முருங்கைப் பூ உணவு செய்முறைகள் (Murungai poo recipe)

எண்ணிலடங்கா பலன்களை அள்ளித் தரும் முருங்கைப்பூவை உணவில் (Murungai poo recipe) சேர்ப்போம்.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.

பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால்  தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன.

இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை  மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது. 

ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.   

முருங்கைப்  பூ பொரியல் (Murungai poo recipe – poriyal)

முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.முருங்கை பூவில் வடை, ரசம்,  பொரியல், வத்தக்குழம்பு, சூப் என விதம் விதமாக சமைக்கலாம்.

மாதவிடாய் வயிற்றுவலியை போக்கும் ஆற்றல் பெற்றது முருங்கை பூ.

முருங்கை இலையில்  பொரியல் செய்வது போல் தான் முருங்கை பூவிலும் செய்யபோகின்றோம்.

தேவையான பொருட்கள்

3/4 பேர் சாப்பிடலாம்.
  1. முருங்கை பூ  – 3 கப்
  2. சின்ன வெங்காயம் – 10
  3. பச்சை மிளகாய் / செத்தல் மிளகாய் – 4
  4. தேங்காய் துருவல்- 1கைப்பிடி 
  5. உப்பு –  1 தே.கரண்டி அல்லது சுவைக்கேற்ப
  6. தாளிக்க – கடுகு,எண்ணெய்,உளுந்து பருப்பு(கருப்பு உளுந்து பருப்பும் சேர்க்கலாம்), கடலை பருப்பு, கறிவேப்பிலை

பத்து நிமிடங்களில் சமைத்திடலாம்.

செய்முறை

1.முருங்கைப்பூவை கழுவி வைக்கவும்.

2.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ,காய்ந்ததும் கடுகு,சிறிதாக வெட்டிய வெங்காயம், உளுந்து ,கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3 வெங்காயம் சுருண்டு வதங்கியதும், அதில் சிறிதாக வெட்டிய மிளகாய் , முருங்கைப்பூவை சேர்த்து  கிளறி3/4நிமிடங்கள் அவிய விடவும்.

4.அதனுடன் உப்பு,தேங்காய் துருவல் சேர்த்து கிளறி 3/4 நிமிடங்கள் வரை வேக விட்டு இறக்கவும்.

முருங்கை பூ பொரியல் சாதத்துடன் சாப்பிட  தயார்.

விரும்பினால் இதனுடன் இறுதியில்  முட்டை சேர்த்து கிளறி இறக்கலாம்.

முருங்கை பூ கூட்டு (Murungai poo recipe – Kooddu )

தேவையான பொருட்கள்

முருங்கை பூ – 4 கப்

பருப்பு- ½  கப்

தேங்காய் துருவல் -1 கப்

வெங்காயம் – 1 பெரிது

மிளகாய்த்தூள்– 1 மேசைக்கரண்டி 

மிளகு– 1 தேக்கரண்டி 

 சீரகம் – 1 தேக்கரண்டி 

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

பூண்டு – 4 பற்கள்

கடுகு -1 தேக்கரண்டி 

எண்ணெய்

கறிவேப்பிலை- சிறிதளவு

உப்பு- சுவைக்கு ஏற்ப

செய்முறை

1. பாசிப்பருப்பு,மைசூர் பருப்பு அல்லது கடலைப் பருப்பு ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.விரும்பிய பருப்பை அவித்து வைக்கவும்.

2.தேங்காய், பூண்டு, மிளகு ,சீரகத்தை  சிறிது நீர் விட்டு அரைக்கவும்.

3.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ,காய்ந்ததும் கடுகு,சிறிதாக வெட்டிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4.வெங்காயம்  கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியதும் , அதில்  முருங்கைப்பூ ,மஞ்சள்,உப்பு சேர்த்து கிளறவும்.

5.மிதமான தீயில் வைக்கவும்.

6.அதில் அவித்தா பருப்பு ,மிளகாய்த்தூள்  சேர்த்து ,பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை அதனுடன் கலக்கவும்.

7. அரை கப் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து கெட்டியான பதத்தில் இறக்கவும்.

சுவையான ஆரோக்கிய முருங்கைப்பூ கூட்டு தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

முருங்கைப் பூ பால்

முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக  காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்.கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கர்ப்பப்பைக்குறைபாடுகள் , குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும்.
உடற்சூடு தணிக்கும் ,உடலிற்கு வலிமைதரும்.
வயிற்றுவலி,கண்வலியை போக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *