நவராத்திரிக்கு ஆரோக்கியமான நைவேத்தியம் (Navarathri recipes)
நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு,தானிய வகையில் நைவேத்தியங்கள் (Navarathri recipes) சமைத்து தேவிக்கு படைத்து முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.
காரணம் இந்திய தட்பவெட்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக நோய் எதிர்ப்புசக்தி தேவைப்படும்.
இதனாலேயே நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு விதமான நைவேத்தியம் (Navarathri recipes) படைத்து தேவியை வணங்கி வந்துள்ளார்கள்.
நவராத்திரி 9 நாளுக்கும் ஏற்ற ஆரோக்கியமான நைவேத்திய செய்முறைகள் (Navarathri recipes)
முதல் நாள்
கல்கண்டு சாதம்
ஒரு டீஸ்பூன் நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை வறுத்து வெந்நீரை விட்டு நன்றாக அலசவும். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து, களைந்த அரிசியைப் போட்டு வேகவிடவும்.
கடாயில் கல்கண்டைப் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். இதில் சாதம், பருப்பைக் கொட்டி கைவிடாமல் கிளறவும். பிறகு, சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.
இரண்டாம் நாள்
எள்ளு சாதம்
எள்ளை வறுக்கவும். பிறகு, எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து, மிளகாய், உளுந்து, தேங்காய்த்துருவல் சேர்த்து சிவக்க வறுத்து, எள் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.
சாதத்தில் பொடித்த எள் பொடி, உப்பைத் தூவி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
மூன்றாம் நாள்
காராமணி கார சுண்டல்
காராமணியில் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். தண்ணீரை வடித்து அதில் இஞ்சி விழுது, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை கலந்து எண்ணெயில் கடுகு தாளித்துக் கலக்கவும்.
நான்காம் நாள்
சர்க்கரை பொங்கல்
சிறிது நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை லேசாக வறுத்து, 6 கப் தண்ணீரில் நன்றாகக் குழைய வேகவிடவும். பிறகு அதில் பால் விட்டு, கொதித்ததும் கெட்டியாக வரும்போது தீயைக் குறைத்து, தயாராக வைத்திருக்கும் வெல்லப் பாகை சேர்த்து, சாதத்தை போட்டு கிளறவும். நடுநடுவே நெய் சேர்க்கவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.
ஐந்தாம் நாள்
தயிர் சாதம்
சாதத்தை குழைவாக வடித்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும் போதே உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.
பின் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முந்திரி, திராட்சை போட்டு வறுத்து தாளித்துக் கொட்டி, தயிரை விட்டு கலக்கவும்.
ஆறாம் நாள்
ராஜ்மா சுண்டல்
ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, உப்பு சேர்த்து, வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு எண்ணெயில் கடுகு தாளித்து, வறுத்து அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து, இதனுடன் வேகவைத்த ராஜ்மாவை கலந்து இறக்கவும்.
ஏழாம் நாள்
கடலைப்பருப்பு புதினா சுண்டல்
கடலைப்பருப்பை உப்பு சேர்த்து, வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். புதினாவை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்த கடலைப்பருப்பை போட்டு வதக்கி, புதினா, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எட்டாம் நாள்
கொண்டக்கடலை சுண்டல்
கொண்டக்கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கொள்ளு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துண்டுகளை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்த கொண்டக்கடலை, அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி மிளகுத்தூள் தூவவும்.
ஒன்பதாம் நாள்
வெல்ல புட்டு
புழுங்கலரிசியை சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், நீர் சேர்த்து தயிர் சாதம் போல் தளர கலந்து, துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் நன்றாக கட்டியில்லாமல் தேய்த்துக் கொள்ளவும்.
நெய்யில் தேங்காய், முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து முத்துப் பாகு காய்ச்சவும்.
இதில் உதிர்த்த ரவை, தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி, நெய் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.
பாசிப்பருப்பு சுண்டல்
பாசிப்பருப்பை சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, இட்லி தட்டில் பரப்பி, வேக வைக்கவும்.
கடாயில் நெய் விட்டு, உரித்த பட்டாணி, நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு, வதக்கிய பட்டாணி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாதம்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
சாதத்தை பாத்திரத்தில் போட்டு தாளித்தவற்றை கொட்டி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். பிறகு எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.