தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவுகள் (Foods to increase breast milk)
தாய்ப்பாலுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. எதிர்காலத்தில் குழந்தை நோயின்றி வாழச் சிறந்த இயற்கை உணவாகவும் மருந்தாகவும் மகத்துவம் நிறைந்ததாக தாய்ப்பால் உள்ளது. அதேநேரம் விற்றமின்கள், தாதுக்கள், புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்புபொருட்கள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் பொதிந்திருப்பது இயற்கையின் வரம்.இதனால் ,தாய்ப்பால் பெருக்கும் உணவுகளை அதிகம் உண்டு (Foods to increase breast milk) குழந்தைக்கு போதிய பால் ஊட்டவேண்டும்.
பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள். தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள்,உறுதியான உடலைப் பெறுவார்கள். குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை குழந்தைக்கு
கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்று மருத்துவ செய்தி கூறுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு,உடலின் வேறு குறைபாடுகள் ,ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சில பெண்களுக்கு தாய்ப்பால் போதிய அளவு சுரப்பதில்லை.
அவர்கள் கீழ் குறிப்பிடப்படும் உணவுகளை (Foods to increase breast milk) உண்பதால் தாய்ப்பாலை பெருக்கலாம்.
தாய்ப்பாலைப் பெருக்கும் உணவுமுறை (Foods to increase breast milk)
வெந்தயம்
குழந்தை பிறந்த சில நாட்களில், வெந்தயத்தை நீரில் ஊறவைத்துச் சாப்பிட, அதிக அளவில் பால் சுரக்கும்.
பிரசவத்திற்கு பின் வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவர உதவுகிறது.
பூண்டு
பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாக, குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Pediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருந்தும், பால் குடிக்கக் குழந்தைகள் மறுத்தால், மேற்குறிப்பிட்ட முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.
தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)
இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள “Tryptophan’ என்னும் அமினோஅமிலம் புரோலாக்டின் மூலமாகத் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ‘Anthocyananin’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, கொழுப்பு சத்தைக் கரைக்கிறது, ‘Asparagamine- A ‘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. · சதாவேரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேற்றுக்குப் பின்னர்க் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.
இலைக்கட்டும் பால் சுரப்பும்
ஆமணக்கு இலைகளுக்குபால்பெருக்கும் ஆற்றல் உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும்.
இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம்.
வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.
உண்ணும் உணவில் அதிக கவனம்
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் அதிக் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
தாய் உட்கொள்ளும் உணவின் தன்மை,சத்துக்களே, தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே, வாயுவை உண்டாக்கும் பொருட்கள், அதிகக் காரமான உணவுகள் மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் உணவைத் தவிர்ப்பது நல்லது.
குறிப்பாகப் பிராய்லர் கோழி, துரித உணவு, மாங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தாய்ப்பாலின் தரமும் மேம்பட்டிருக்கும்.
சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட உருளை கிழங்கை அவித்து, கொஞ்சம் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் (Coconut oil) வதக்கிச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும்.
இரும்புச்சத்து நிறைந்த அத்திக்காய்,அத்திப்பழம் (Figs fruit), பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுவதால் நன்றாக பால் சுரக்கும். பேரீச்சம்பழம் ,தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காய்கறிகளால் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், விற்றமின்கள் நிறைந்த கரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
அரைக்கீரை, முருங்கைக்கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
பால் பொருட்களைச்(milk products) சாப்பிடுவதுடன் பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து அருந்தலாம்.
பருத்திப்பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு.பால்பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றிச் செய்கை சுறா மீனுக்கு இருப்பதால், குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றைச் சிறிதளவு சாப்பிடலாம்.
அதேபோல நீரில் ஊற வைத்த வேர்க்கடலையும் (Peanut), முளைகட்டிய தானிய வகைகளும், சிறுதானிய உணவும் பால் சுரப்பை அதிகரிக்கும்.