கறுப்புகவுனிஅரிசியில் உணவு செய்முறைகள்(Kavuni arisi receipes)
கவுனி அரிசியை சாதாரணமாக அரிசி போல முறுக்கு, அதிரசம், மோதகம், கொழுக்கட்டை,சாதம்,தோசை,இட்லி, அடை, பாயாசம், பணியாரம் என எல்லாவிதமான அரிசி உணவுப் பண்டங்களையும் (Kavuni arisi receipes) தயாரிக்கலாம். சதுர்த்தி, நவராத்திரி போன்ற விரதங்களுக்கும் நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கலாம்.
அரிசி அதிக நார்ச்சத்து நிறைந்ததால் , அவிய சிறிது நேரம் கூடுதலாக தேவை. அதற்கு அரிசியை கூடுதலான நேரம் ஊறவைத்தால் சமைப்பது இலகு.குடும்ப ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும் போது இது ஒன்றும் பெரிய சிரமம் இல்லை.
ஏனெனில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் அதில் அடங்கியுள்ளது. பயன்படுத்தி கொண்டுவரும் போது நீங்களே அதை உணர்வீர்கள். கறுப்புகவுனி அரிசி உள்ள Anthocyanine அளவற்ற நன்மைகள் தரக்கூடியது.
கறுப்புகவுனி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தான். கறுப்புகவுனி அரிசி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க உதவும். மற்ற அரிசி வகை போல அல்லாமல் கருப்பு கவுனி அரிசிபருப்பு சுவை (Nutty Flavour) போல் இருக்கும்.
சாதாரண சிவப்பு அரிசியை விட, கறுப்புகவுனி அரிசியில் குறைந்த கலோரி , சோடியம்,பொட்டாசியம் புரதம் இரும்பு ஆகிய சத்துக்களும் அதிகமாகவே உள்ளது. இந்த அரிசி அதிக படியான நார்ச்சத்து உள்ளது.100 கிராம் அளவில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது.
கவுனி அரிசி பாயசம் (Kavuni arisi receipes)
தேவையானவை
கவுனி அரிசி – 4 மேசைகரண்டி
பால் – 1000 மிலி.
பேரீச்சம்பழம் – 20
டின்மில்க்(Condensed Milk) – 4 மேசைகரண்டி
துருவிய பாதாம் பருப்பு – 10
ரோஸ் வாட்டர் – 4 சொட்டுகள்
செய்முறை
1. கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும்.
2. பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கி, பின்னர் தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. ஊறவைத்த கவுனி அரிசியின் தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும். பிறகு, லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைது பாலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், உடைத்த அரிசியைச் சேர்த்து மூடிபோட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
வெந்தவுடன் அதனுடன் அரைத்த பேரீச்சம்பழ விழுது, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும், துருவிய பாதாம், ரோஸ்வாட்டர் சேர்த்து பரிமாறலாம்.
வறுத்த முந்திரி மேலே வைத்து சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.
கறுப்பு கவுனி அரிசிமா இடியாப்பம்
தேவையானவை
கவுனி அரிசி மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை (Kavuni arisi idiyappam receipes)
1. கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மாவாக அரைத்துக்கொள்ளவும்.
3. இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.
4.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.
5. மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும். பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.
தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.அருமையாக இருக்கும்.
கறுப்பு கவுனி – இட்லி (Kavuni arisi receipes)
தேவையானவை
கறுப்பு கவுனி அரிசி – 2 கப்
இட்லி அரிசி – ஒரு கப்
கெட்டி அவல் – ஒரு கப்
உளுந்து – ஒரு கப்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. கறுப்பு கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசி ஒன்றாகச் சேர்த்தும், அவலைத் தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்தும் ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் ஊறவிடவும்.
2.எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
3. புளித்த மாவை நன்கு கலக்கி. இட்லித் தட்டில் துணி விரித்து மாவை ஊற்றி மூடி போட்டு ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கறுப்பு கவுனி அரிசி இட்லி தயார்.
தேங்காய் சட்னி/காரசட்டினி/கடப்பா சாம்பாருடன் பரிமாறவும்.
செட்டிநாடு ஸ்பெஷல் கறுப்பு கவுனி இனிப்புதேவையானவை
கவுனி அரிசி – ஒரு கப்
சர்க்கரை – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பாதாம் – சிறிதளவு
செய்முறை
சுத்தம் செய்த கவுனி அரிசியை 4 கப் நீரில் 4 மணி நேரம் ஊற விடவும்.
1. குக்கரை அடுப்பில் வைத்து ஊறிய அரிசியை தண்ணீருடன் சேர்த்து மூன்று விசில் வேகவிடவும்.
2. பிறகு, 15 நிமிடம் தீயை முற்றிலும் குறைத்து வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு மூடியைத் திறந்து வெந்த அரிசியோடு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி, பாதாம் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.
சூடாக/ஆறிய பின் உண்ண ஏற்றது.
கறுப்பு அரிசி சமைத்த பின் பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் இருக்கும். இதனால் கறுப்பு கவுனி அரிசிக்கு ஊதா அரிசி “Purple Rice ” என வேறு பெயர் உண்டு.
கறுப்பு கவுனி அரிசி Glueten Free. ஆர்கானிக்(Organic) கறுப்பு கவுனியை காற்று போகாத வகையில் பாதுகாக்க லவங்கம், கிராம்பு அல்லது மிளகாய் வற்றல் போட்டு வைக்கலாம். இதனால் பூச்சிகள் மற்றும் புழுக்கள் வராமல் தடுக்கலாம்.