வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் (Lifestyle Diseases)
நவீன கல்வி, தொழில்நுட்பம்,உணவு முறைகள் ,கலாச்சாரம், நாகரிகம் மூலம் மனித சமுதாயத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் தண்டனையாக வாழ்வியல் மாற்ற நோய்கள் (Lifestyle Diseases) உள்ளமை தெள்ளத் தெளிவான விடயம்.
அறிவியலும், மருத்துவத்துறையும் வியக்கத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருக்கும் போது உயிருக்கு உலை வைக்கும் நோய்களின் எண்ணிக்கையும் பெருகியிருப்பது கவலை கொடுக்கும் நிலைப்பாடு. ஏன் இந்த முரண்பாடு?
பொதுவாக எந்த ஒரு வளர்ச்சியும் முன்பிருந்த நிலையை விட சிறிதளவாயினும் உயர்ந்ததாய், முன்னேற்றமாய் இருக்க வேண்டும். ஆனால் மனிதனின் அதி உயர் வளர்ச்சி வாழ்வியல் மாற்றநோய்களைப் (Lifestyle Diseases) பரிசாய் தந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் நிலை இது தான். ஆனாலும் எந்த நாட்டிலும் வாழ்வியல் மாற்ற நோய்களை முறியடிக்க முழு மூச்சிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் முந்தைய தலைமுறைகளில் 40,45 வயதுகளுக்குப் பின் வந்த நோய்கள் இப்போதைய தலைமுறையில் 25,30 வயதுகளில் வந்து விடுகிறது.
அறிவும், அறிவியலும், மருத்துவ விஞ்ஞானமும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து வரும் போது இளம் தலைமுறை மீது நோய்கள் போர்தொடுப்பது ஏன்? சிந்தித்து பாருங்கள்.
தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன?(Diseases caused by lifestyle changes)
சர்க்கரைநோய்
உயர் ரத்த அழுத்தம்
தைராய்டு கோளாறுகள்
ஹார்மோன்கள் சமச்சீரின்மை
புற்றுநோய்
செரிமானக் கோளாறுகள்
மனஅழுத்தம்
இதய நோய்கள்
நரம்பு மண்டலப் பாதிப்புகள்
முதுகுவலி, மூட்டுவலி
குழந்தையின்மை
உடல்பருமன்
சுவாசப்பிரச்சனைகள்
சீரற்ற மாதவிலக்கு
அதிக ரத்தப்போக்கு
ஹார்மோன் மாறுபாடு காரணமாக சருமப் பிரச்சனை
விற்றமின்டி குறைபாடு
இன்னும் பல… .வரிசை நீள்கிறது…….
சர்க்கரைநோய்
இந்தியா உலகளவில் சர்க்கரை நோயாளி கள் அதிகமுள்ள முதல் நாடாக, உலக சர்க்கரை நோய் நாடுகளின் தலைநகரமாக (Diabetic Capital of the world) ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் 3 கோடி மக்கள் சர்க்கரை நோயாளிகளாக)உள்ளனர். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களில் நகர்ப்புறங்களில் 11 சதவீதத்தினரும், கிராமப்புறங்களில் 3 சதவீதத்தினரும் நீரழிவின் பிடிக்குள் நிற்கின்றனர்.
அதிகரித்து வரும் உடல்பருமன்
உடல் பருமன் பல வியாதிகளின் உற்பத்தி மையம்.குறிப்பாக உடல் பருமனால் இருதய நோய்கள் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகமாகிறது. சீரற்ற சத்துக்குறைந்த, அதிக சுவையுட்டப்பட்ட உணவுகளால் சிறுபிள்ளைகள் கூட உடல் பருமனால் அவதியுறுகின்றனர்.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆண்களின் (வயது வந்தவர்களில்) இடுப்பளவு 33.5 அங்குலத்திற்குக்(inches) குறைவாகவும், பெண்களில் 35.4 அங்குலத்திற்குக் (inches) குறைவாகவும் இருந்தால் உடல் பருமனோ, பரும னோடு தொடர்புள்ள கடுமையான நோய்களோ ஏற்படாது என்கின்றது மருத்துவ ஆய்வு ஒன்று.
