கீழ் முதுகுவலியை நீக்கும் வழிகள் (Lower back pain Relief)
ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், சரியான ஓய்வு ,உடலை இயக்கநிலைகள், உடற்பயிற்சிகள், சிறந்த யோகாசனங்கள் மூலம் கீழ் முதுகுவலியை நீங்களாகவே சரி செய்து (Lower back pain Relief) கொள்ளலாம்.அல்லது அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நம் உடல் எப்பொழுதும் தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்ளும். அல்லது சரிப்படுத்த முயன்று கொண்டே இருக்கும். முதுகுவலி வந்துவிட்டதே என்று வருந்த தேவையில்லை. அவசரப்பட்டு உடனே அறுவை சிகிச்சை என்று போய்விடாதீர்கள்.முதலில் மேற்கூறியவைகளை சரி செய்து பாருங்கள்.
கீழ் முதுகுவலி ஏன் ஏற்படுகிறது ?
பொதுவாக தசை, தசைநார், நரம்பு, முதுகெலும்பில் ஏற்படும் காயங்களால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. இருக்கும் போது அல்லது நிற்கும் போது நம் உடலை வைத்துக் கொள்ளும் தவறான நிலை ,லும்புத்தேய்மானங்களால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது.
- அதிக டென்சன், அதிகமாக கோபப்படுதல், அவசரமாக வேலைகளை செய்தல், பரபரப்புடன் இருத்தல் போன்றவை
- அதிகநேரம் ஒரே மாதிரியான நிலையில் இருத்தல்.அல்லது தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில அமர்ந்து வேலை செய்தல், உதாரணத்திற்கு அதிகநேர கணணிபாவனை.
- பாரமான சுமைகளை தூக்குதல்.
- தவறான முறையில் பாரத்தை தூக்குதல்.
- கடினமான வேலைகள் செய்தல்
- ஓய்வின்மை
- எதிர்பாராத விபத்தினால் முதுகில் அடிபடுதல்
- ஆரோக்கியமற்ற உணவுகள், குறிப்பாக கல்சியம் ,விற்றமின் D குறைபாடு
வயது ஆக ஆக தசைப்பிடிப்பு, நாள்பட்ட வலி,எலும்புத்தேய்வு போன்றன நம்மைத் பாதிக்கின்றன.இவற்றை கவனிக்காது விட்டால், கீழ்முதுகில் வந்த வலியானது, பிட்டம், கால்கள், பாதம் என பரவும்
இதனால் இது உடல் உறுப்புகளின் சுதந்திரமான இயக்கங்களுக்கு ஊறு விளைவிக்கிறது.நமது அன்றாடம் செயற்பாடுகளை செய்யமுடியாமல் சிரமம் ஏற்படும்.
கீழ் முதுகுவலி ஏற்படாமல் இருக்க வழிகள்
அதிக மென்மையான மெத்தைகளில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.இதே போல் சோபா , குசன் கதிரைகளை விடுத்து நிலையான உறுதியான மரக்கதிரைகளில் இருக்கவும். முடிந்தால் நிலத்தில் இருங்கள்.அது மிகவும் சிறந்த வழி.
சரியான ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல் முக்கியமானது. உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தலும் முக்கியமானது.
வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
கீழ் முதுகு வலியால் அவதிப்படும்போது மல்லாந்து படுப்பதில் ஒருவித அசௌகரியம் ஏற்படுவதால் முழங்காலை சற்று மடக்கி, ஒருபக்கமாக சரிந்துபடுக்கவும்.
இரு கால்களுக்கு இடையே தலையணை வைக்கவும். மல்லாந்து படுப்பதானால், தொடைகளின் கீழ் தலையணை அல்லது சுருட்டப்பட்ட துண்டினை (TOWEL) வைப்பதன் மூலம் கீழ் முதுகின் மீது ஏற்படும் அழுத்தம் குறைகிறது. நிலையான உறுதியான மேற்பரப்பின் மீதுபடுக்கவும்.
உயரமான குதிகால் செருப்புகள், ஷூக்கள் அணிவது முதுகெலும்பு வட்டுகளில் சிதைவை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைப்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் உங்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். எட்டி எடுக்க எத்தனிக்கும் போது கீழ்முதுகுக்கு அதிக அழுத்தம் கொடுக்காது தவிர்க்கலாம்.
கணினி திரை கண்களின் மட்டத்திற்கு சற்று குறைவான உயரத்தில் வைக்கவும்.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகள்
எலும்புகளின் நல்ல ஆரோக்கியத்துக்கு உணவு முறை முக்கியமான ஒன்றாகும்.போதுமான கல்சியம், பொஸ்பரஸ் சத்துள்ள உணவை உண்ணவும். மீன், இறைச்சி, பால் பொருட்கள், கோதுமை, பார்லி, சோளம் போன்ற தானியங்கள், ஓட்ஸ், பரட்டைக் கீரை (KALE), பருப்பு வகைகள் ,சிவப்பு முள்ளங்கி, போன்றவற்றில் கல்சியம், பொஸ்பரஸ் ஆகிய இரு கனிமங்கள்அதிகம் உள்ளன.
விற்றமின் D க்கு உடம்பில் சூரியஒளி படுவது இன்றியமையாததாகும்.குளிர்நாடுகளி இருப்பவர்கள் விற்றமின் D ஐ உணவின் மூலம் அல்லத D-vitamin supplement ஆக எடுத்துக் கொள்ளலாம்.
கீழ்முதுகு தசைகளின் நல்ல ஆரோக்கியத்துக்கு இரவில் நன்றாக ஓய்வெடுப்பது அவசியமானது.
கீழ் முதுகு வலிக்கான உடற்பயிற்சிகள்
கை, கால்களை மெதுவாக நீட்டி மடக்குதல், குறைவான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்பாடுகளான நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் தசைகள் வலுப்பெறுகின்றன. இறுக்கமாவது தடுக்கப்படுகிறது.
- கடினமான மற்றும் முடிச்சு ஏற்பட்ட முதுகுத் தசைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மசாஜ் செய்யவும்.
- கை கால்களை நீட்டி மடக்குதல்
- வலுவூட்டும் உடற்பயிற்சிகள்
- முதுகு மற்றும் முதுகெலும்புகளைத் திறமையாகக் கையாளுதல்
பொதுவாக எல்லா யோகாசனம் என்பது ஒட்டு மொத்த உடலுக்கும் பலன் அளிக்கும் பயிற்சி முறை. எனினும் மர்ஜாரி ஆசனம் , தடாசனம் , பதங்காசனம் மற்றும் சிசுபாலாசனம் போன்ற ஆசனங்கள் கீழ் முதுகுவலிக்கு நல்ல பலன்களை தருபவையாக இருக்கின்றன.