அஜீரணம் சரியாக வீட்டுமருந்து (Medicine for indigestion)
நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் ( indigestion) உண்டாகும். அஜீரணம், பொதுவாக அனைவருக்கும் ஏற்படுகின்ற ஓர் வயிற்று பிரச்சனை.
நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும். செரிமான நீரின் வேலையை குறைக்க உண்ணும் போதே உணவை நன்றாக அரைத்து சாப்பிட வேண்டும்.
அதிகமான காரம், அதிகமான புளிப்பு மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உண்ணும் போது இயல்பாக சுரக்கும் செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் அஜீரணம் ( indigestion) வர வாய்ப்புண்டு. இந்த வகையான உணவுகளை உண்ணும் போது உடலுக்குள் உணவு செல்லும் பாதையில் உள்ள உறுப்புகள் எரிச்சலுக்கு ஆளாகும். அப்போது உணவு பாதை உறுப்புகளால் செரிமான நீரை சரிவர சுரக்க இயலாது.
அதோடு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்து சாப்பிடுவது, குறிப்பாக வயதுவந்தோருக்கு நல்லது.
- தூக்கமின்மை
- அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு நீர்அருந்தாமை
- ஜீரணம் ஆக கடினமான உணவை அதிகம் உண்ணுதல்
- வெளியிடங்களில் சாப்பிடுதல்.
வீட்டில் உள்ள பொருட்களால் எளிய ஜீரண மருந்துகள்
சீரகம் மருந்து
அஜீரணத்திற்க்கு சீரகத்தை, நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, சீரக நீர் தயாரித்து,குடித்து வர நன்கு ஜீரணம் ஆகும். உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.
இஞ்சி, தேன் மருந்து
இஞ்சியை தோல் நீக்கி அரைத்து ,சுத்தமான இஞ்சி சாற்றுடன் சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். இஞ்சியின் காரத்தன்மையை குறைக்கவும் தேன் பயன்படுகின்றது. குழந்தைகளுக்கு தேன் அதிகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
அஜீரண கோளாறுக்கு (indigestion) மட்டுமின்றி பொதுவாகவே ஜீரண சக்தியை அதிகரிக்க கொடுக்கும் மருந்து இது. குழந்தைகளின் ஜீரணசக்திக்காக மாதமொரு முறை கண்டிப்பாக கொடுக்க வேண்டிய அருமருந்து இது.
கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மருந்து
மிக எளிய மருத்துவமாக ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
ஓமம், கருப்பட்டி மருந்து
அஜீரணம் குணமாக ஓமம் மற்றும் கருப்பட்டி கலந்து நம் வீட்டிலேயே கஷாயம் செய்து குடிக்கலாம்.
ஓர் சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதில் கருப்பட்டி போட்டு கருப்பட்டி கரையும் வரை கலக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அதில் ஓமம் கலந்து குடித்தால் வயிற்று கோளாறு மட்டுப்படும். குடிக்க இதமாகவும் இருக்கும்.
கருப்பட்டி, சுக்கு, மிளகு மருந்து
கருப்பட்டியுடன் சிறிது சுக்கு ,4 மிளகும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து, அஜீரணம் ஏற்படும் சமயங்களில் இரண்டு வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி, நல்ல பசி ஏற்படும்.
கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் மருந்து
அஜீரணம் குணமாக கறிவேப்பிலை, சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் போல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். எளிதில் ஜீரணம் ஆக கூடிய இட்லியுடன் இந்த துவையல் சேர்த்து சாப்பிடலாம்.அஜீரணத்திற்காக நாம் உண்ணும் உணவில் ஒரு பாகமாக சேர்த்து கொள்ள கூடிய மருந்து இது.
வெற்றிலை, மிளகு மருந்து
வெற்றிலை அஜீரண கோளாறை குறைத்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இதனால் தான், நம் முன்னோர்கள் வெற்றிலையை விருந்து நிகழ்சிகளின் ஓர் அங்கமாக வைத்திருந்தனர். தடபுடலான விருந்து உணவுகளில் உள்ள மசாலா அவ்வளவு சீக்கிரம் ஜீரணம் ஆகாது.அசைவ விருந்து என்றால் மிக கஷ்டம்.
அஜீரண கோளாறு ஏற்பட்டால் வெற்றிலையுடன் நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.