உயிர் ஆபத்தான இதயநோய்கள்
நாம் உண்ணும் உணவின் காரணமாக ,குழந்தைப்பருவத்தில் இருந்தே ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்த படிதல் அளவு அதிகரிக்கும் போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். இப்போது எப்படி வாழ்கின்றோமோ, அதுதான் எதிர்காலத்தில் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும்.இதனாலேயே திடீர் மாரடைப்பு காரணமாக, இளவயதினர் இறக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
உடல் உழைப்பு இன்மை .உடல்பருமன், சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
கொலஸ்டிரால், ரத்தஅழுத்தம்
புற்று நோய்கள்
150க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் காணப்படுகின்றன. புற்றுநோயின் தாக்குதல் ஒருபுறமும் ஆங்கில மருத்துவச் சிகிச்சையின் தாக்குதல் மறுபுறமும் மனித உயிர்களைச் சிதைத்துச் சீரழித்த வருகின்றன.
காரணம் ‘உழைப்பற்ற வாழ்க்கைமுறை’ அதாவது, எல்லா வயதினரிடத்திலும் உடலுழைப்பு, உடலியக்க செயற்பாடுகள், உடற்பயிற்சிகள் குறைந்து விட்டன.
உணவுப் பழக்கங்களிலும் அதி தீவிர மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என்ன உண்கிறோம்? எவ்வளவு உண்கின்றோம்? எதற்காக உண்கிறோம்? என்ற தெளிவும், விழிப்புணர்வும் இல்லாமல், நோயை வரவைக்கும் துரித உணவுக்கலாசாரத்தில் கலந்து கரைந்துவிட்டோம்.
பாரம்பரிய நோய் தீர்க்கும் உணவுகளை மறந்து வாழ்கின்றோம்.
பயறுவகைகள், தானிய வகைகள், காய்கனிகள், கீரைகள், போன்ற அன்றாடம் உண்ண வேண்டிய உணவுப் பொருட்களின் பயன்பாடு குறைந்து, அரிசி,எண்ணெய், இனிப்பு ஆகியவற்றின் நுகர்வு மேலோங்கிவிட்டது. பற்றாக்குறைக்கு புகை,மதுபோதைப்பழக்கமும் பெருகி விட்டது.
முன்பு இயற்கை முறை விவசாயம் நிலவிய காலத்தில் விளைச்சல் குறைவு எனினும் ஆரோக்கியம் நிறைவாக இருந்தது.
செயற்கை உரங்களைப் பயன்படுத்தியபின் விளைச்சல் பெருகியது போலவே வியாதிகளும் பெருகி விட்டன. விளை நிலங்கள் நஞ்சடைந்துவிட்டன.
உணவுகளே விஷமாகி உயிரோடு விளையாடுகின்றன.உணவை விட மருந்து மாத்திரைகளை உண்பது அதிகமாகி விட்டது.
எப்படி இந்நோய்களை தவிர்க்கலாம்?(How to avoid these Diseases)
தனிமனித ஒழுக்கம், தனிமனித சுகாதாரம், மனநலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மனவலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ ஆரம்பித்தாலே, பாதிப் பிரச்சனைகளை தவிர்த்து விடலாம்.
*தினசரி 6/8 மணி நேரம் தூக்கம் என்பதைப் பழக்கமாக்க வேண்டும்.
*குறிப்பிட்ட நேரத்துக்குப் படுத்து எழும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
இதனால் காலையில் உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைக்கிறது.
*உடற்பயிற்சிக்குப் பிறகு, காலை உணவை உட்கொண்டு, சரியான நேரத்துக்கு வேலைத்தளத்துக்குச் செல்ல முடியும்.
*துடிப்பான வாழ்க்கைமுறை மூலமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
*உணவில், சிறுதானியங்கள், பலவிதமான கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
பர்கர் (Burger),பீட்சா(Pizza) உள்ளிட்ட துரித உணவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது இல்லை. குறைத்துக்கொண்டாலே போதுமானது.
அதோடு துரித உணவுகளை எடுக்கும் போது, இன்னும் அதிக உடற்பயிற்சி செய்து கலோரியைச் செலவழிப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வது உட்பட நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் என்றும் ஆரோக்கியமாக இளமையுடன் துடிதுடிப்பாக வாழலாம்.