குற்றாலம் என்றாலே குதூகலம் தான் (Kutralam falls)
குற்றாலம் (Kutralam falls) என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது அங்குள்ள அருவிகள். பலரும் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக மட்டும் செல்கின்றனர்
குற்றாலத்தில் தவழும் தென்றலுடன் மழையின் சாரல் காலையில் குளிக்கச் சொல்கிறது. மாலையில் பயமுறுத்தி தள்ளி நிற்கவைத்து தனது ரசிகர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமையான காடுகளும், கண்ணுக்கு விருந்தளிக்கும் கானக பறவையினங்களும், அச்சத்தை உருவாக்கும் காட்டு விலங்குகளும் மட்டும் அல்லாமல் பல்லாயிரக்கணக்கான அரிய வகை மூலிகைகளும் நிரம்பிய இடம் குற்றாலம்.
அகத்திய முனிவர் வாழ்ந்த இந்த மேற்குத் தொடர்ச்சி மலையானது ஏழைகளின் சொர்க்கபுரி. அதனால் தான், மூலிகைக் காடுகளின் வழியாக ஓடிவந்து அருவியாக கொட்டும் நீரில் குளிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் மக்கள்.
மூலிகைக் குளியலான அருவிகளைக் கொண்ட குற்றாலத்தை(Kutralam falls) தென்னகத்தின் ‘ஸ்பா’ என வர்ணிக்கிறார்கள். இது உற்சாகத்தையும் புத்துணர்வையும் அளிப்பதால் ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தகுந்த சீதோஷ்ணநிலை காரணமாக அரிய வகை மூலிகைகள் இந்தப்பகுதியில் மட்டுமே வளர்கின்றன.
இங்கு 4000க்கும் அதிகமான மலர்கள் உள்ளன. இந்த மலைப்பகுதியில், உலகின் வேறு எங்குமே காணக்கிடைக்காத அரிய வகை பட்டாம் பூச்சிகள் இருப்பதுவும் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் குற்றாலம் விளங்குகிறது. சிவ ஸ்தலமாகவும் விளங்கும் இந்த பகுதியில் வசித்த அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் காட்சியளித்ததாகவும் வரலாறு உள்ளது.
களை கட்டும் சீசன்!
தென் மேற்குப் பருவக் காற்று வீசத் தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கிவிடும். தென்மேற்குப் பருவமழை காரணமாக கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் மலைகளில் உள்ள நீரானது மூலிகைக் காடுகளின் வழியாக பாய்ந்தோடி வந்து அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
அந்த சமயத்தில் சாரல் மழையும் இதமான காற்றும் வீசுவதால் அந்த சீசனை அனுபவித்து மகிழ்வதற்காக மக்கள் கூட்டம் பல்வேறு இடங்களிலும் இருந்து வந்து சேர்கிறார்கள்.
ஜூன் மாதத்தில் தொடக்கும் குற்றால (Kutralam falls)சீசன் ஆகஸ்ட் மாதம் வரையிலும் களைகட்டி நிற்கும். இந்த மூன்று மாதங்களிலும் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்டுவதுடன் இதமான சூழலும் சாரல் மழையும் பெய்யும்.
இந்த சீசனை அனுபவிப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.
இந்த மூன்று மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு சீசன் காலத்தில் இரவு பகல் பாராமல் கடைகளில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
உற்சாக குளியலுக்கு உகந்த குற்றாலம் அருவிகள்
குற்றாலத்தை(Kutralam falls) சுற்றிலும் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. இவை அனைத்துமே சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவை. இது தவிர, குற்றாலத்துக்கு அருகில் உள்ள கேரள எல்லையில் கும்பாவுருட்டி அருவி, பாலருவி என இரு அருவிகள் அமைந்துள்ளன.
குற்றாலத்தை சுற்றிலும் இருக்கும் ‘மெயின்ஃபால்ஸ்’ எனப்படும் பிரதான அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, புது அருவி, பழத்தோட்ட அருவி ஆகிய ஏழு அருவிகளும் மலையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன.
செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அருவிகள் மலையின் மீது அமைந்து இருக்கின்றன. அத்துடன், தனியார் இடங்களின் வழியாக வழிந்தோடி வரும் நீரானது சில இடங்களில் அருவிகளாய் கொட்டுகின்றன.
தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள அந்த அருவிகளைக் காண உரியவர்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பயணிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

பிரதான அருவி! (Kutralam falls)
குற்றாலத்தின்(Kutralam falls) பேரழகு என்றால், அது ‘மெயின் ஃபால்ஸ்’ எனப்படும் பிரதான அருவி தான். அந்த அளவுக்கு இந்த அருவி அழகு நிறைந்தது.
மலைகளில் ஓடிவரும் அருவியானது தரைப்பகுதியில் தலைக்காட்டும் இடத்தில் அமைந்திருக்கும். இந்த அருவியானது, சுமார் 90 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.
இடையில் பொங்குமா கடல் என்கிற மலையின் பள்ளத்தில் விழுந்து, ஆக்ரோஷமாக பொங்கி எழுந்து தரையில் விழுகிறது,
இந்தக் காட்சியை காண்பதே பேரானந்தம். நாம் தென்காசி நகரை கடந்து குற்றாலம் நோக்கி செல்லும்போதே, தூரத்தில் இந்த அருவி தெரியத் தொடங்கும்.
அந்த அழகை ரசித்தபடி பிரதான அருவிக்கு சென்று குளித்து மகிழ்வது சிறப்பு. இந்த அருவியின் கரையில் குற்றாலநாதர் ஆலயமும் அமைந்து இருக்கிறது.
அருவியின் அருகில் உள்ள சித்திர சபையும் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
மெயின் அருவி
ஐந்தருவி
புலியருவி
சிற்றருவி
செண்பகாதேவி அருவி (அனுமதி இல்லை)
பழத்தோட்ட அருவி (பார்க்கலாம், குளிக்க முடியாது)
நெய்யருவி
மேக்கரை எருமைச்சாவடி அருவி
புது அருவி (பார்க்கவே அனுமதி இல்லை)