம் அனைவர் மீதும்! சுடுசொற்களை யார் மீதும் பாய்ச்சாதிருந்தால் உறவுகள் இனிக்கும். குடும்பம் சிறக்கும்.