காஞ்சி காமாட்சி அன்னை (Kanchi Kamadkshi)

தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக காஞ்சி காமாட்சி (Kanchi Kamadkshi) அன்னை வீற்றிருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி (Kanchi Kamadkshi) அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சி தான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி.

`கா’ என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது

பௌர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் தேவியர் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு (Kanchi Kamadkshi) சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.

இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.
ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

சிறப்பு மிக்க நவாவரண பூஜை 

பௌர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள் தான் இந்த பூஜையை செய்ய முடியும்.

நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்.

அப்படி இருக்கும் போது புனிதமான பௌர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பது நம்பிக்கை.

அது மட்டுமல்லாமல் , ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.

இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலி தான்.

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.

காஞ்சி காமாட்சி (Kanchi Kamadkshi) தாயின் அருள் வரலாறு

காஞ்சியில் காமாட்சி (Kanchi Kamadkshi) ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுரவதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள்.

பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்றனர்.

அவ்வேளையில் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது.

”காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பவும். அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவையும் இருக்க வேண்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்”

அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள்.

அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்த போது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள்.

இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.

காஞ்சி காமாட்சி (Kanchi Kamadkshi) அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்தமானவை.

கருவறையில் அம்பிகை பத்மாசனத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.

கருவறையில், அம்பிகையின் வலப்புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சி தரும் அம்மனையும் நாம் தரிசிக்கலாம்.

பண்டாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே அவதரித்தவள் காமாட்சி அம்மன். பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.

அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில், `ஶ்ரீ ‘ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் போன கடன்களும் வந்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

அம்பிகையின் அருட்பிரசாதமாக கிடைக்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்துகொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும்.

காமாட்சி அம்மன் (Kanchi Kamadkshi) ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

மாயைகள் பலவற்றை அவள் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்த்தினாலும், அவற்றில் இருந்து விடுவிக்கிற கருணையும் அவளிடம் பூரணமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.