துரித உணவும் துரிதமான வாழ்வும் (Fast food lifestyle)
துரித உணவுகள் (Fast food lifestyle) என்றால் புரதம், விட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாது மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் என்ற வரையறைக்குள் அடங்கும்.
இந்த துரித உணவுகளில்(Fast food lifestyle) சுவை தான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இல்லாமல் இருப்பதோடு உடலுக்கு கெடுதியான பொருட்களும் உள்ளன.
அதாவது இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையே விளையும்.
துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்) போன்றவை ஆரோக்கியமில்லா உணவுகளினால் வருகின்றன.
பொதுவாக துரித உணவுகளில் மிக அதிகமான அளவில் கொழுப்புச் சத்தும் சர்க்கரையுமே உள்ளன. பேகர், பிசா மற்றும் மென்பானங்கள் இவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.
இந்த உணவு வகைகளில் சத்தில்லாமல் ஊளைச் சதையே பெருகும். அதிகமானோர் உடற்பருமனோடு சத்தற்ற நோயாளிகளாக நீரழிவு நோயுடன் இருப்பதற்கு இந்த தவறான உணவு பழக்கமே காரணம்.
இன்றைய நவநாகரீக உலகத்தில் துரித உணவுகள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கின்றன. மக்களால் அதிகம் விரும்பப்பட்டும் வருகின்றன. குழந்தைகளின் உணவில் பிரதான இடத்தை இத்துரித உணவுகள் பெறுகின்றன.
துரித உணவுகள் எனப்படுபவை புரதம், விற்றமின், கனிமச்சத்துக்கள் அளவு குறைவாக உள்ள அல்லது அறவே இல்லாத உணவு பொருட்கள் துரித உணவுகள் எனப்படுகின்றன.
இவை வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் உடலை பாதிக்கும் சுவையூட்டிகள் நிறமூட்டிகளை உள்ளடக்கிய உணவாக இது காணப்படுகின்றன.
இவ்வுணவை உண்பதால் மனிதனுக்கு கேடு என்பதை அறிந்தும் அறியாமலும் அன்றாடம் ஏராளமான துரித உணவுகளை நாமும் உண்ண தான் செய்கிறோம்.
துரித உணவுகள் (Fast food lifestyle)
துரித உணவுகள் நாவை கவரும் அதிக சுவையுடையவையாக இருக்கும். குறுகிய நேரத்தில் தயாரிக்கப்பட்டு விரைவாக வாங்கி உண்ண கூடியவகையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.
உணவகங்களில் அதிகம் சந்தைப்படுத்தப்படுவதும் உயர்வான விலையும் அதிகம் மக்களால் விரும்பி உண்ணப்படுவதனால் துரித உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் பிரபல்யமான வர்த்தக நாமங்களாக சந்தையில் காணப்படுகின்றன.
இவை அதிகம் மேற்கத்தைய நாடுகளில் இருந்து தோன்றி எமது நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டவையாகும். இவ் உணவுகள் நமது தென்னாசிய பிராந்தியத்தில் அதிக கிராக்கி உடையவையாக காணப்படுகிறது.
துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் (Fast food lifestyle )
துரித உணவுகள் நாவுக்கு சுவையாகவும் இலகுவாக வீடுகளுக்கே தேடி கொண்டுவந்து தரப்படுகின்றன. தொலைபேசி அழைப்புக்கள் அல்லது அலைபேசி செயலிகள் மூலம் வீட்டில் இருந்தே துரித உணவுகளை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இன்றைக்கு வளர்ந்துவிட்டது.
சிறப்பாக நாம் நோய்களை இலகுவாக வீட்டுக்கு அழைக்கிறோம் என்பதே உண்மையாகும். துரித உணவுகள் அதிகம் உடல்நல குறைவுகளை ஏற்படுத்த கூடியவையாகும்.
துரித உணவுகளில் அதிக கொழுப்பு, அதிக உப்பு, அதிக சீனி மற்றும் உடலுக்கு தகாத வாசனையூட்டிகள், சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் பாவிக்கப்படுவதனாலும் ஊட்டசத்துக்கள் குறைவாக காணப்படுவதனாலும் இவை அதிக நோய்களை உண்டாக்குகின்றன.
இவ்உணவுகளால் உடல் பருமன் அதிகரித்தல், கொலஸ்ரோல் எனப்படும் குருதி அமுக்க நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட்டு மனிதன் துரிதமாக உயிரிழக்க இத்துரித உணவுகள் காரணமாக அமைகின்றன.
இவ்வுணவுகளை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பதனால் இவ்வுணவுகளே பிரதான உணவாக வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு என ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட துரித உணவுகள் வழிவகுக்கின்றன.
