பாத வெடிப்பிலிருந்து பாதத்தை காப்போம் (Foot cracks)
உடலில் பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு அதிகரிக்கும். அதனால் பாதங்கள் ஈரப்பதம் குறைந்து வறண்டுபோய் அந்த இடத்தில் வெடிப்பு (Foot cracks) உண்டாகும். இதனை பித்த வெடிப்பு என்கிறோம். பொதுவாக, எல்லாருக்கும் இந்த வெடிப்பு ஏற்படலாம்.
ஆரோக்கியமான கால்களே அழகான கால்கள். கால்களை நன்கு பராமரித்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, கால் பாதங்களை சுத்தமாகவும், சரியான முறையிலும் பராமரிப்பது அவசியம்.
முகத்திற்கும்,தலை முடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை எவரும் கால்கள் மற்றும் பாதங்களுக்கும் கொடுப்பதில்லை.நாம் கால்களைக் கவனிப்பது மிகவும் குறைவே.
இதனால் கால்களில் வறண்ட சருமம், சொரசொரப்பான பாதம், பித்த வெடிப்பு (Foot cracks), கால் ஆணி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்சனையாக மட்டுமின்றி ஆரோக்கியப்பிரச்சனையாகவும் உள்ளது.
நாம் நிற்கும்போதும் நடக்கும்போதும் நம் உடல் எடையை தாங்குவது நம் பாதங்கள்தான். அதனால் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், கால்களில் அழுத்தம் அதிகரித்து பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
பாதத்தில் வெடிப்புகள் (Foot cracks) ஏன் ஏற்படுகிறது?
- பாதங்களை சரியாக பராமரிக்க தவறுவது
- ஊட்டச்சத்து குறைபாடு
- நீரிழிவு நோய்
- சருமம் வறட்சி
- குளிர்காலத்தால் ஏற்படும் அதிக சரும் வறட்சி
பாத வெடிப்புகள் (Foot cracks) நீங்க என்ன செய்யலாம்?
பாத வெடிப்பால் பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.பாதத்தில் உள்ள வெடிப்புகளால் தொடர்ந்து நிற்பதோ ,நடப்பதோ கடினமாக இருக்கும்,ஏன், சிலவேளைகளில் ,பாதணிகளை அணிவது கூட சிரமமாக இருக்கும்.
காலப்போக்கில் அந்த வெடிப்பு புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் வலியை ஏற்படுத்தும்.பாத வெடிப்புகள் மூலமாக கிருமிகள் தொற்றும் வாய்ப்பும் உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். பாதங்களை முறையாக பராமரிக்காத பட்சத்தில் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு, பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
விரல்களுக்கு நடுவில் கூட சிலருக்கு வெடிப்பு ஏற்படலாம்.இதனை ஆரம்பத்திலே கவனிக்காமல் விட்டால், அவை கணுக்காலை தாண்டி கால்களுக்கும் பரவும் வாய்ப்புகள் அதிகமாகும். எனவே, சர்க்கரை நோயாளிகள் பாதங்களை மிகவும் சுத்தமாக,கவனமாக பராமரிக்க வேண்டும்.
நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை சீக்கிரமாக போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய முறைகளை இந்த பகுதியில் காணலாம்.
- அன்றாடம் மாலை நேரத்தில், உங்களது பாதங்களை, வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்
- பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால், பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.
- விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் மஞ்சள் தூளை சேர்த்து பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் நீங்கும்.
பாத வெடிப்புகள் வராது எப்படி தடுக்கலாம்?
பாதங்கள் வறண்டு போகாமல் முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். கால்களின் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால், இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும்.
மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.இதன் மூலம் ,ரத்த ஓட்டம் சீராவதோடு, வெடிப்புகளும் நீங்கும்.
மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும்.
ஒலிவ் எண்ணெய் (Olive oil) , தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ எண்ணெயைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை நாளும் பாதத்திற்கு பூசவும்.

தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை (moisturizing cream) தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது. மாய்ச்சரைசர்கள் பயன்படுத்தும்போது சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும்.