வெளிவர உள்ளது காந்தாரா பாகம் 2 (Kantara)
சிறிய பட்ஜெட்டில் தயாராகி,கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’(Kantara) படம் பெரிய வெற்றியை பெற்றது.
அதிக வசூல் குவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. வெளியிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
ரூ.16 கோடி செலவில் தயாரான காந்தாரா(Kantara) ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இப்படத்தின் கிளைமாக்சில் இடம்பெற்ற வராஹரூபம் பாடலுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக கொண்டது கதை. படத்தில் இடம்பெற்ற மாடு விரட்டும் காட்சியும், தெய்வகோலா என்கிற சாமியாட்ட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கர்நாடகாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை காந்தாரா (Kantara) படம் எடுத்து காட்டியிருக்கிறது.
இதனை தொடர்ந்து காந்தாரா திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஆங்கில மொழியில் வெளியானது என இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “தெய்வீகத்தால் மயங்கவும்” என கூறியுள்ளார்.
ஆங்கில மொழியில் வெளியாவதால் காந்தாரா திரைப்படத்தின் தெய்வீக மணம் உலகளவில் பரவட்டும் என கூறியுள்ளார்.
நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கௌடா; ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ். காஷ்யப்; இசை: அஜனீஷ் லோக்நாத்; இயக்கம்: ரிஷப் ஷெட்டி.
கன்னடத்தில் ‘காந்தாரா ’(Kantara)
முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியான இத்திரைப்படம், விமர்சனரீதியாக மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, நல்ல வசூலையும் குவித்ததால், படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்தது.
கன்னடத்தில் ‘காந்தாரா ’(Kantara) திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.
காந்தாரா (Kantara) திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் படத்தைத் தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்திருந்தார்.
100 நாள் கடந்த காந்தாரா படத்தின் கொண்டாட்ட நிகழ்வில் படக்குழு படம் குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது ரிஷப் கூறுகையில், “கந்தாராவுக்கு (Kantara) அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் காட்டிய பார்வையாளர்களால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
எல்லாம் வல்ல தெய்வத்தின் ஆசியுடன் இப்படம் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
காந்தாரா படத்தின் கதைக்கு வரலாற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால், காந்தாராவின் படப்பிடிப்பிலிருந்த போது என் மனதில் இந்த யோசனை தோன்றியது.
இன்னும் கதைக்கான பணி நடந்து கொண்டிருப்பதால், படத்தைப் பற்றிய விவரங்களைப் பின்னர் வெளியிடுகிறேன்” என்றார்.
காந்தாரா பாகம் 2 (Kantara)
ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா (Kantara) 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பாகத்தைப் போலல்லாமல், காந்தாரா பாகம் இரண்டு சுமார் 3000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ‘கவலுதாரி’, ‘கருட கமனா க்ருஷப வாகனா’ என கன்னட திரையுலகிலிருந்து கவனிக்கத்தக்க திரைப்படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், காந்தாரா இந்தப் போக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
காந்தாரா படத்தின் கதை
1847ஆம் ஆண்டில் கன்னட பிரதேசத்தில் உள்ள அரசர் நிம்மதியைத் தேடி காட்டுக்குள் செல்கிறார். அங்கு வசிக்கும் மக்கள் இணைந்து கடவுளை வழிபடுவதைப் பார்த்து, அவர்களுக்கு பெரிய அளவில் நிலங்களை எழுதிக் கொடுக்கிறார்.
இதற்குப் பிறகு 1970 களில் அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை மீட்க நினைக்கிறான்.
ஆனால், அங்கிருக்கும் தெய்வம் எச்சரிக்க, அவன் இறந்து போகிறான். இதற்குப் பிறகு, 1990ல் பண்ணையார் ஒருவர் அதே நிலத்தை அந்த மக்களிடமிருந்து பறிக்க நினைக்கிறார்.
மற்றொரு பக்கம், காப்புக் காடுகளை அளந்து மக்களை வெளியேற்றப்போவதாகக் கூறுகிறது வனத்துறை. அந்த மக்கள் வணங்கும் தெய்வம் என்ன செய்தது என்பது படத்தின் மீதிக் கதை.
கந்தாரா முக்கோண திரைக்கதை (Kantara triangle screenpla)
நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து திரைக்கதை எழுதியிருக்கும் விதம் சுவாரஸ்யத்திற்கு பெரிதும் கைகொடுத்திருப்பதாகச் சொல்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
“முதல் பாதியில் ‘கம்பளா’ எனப்படும் எருமை மாட்டு போட்டி, அதையொட்டி சேற்றில் நடக்கும் சண்டைக்காட்சிகள் என காட்சி விருந்தாக பார்வையாளர்களை கவருகிறது படம்.
மற்றொருபுறம் யதார்த்ததுக்கு நெருக்கமான வாழ்விடங்கள், பழங்குடியின மக்களின் பண்பாட்டு கலாசாரம், வேட்டை தொழில் உள்ளிட்டவை கவனம் பெறுகின்றன.
இறுதிக் காட்சியை மக்களின் நிலவியல் தன்மை சார்ந்து பதிவு செய்த விதம் ரசிக்க வைக்கிறது.
ரிஷப் ஷெட்டியின் நடிப்பு படத்திற்கு உயிரோட்டம் கொடுத்து காட்சிகளை மெருகேற்றுகிறது. குறிப்பாக இறுதிக் காட்சியில் அவர் ஆடும் ஆட்டமும், அதனுடன் சேர்ந்த நடிப்பும் தேர்ந்த கலைஞனுக்கான உருவகம்.
கறாரான வனத்துறை அதிகாரியாக கிஷோர். நாயகனுடன் முறுக்கிக் கொண்டு நிற்பது, தனது பணிக்கு இடையூறு ஏற்படும் போது திமிருவது என முதல் பாதியில் ஒருவகையான கதாபாத்திரமாகவும், இரண்டாம் பாதியில் அதற்கு முற்றிலும் மாறாகவும் தனக்கான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் தொழில்நுட்பக்குழு. வரைகலை, இசைக் கோர்வை, கலை ஆக்கம், சண்டைப்பயிற்சி, ஒலி வடிவமைப்பு உள்ளிட்டவை சிறந்த காட்சியனுபவத்திற்கு பக்கபலம் சேர்க்கின்றன.
இடைவேளைக்கு முன்பான சண்டைக்காட்சிகளும், கம்பளா போட்டியும், இறுதிக்காட்சியில் திரையில் தெறிக்கும் வண்ணக்கலவையும் அரவிந்த் காஷ்யம் ஒளிப்பதிவில் அழகூட்டுகின்றன.
காந்தாரா படம் பார்த்த பின்பு, இதுபோன்ற வளமிக்க பாரம்பரியங்களை மாநிலம் கொண்டிருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.
நாட்டில் வெகுசில பகுதிகளே, நாட்டை வளப்படுத்தும் வகையில் விவசாயம் மேற்கொண்டு வரும் மக்களை கொண்டிருக்கிறது.
கடினம் வாய்ந்த சூழலிலும் அவர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு நாட்டை வளமடைய செய்வது தலை வணங்கக் கூடியது.
எல்லோருமே தவறாமல் திரையரங்குகளில் கண்டு ரசிக்கத்தக்க சமகால படைப்பு இது!