கூடவே மருந்தகங்களும் நம் வாழ்விடங்களைச் சுற்றி அதிகரித்திருப்பதையும் கவனித்திருக்கலாம். துரித உணவுக் கடைகள் அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகள் பெருகி, மருந்துகளின் வியாபாரமும் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது என்பது மறைமுகமான உண்மை.
பெருநகரங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நாமும் நமது உணவு பழக்கங்களை மாற்றி வாரம் மூன்று அல்லது நான்கு வேளையாவது பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு கலாசார உணவுகளை உண்ண பழகிவிட்டோம்.
ஹோட்டல் மெனு கார்டில் தவறாமல் இடம்பிடித்து வந்த துரித உணவுகள், இப்போது வீட்டிலிருக்கும் மெனு கார்டிலும் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டன.
காலை உணவாக, மாலை சிற்றுண்டியாக, இரவு பார்ட்டியில்… என பீட்சா, பர்கர்கள் அனைத்து வடிவங்களுக்கும் நெகிழியைப்போல தங்களைத் தகவமைத்துக்கொண்டு, உணவில் முதன்மை இடத்தைப் பெறுகின்றன.
வாய்க்குள் நுழையாத பெயர்களைக் கொண்ட உணவுகள் வாய்க்குள் பலவந்தமாகப் பிடித்து தள்ளிவிடுகிறோம். சுவைக்க முடியாமல் சவைத்து, அரைகுறையாக இரைப்பைக்குள் செல்லும் அவை, செரிமானத்தில் குளறுபடிகளை உண்டாக்கி விடுகிறது.
இது பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு காரணமாகிவிடுகின்றன. ஆர்டர் செய்தால் வெகு விரைவில் வீடு வந்து சேரும் பார்சல் உணவுகளில், உணவுடன் சேர்த்து நோய்களையும் சேர்த்து ஆர்டர் செய்வது தான் பரிதாபத்துக்குரியது.
துரித உணவு எனும் போதை (Fast food lifestyle )
‘என்றாவது ஒரு நாள் இவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை’ என்று தொடங்கும் பழக்கம், விரைவில் அடிமையாக்கும் அளவுக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும்.
காரணம் ,இதில் கலக்கப்பட்டிருக்கும் சில வகையான ரசாயனங்கள், நமது மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் செயல்பட்டு, மீண்டும் மீண்டும் அவற்றையே தேடவைக்கும் அளவுக்கு ஒருவித ஈர்ப்பை உண்டாக்கிவிடுகின்றன.
திரையரங்குகளில் முறுக்கு, எள்ளுருண்டை ,சீடை, கடலை மிட்டாய் என நமது பாரம்பரியத் தின்பண்டங்களின் விற்பனை மாறி, பீட்சாக்கள்(Pizza), பர்கர்களின்(Burger) விற்பனை அமோகமாக இருக்கிறது.
திரைப்படம் பார்க்கும் போது, ஏதாவது ஒரு துரித உணவு நம்மை அறியாமல் நமது இரைப்பைக்குள் சென்றுகொண்டிருக்கும் நிலைமைதான் இன்று.
இடைவேளையில் சாப்பிடவில்லை என்றால், அருகிலிருப்பவர் நம்மை மேலும் கீழும் பார்க்கும் அளவுக்கு நாகரிகக் குறைச்சலாக மாறிவிட்டது.
இதற்கு அதிகமாகச் செலவுசெய்து, அதற்கு இலவச இணைப்பாக வழங்கப்படும் நோய்களையும் வாங்கப் பழகிவிட்டோம்.
ஆரோக்கியமான உணவுகள்
இவ்வகையான துரித உணவுகளை உண்கின்ற பழக்கத்தை தவிர்த்து ,வீட்டில் சமைத்த உணவுகளை உண்பது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாகும்.
உடலுக்கு நன்மை தர கூடிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளான பால், முட்டை, இறைச்சி, மீன், காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்ற இயற்கைஉணவுகளை உண்பதே சால சிறந்தது.
இயற்கையான உணவு முறைகள், முறையான உடற்பயிற்சி இவை போன்ற நடவடிக்கைகள் நமது ஆரோக்கியத்துக்கு சிறந்தவையாக காணப்படும்.
நமது குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை சொல்லி கொடுப்பது மிக அவசியமாகும்.
நமது முன்னோர்கள் நமக்கென்று ஒரு சிறந்த உணவு பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் தந்து விட்டு சென்றிருக்கின்றனர்.
ஆனால் இன்று நாமோ வெளிநாட்டு கலாச்சார மோகத்துக்கு அடிமையாகி நமது கலாச்சாரங்களை மறந்து துரித உணவு கலாச்சாரத்திற்கு அடிமையாவதால் நோயாளிகளாக மாறுவதுடன் எமது சமுதாயத்தையும் சீரழிக்கின்றோம்.
இவற்றில் இருந்து விலகி நல்ல ஆரோக்கிய உணவுகளை உண்போம். ஆரோக்கியம் காப்போம்.