நம் அடுக்களையே ஒரு மருந்தகம் (kitchen as pharmacy)
அஞ்சறைப்பெட்டியில் அருமருந்து. (kitchen as pharmacy) வீட்டிலேயே மருத்துவம்.
‘உணவே மருந்து (Food as medicine) மருந்தே உணவு’ என்று வாழ்ந்த பாரம்பரியம் நமது.
நம் அஞ்சறைப் பெட்டியில் (kitchen as pharmacy) உள்ள பொருட்கள் வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டும் அல்ல. நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டில் தொடங்கி, மிளகு, கிராம்பு வரை ஒவ்வொன்றுமே உயிர் காக்கும் சஞ்சீவினிகள்!
அஞ்சறைப்பெட்டியில் உள்ள அருமருந்து (kitchen as pharmacy)
மஞ்சள் முதல் அதிமதுரம் வரை நாம் சமையலில் பயன்படுத்தும் மணமூட்டிகள், சுவையூட்டிகள், மசாலா பொருட்கள் ஏராளம்.அவற்றில் அன்றாடம் பாவிக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.
மஞ்சள் (Turmeric)
சித்த மருத்துவத்தில் மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடங்களில் கட்டுப்போட்டால், வலி மறையும்.
வீக்கம் குறையும்.
மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ,புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மஞ்சளை உணவில் தொடர்ந்து சேர்த்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அல்சைமர் எனும் மறதி நோய் வருவதைத் தடுக்கும்.
மஞ்சளை உணவில் சேர்த்துவரும்போது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
மிளகு ( Black Pepper )
மிளகுக்கு, ‘கறுப்புத் தங்கம்’ என்றோர் பெயர் உண்டு. எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற பழமொழி இதன் நச்சு நீக்கும் தன்மையைச் சொல்லும்.
மிளகைக் காயகற்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். திரிகடுகத்தில் மிளகுக்கும் இடம் உண்டு.
தும்மல், மூச்சடைப்பு, உடல் பருமன் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். மிளகுப்பொடியை அப்படியே சமையலில் பயன்படுத்துவதே சிறந்தது. தினமும் மிளகைச் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மிளகு காரமானது. எனவே, அல்சர் இருப்பவர்கள் மிளகைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். தொண்டைக்கட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.
சீரகம் (Cumin Seed)
உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.
உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
சீரகம், சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும். சீரகத்தை வறுத்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்க, உயர் ரத்த அழுத்தம் குறையும். இருமல், சளி நீங்கும்.பித்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சீரகத்திற்கு உண்டு.
காய்ந்த மிளகாய் / செத்தல் ( Red Chilli)
பித்தம், கப நோய் போன்றவற்றைச் சரிசெய்யும். ஆனால், மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
அல்சர், அழற்சி, வாய்ப்புண் போன்றவை இருப்பவர்கள், காய்ந்த மிளகாய் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
மிளகாய் காரமானது என்பதால், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, சமைக்கும்போது இரண்டு பங்கு தனியா (மல்லி) சேர்த்துச் சமைக்க வேண்டும். எனவேதான், நம் முன்னோர்கள் ஒரு பங்கு மிளகாய்ப் பொடிக்கு, இரண்டு பங்கு மல்லிப் பொடி சேர்ப்பார்கள்.
புளி (Tamarind)
புளி,பித்தத்தை அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும்.பசி இன்மை, மந்த உணர்வு இருப்பவர்கள் புளி சாப்பிடுவது நல்லது.அல்சர் இருப்பவர்கள் புளியை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. .
புளிச்சாதம்,புளி ரசம் வைத்துச் சாப்பிடலாம். புளியில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது. அதிகமாகச் சாப்பிட்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே, அளவாகவே சாப்பிட வேண்டும்.
கடுகு (Mustard Seed)
உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது கடுகு.சமையலில் கடுகைப் தாளிக்க பயன்படுத்தும் போது வெடிக்க வேண்டும். கடுகு வெடிப்பதால் அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவுடேன் சேர்ந்து வாசனையாக மாறும்.
கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்துவந்தால், உடல் வலி நீங்கும்.
குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும்.
உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும் என்பதாலேயே.
சோம்பு (Fennel seed)
சோம்புக்கு, பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு.
சோம்பை வறுத்து, தண்ணீர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மாதவிடாய் ஆரம்பித்த இளம்பெண்கள் சோம்பு நீர் அருந்துவது மிகவும் நல்லது.
சோம்பு, செரியாமைக்கு மிகவும் சிறந்த தீர்வு. சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.
சோம்பை அப்படியே மென்று சாப்பிடலாம். பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடும்போது, அதில் சேர்க்கப்பட்டு இருக்கும் எண்ணெய்கள் காரணமாக, வயிற்றில் வலி ஏற்படும். இதைத் தவிர்க்கவே, பிரியாணி சாப்பிட்ட பின்னர் சோம்பைச் சாப்பிடுகிறார்கள்.
தனியா / கொத்தமல்லி (Coriander Seed)
தனியாவை, மல்லி, கொத்தமல்லி விதை என்றும் அழைப்பார்கள்.
தனியா, கெட்ட பாக்டீரியாவை அழிக்கும். எனவே, இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும்.
பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
வாயில் கெட்ட நாற்றம் வீசினால், சிறிது அளவு தனியாவை எடுத்து, நன்றாக மென்று, வாய் கொப்பளித்தால், துர்நாற்றம் நீங்கும். வியர்வையை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.
