ஊட்டச்சத்து மா செய்முறை (Nutrition Powder)
குழந்தைகள் வளர ஊட்டச்சத்து (Nutrition Powder) மிக அவசியம். அந்தக் காலத்தில் இயற்கையான உணவை உண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக வளர்ந்தனர்.ஆனால், இப்போது..??
இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க ஊட்டச்சத்து மா (Nutrition Powder) போன்ற உணவு அவசியமாகிறது.
இதைத் தயாரிப்பது மிகவும் இலகு. எல்லோரும் எளிதாக் செய்து விடலாம். கொஞ்சம் நேரம் தான் தேவை. வீட்டிலேயே தயாராகும் அருமையான உணவு. குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் சத்தான பானமாக இருக்கும்.
கடைகளில் வாங்கும் ஊட்டச்சத்து பவுடர்கள் காலாவதியானதா? கலப்படமானதா? என்று பயப்படவும் தேவையில்லை.
குழந்தைகளுக்கு நல்ல ஊட்டசத்து உணவு. எக்ஸ்ட்ரா பிரெய்ன்… எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்கும். நன்றாக ஆரோக்கியமாக வளருவார்கள்.
விசேடமாக , அது வேண்டாம் இது வேண்டாம் என ஒதுக்கும் குழந்தைகளுக்கு சிரண்ட உணவு. எல்லாவற்றையும் அரைத்து மாவாக்கி கொடுப்பதால் எல்லா சத்துக்களையும் இலகுவாக உடலில் சேர்த்து விடலாம்.
குறைந்த செலவில் சத்துமிக்க ஊட்டச்சத்து பவுடரை வீட்டிலேயே சுவையாக தயாரிக்கலாம்.
புரதம், கொழுப்பு, மாச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, விற்றமின் ஏ, பி1, பி2, நையாசின், பி6, போலிக் ஆசிட், கோலின், விற்றமின் சி, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின்போன்ற சத்துக்கள் இந்த மாவில் கிடைக்கும்.
தேவையான பொருள்கள் (Nutrition Powder)
கேழ்வரகு – 150 கிராம்
கம்பு – 150 கிராம்
சோளம் – 100 கிராம்
சம்பாக்கோதுமை 100 கிராம்
மக்காச்சோளம் 100 கிராம்
புழுங்கல் அரிசி – 75 கிராம்
ஜவ்வரிசி – 25 கிராம்
பார்லி – 50 கிராம்
பாசிப்பயறு – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
சோயாபீன்ஸ் – 20 கிராம்
நிலக்கடலை – 20 கிராம்
முந்திரிப் பருப்பு – 5 கிராம்
பாதாம் பருப்பு – 5 கிராம்
ஏலக்காய் – 2 கிராம்
ஊட்டச்சத்து மா (Nutrition Powder) செய்யும்முறை
கேழ்வரகு, கம்பு, சோளம், பாசிப் பயறு ஆகியவற்றைச் சுத்தம் செய்து நீரில் ஒருநாள் ஊற வைக்கவும். பின்னர் துணியில் முடித்து முளைக்கட்ட வைக்க வேண்டும்.
(ஓரிருநாளில் முளைகட்டி விடும்) சம்பா கோதுமை, மக்காச் சோளத்தை 2 நாள் ஊறவைத்து, பின்னர் வெயிலில் ஓரிருநாள் காயவைக்க வேண்டும்.
பின் எல்லாப் பொருள்களையும் தனித்தனியாக மிதமான சூட்டில் தீய்ந்துவிடாமல் வறுக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
இதில் முளைவிட்ட பயறுகள், முளை விட்ட தானியங்களை சேர்த்து செய்தால் இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.
ஊட்டச்சத்துமாவை (Nutrition Powder) இப்படி பல விதமாக உங்கள் விருப்பம் போல் சாமை, தினை,வரகு தானியங்களையும் உழுந்து, கொண்டைக்கடலை ,சோயா,போன்ற பருப்பு வகைகளும் சேர்த்துக் செய்து கொள்ளலாம்.
இதில் சுவைக்காக பாதாம் பருப்பு, பார்லி, ஏலக்காய், ஜவ்வரிசி, முந்திரிப்பருப்பை கொஞ்சம் கொஞ்சம் எடுத்து நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
ஊட்டச்சத்து மாவை பயன்படுத்தும் முறை
- காலையிலும், மாலையிலும் சூடான பாலிலோ, தண்ணீரிலோ நாம் தயாரித்து வைத்துள்ள சத்து மாவை (Nutrition Powder) தேவைக்கேற்ப கலந்து மிதமான தீயில் தீய்ந்து விடாமல் சூடாக்கி சர்க்கரை சேர்த்து பருகலாம்
- ஊட்டச்சத்து மாவுடன் துருவிய தேங்காய்ப்பூ சேர்த்து சிறிது நீர் விட்டு குழைத்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ஊட்டச்சத்து மா லட்டு செய்து சாப்பிடலாம்.
- உளுத்தங்களி செய்வது போல, ஊட்டச்சத்து மாவில் தேங்காய்ப்பால் ,சர்க்கரை சேர்த்து களி செய்து சாப்பிடலாம்.மிகவும் சுவையாக இருக்கும் .
- ஊட்டச்சத்து மாவுடன் தேங்காய்ப்பூ சர்க்கரை சேர்த்து நீர் விட்டு குழைத்து கொழுக்கட்டை போல பிடித்து, அவித்து சாப்பிடலாம்.
இவற்றை காலை உணவாக அல்லது இடைநேர பசிக்கு செய்து சாப்பிடலாம்.
இயற்கையான ஆரோக்கியம் நிறைந்த ஊட்டச்சத்துமாவை உணவில் சேர்ப்போம். குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காப்போம்.
இது இலகுவானது. சுவையானது. சத்தானது!!