யாழ்ப்பாண சுவையில் சுறாவறை (Jaffna flavored suravarai)
பால் சுறாவில் சுறா வறை (Jaffna flavored suravarai), சரக்குக்கறி போன்றன செய்து குழந்தை பெற்ற பெண்களுக்கும், பூப்படைந்த சிறுமிகளுக்கும் கொடுப்பார்கள்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கவும் உட்காயங்கள் ஆறவுமே இதைக் கொடுப்பார்கள்.இதை ஒரு மருத்துவ உணவாக காலம் காலமாக விசேட முறையில் சமைத்து உண்கிறார்கள்.
அதிக சுவையும் சத்தும் நிறைந்த சுறாவறையை சாதாரணமாக சாதம் மீன்கறிகளுடன் சேர்த்து சமைத்து உண்பது வழக்கம். சாதாரணமாக எல்லோரும் சாப்பிடுவதற்கு தேவையான உறைப்பு போடலாம்.
சுறாவறை செய்ய தேவையான பொருட்கள்
- சுறா மீன் – 500g
- சின்ன வெங்காயம் – 25 to 30
- தேங்காய்ப்பூ – 2 கைப்பிடி
- செத்தல் மிளகாய்- 6
- மிளகு – 20
- சீரகம்- 1/2 தேக்கரண்டி
- பூண்டு பல் – 3 to 4
- மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- சிறிது கடுகு – 1/2 தேக்கரண்டி
- பெரிய சீரகம் – 1/2 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை
இதைவிட சுறாமீனில் குழம்பு, பொரியல் செய்வார்கள். சுறாமீனில் தயாரிக்கப்படும் உணவுகள் யாவுமே , குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் அளவில் மிக சுவையாக இருக்கும்.
வீடியோவில் சுறா வறை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
சுறாவறை (Jaffna flavored suravarai) செய்யும் முறை
- சுறாவை சுத்தமாக கழுவி சிறுதுண்டுகளாக வெட்டி சிறிதளவு உப்பு, அளவாக நீர் சேர்த்து 12 – 15 நிமிடங்கள் அவிய விடவும்.
- நன்றாக அவிந்ததும் தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும். பின் அதனை கையால் நன்றாக உதிர்த்தி விடவும்.
- செத்தலை முதலில் அரைத்து விட்டு அதனுடன் மிளகு,சீரகம், பூண்டுப்பற்களையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- உதிர்த்திய சுறாவுடன் தேங்காய், அரைத்த மசாலா,சிறிது உப்பு,மஞ்சள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
- சட்டியை அடுப்பில் வைத்து 3 கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடனதும் அதில் சிறிது கடுகு,பெரிய சீரகம் போடவும்.
- கடுகு வெடிக்க தொடங்கியதும் ,சிறிதாக வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம், கருவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம் வதங்கி வந்ததும் அதில் கலந்து வைத்திருக்கும் சுறா கலவையைச் சேர்த்து மிதமான சூட்டில் 10 – 15 நிமிடங்கள் வறுக்கவும்.
- அதன் நிறம் பொன்னிறமாக மாறும் போது அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
இலகுவான முறையில் சுறாவறை தயாராகி விட்டது.
சில இடங்களில் சுறாவறையை,சுறா புட்டு என்றும் சொல்வாரகள்.எத்தனை தடவை செய்து சாப்பிட்டாலும் அலுக்காது அவ்வளவு சுவை. சமைத்து உண்டு மகிழுங்கள் !