கர்ப்பகாலங்களில் பல பெண்களுக்குத் தலைசுற்றல் பிரச்னை இருக்கும். கொத்தமல்லி விதையுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, விழுதுபோல (பேஸ்ட்) ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த விழுதுடன், ஒரு டம்ளர் தண்ணீர், தேன் சேர்த்துக் கலந்து குடித்துவந்தால், தலைசுற்றல் நீங்கும்.
பூண்டு (Garlic)
பூண்டு, பிசுபிசுப்பும் காரத்தன்மையும் கொண்டது. இது, வெப்பத்தை திசுக்களுக்குள் கடத்த வல்லது.
கபம், வாதம் போன்றவை அதிகரிக்கும்போது பூண்டு சாப்பிடுவது நல்லது. பூண்டு சாப்பிட்டுவந்தால், ஆண்மை சக்தி பெருகும்.
பார்வையைத் தெளிவாக்கும், நல்ல குரல் வளம் கிடைக்க உதவும். கொலஸ்ட்ராலைக் கரைக்கும். ரத்தக் குழாய் அடைப்பைக் சரிசெய்யும். கந்தகச்சத்து நிறைந்தது. பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
வாயுப் பிரச்னை கொண்டவர்கள், அரை டம்ளர் பாலில், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, இரண்டு மூன்று பூண்டுப் பற்களைச் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளர் பாலாகச் சுண்டியதும் குடிக்கவும்.
இஞ்சி (Ginger)
வாந்தி,vபசியின்மை, ஏப்பம் போன்றவற்றிற்கு இஞ்சி சிறந்த நிவாரணி.
இஞ்சி, செரிமான மணடலத்தைச் சீர் செய்ய உதவுகிறது. மைக்ரேன் தலைவலியைப் போக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
இஞ்சியில் விற்றமின் இ, மக்னீசியம் நிறைந்துள்ளது. தினமும் ஏதாவது ஒருவகையில் இஞ்சியைச் சமையலில் சேர்த்துவருவது நல்லது.
இஞ்சி டீ (Ginger tea) அருந்தலாம். பசியின்மைப் பிரச்னை இருப்பவர்கள், 100 கிராம் சீரகத்துடன், இஞ்சித் துருவலை நெய்யில் வதக்கி, நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, பிரச்சனை சரியாகும்.
புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ஜூஸ்கள் தயாரிக்கும்போது, இஞ்சியைச் சிறிதளவு சேர்த்து பருகலாம்.
வெந்தயம் (Fenugreek Seed)
வெந்தயம் இரும்புச்சத்து நிறைந்தது. ரத்த சோகையைக் குணப்படுத்தும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. ரத்தக்கழிச்சல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.
வெந்தயத்தை வறுத்துப் பொடிசெய்து, வைத்துக்கொள்ளவும். தினமும் ஐந்து கிராம் வெந்தயப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடிக்க, கெட்ட கொழுப்பு நீங்கி, உடல் எடை குறையும்.
பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைக் கட்டுக்குள் வைக்கும், தாய்ப்பால் அதிகரிக்க வழிவகுக்கும். வெந்தயக்களி செய்து சாப்பிடலாம்.மோரில் வெந்தயத்தைப் போட்டு அருந்தலாம், வெந்தயத்தில், லெனோலைக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.வெந்தயக்கீரை
ஓமம் (Carom/thymol seed)

வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய பொருட்களில் ஓமத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.
வயிறு வலி, அஜீரணக் கோளாறுகள், இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் போன்ற பிரச்னைகளைச் சரி செய்யும் ஆற்றல், ஓமத்துக்கு உண்டு.
ஓமத்தை வறுத்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வயிற்று வலி நீங்கும்.
பல்வலியைப் போக்கும் ஆற்றல் ஓமத்துக்கு உண்டு. சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும்.
வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். மலச்சிக்கல் பிரச்னையைச் சரிசெய்யும்.
ஓமத்தில் இருந்துதான், தைமால் (Thymol) என்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது, பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.
கறிவேப்பிலை ( Curry leaves)
கறிவேப்பிலையை சமையலில் வாசனைக்கும் ருசிக்கும் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இதில், பல்வேறு மருத்துவக் குணங்களும் அடங்கியிருக்கின்றன.
கறிவேப்பிலையைச் சாப்பிட்டுவந்தாலும், கறிவேப்பிலைத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துவந்தாலும், முடி நன்றாகக் கருகருவென வளரும்.
கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், மந்தம், மலக்கட்டு நீங்கும்.
சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கும். குறிப்பாக, பாதங்களைக் காக்கும்.
ரத்த சோகையைத் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு.
எள் (Sesame Seed)
உடல் எடை கூட நினைப்பவர்களுக்கு எள்ளு சிறந்த தீர்வு.
எள், கல்சியம் நிறைந்தது. பாலில் இருக்கும் கல்சியத்தைவிட, எள்ளில் இருக்கும் கல்சியம் மிக அதிகம். எலும்புகள் பலம் அடைய எள் சாதம் சாப்பிடலாம்.
உடல் மெலிந்த குழந்தைகளுக்கு எள்ளுருண்டை, எள்ளு மிட்டாய் போன்றவை சாப்பிடக்கொடுக்கலாம்
எள்ளில், மக்னீசியம் சத்து அதிக அளவு உள்ளது. சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் எள்ளுக்கு உண்டு.
கல்லீரலைக் காப்பதில் முக்கியப் பங்கு எள்ளுக்கு உண்டு. எனவே, அனைவருமே எள் சாப்பிடலாம்.
எள்ளைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, இரவு நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.