பத்மாசனம் செய்ய பழகுவோம் (Padmasana)

பத்மாசனம் (Padmasana) அனைத்து ஆசனங்களுக்கும் அரியாசனம். எண்பத்து நாலாயிரம் ஆசனங்களின் தலையாசனம். தவத்துக்கோர் தனியாசனம். ஆன்மாவை ஈடேற்றவந்த அமராசனம். கர்மவினைகளைப் போக்கும் கமலாசனம் என்றெல்லாம் யோகிகள்இதனை  சிறப்பித்துச் சொல்லுவார்கள்.
அதுமட்டுமன்றி மனிதனை மானிடத் தன்மைகளோடு வாழ்வித்து, மானுடத் தன்மைகளிலிருந்தும் மேம்படுத்தி அவனைத் தேவனாக்கி வைக்கின்ற தேவாசனம் என்றும் இதனை ஞானிகள் போற்றுவார்கள்.

பத்மாசனம் (Padmasana) செய்யும் முறை

தரையில் ஒரு நல்ல விரிப்பை (Yoga mat) விரித்து அதில் அமர்ந்து கொள்ள வேண்டும். வலது பாதம் இடது தொடையின்மேலும், இடதுபாதம் வலது தொடையின் மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும்.

பாதங்கள் மலர்ந்த தாமரை மலர்போலத் தோற்றம் தருவதால், இதனைப் பத்மாசனம், கமலாசனம், தாமரை ஆசனம் என்று அழைப்பார்கள். அமரும்போது எத்திசையை நோக்கி வேண்டுமானாலும் அமரலாம்.

ஆனாலும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது உத்தமம். வளையாமல் நிமிர்ந்து அமரவேண்டும். அதேசமயம் உடம்புக்குத் தேவையற்ற விறைப்பைத் தரவேண்டாம்.

பத்மாசனம் செய்வதால் அடிவயிற்று பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும்.

பத்மாசனத்தில் (Padmasana) அமர்ந்து கையின் கட்டைவிரலின் முதல் அங்குலாஸ்தியை ஆள்காட்டி விரலின் நுனி தொடுமாறு அமைத்துக் கொள்வதை சின்முத்திரை என்று சொல்லுவார்கள்.

இவ்வாறு இரண்டு கைகளையும் சின்முத்திரையிட்டு முழங்கால் முட்டிகளின்மேல் கைகளை நீட்டிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

நமது கையினுடைய கட்டை விரலில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கின்றது. சிந்தனையின் சலனங்களைக் கட்டுப்படுத்துவதால் இதற்குச் சின்முத்திரை என்று பெயரிட்டார்கள்.

sin mudra,padmasana,annaimadi.com

இப்படிப் பத்மாசனத்தில் கைகளைச் சின்முத்திரையிட்டு அமர்ந்து கொண்டு, கண்களை மூடி யோகாசனங்களை நமக்குக் கற்றுக் கொடுத்த குருவை வணங்க  வேண்டும். பொதுவாக யோகாசனங்களைப் பயிலுகின்றபோது அனுசரிக்கப்படும் பொதுவிதி இது. தெய்வநம்பிக்கை உடையவர்கள் தங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கிக் கொள்ளலாம்.

யோகாசனங்களைப் பயிலத் தொடங்குவதற்கு முன்னால் ,முதலாவது ஆசனமாகப் பத்மாசனம் போட்டு, குருவணக்கம் அல்லது கடவுள் வணக்கம் செய்யப்படுகின்றது.

ஆசனங்கள் செய்யத் தொடங்குபவர்களுக்குக் கற்பிக்கப்படும் முதல் ஆசனம் இதுதான். ஆகவே ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம்.

padmasana,annaimadi,yogasana

 எந்த ஒரு யோகாசனத்தையும் கடினமாக உடலை வருத்திக்கொண்டு பயிலக்கூடாது. ஆகவே பத்மாசனம் போட்டுக் கொஞ்சநேரத்திலோ, அதிக நேரத்திலோ கால்கள் வலிக்கும்போது கால்களை பிரித்துவிட வேண்டும்.

பத்மாசனம் செய்வதால் என்ன பயன்கள்?

 • பத்மாசனத்தில் இருக்கின்றபோது நரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது.
 • நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது.
 • நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது.
 • கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது.
 • இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது.
 • மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன.மன உறுதி ஏற்படும்.
 • மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகிறது.
 • மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன.
 • கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.
 • நன்றாக  பசி எடுக்கும்.
 • வாத நோய் தீரும்.
 • கோபம் குறையும். 

Padmasana,benefits of padmasana,yoga,yogamat,annaimadi.comCheck Price

சிலருக்கு முதலில் வலது காலைத்தூக்கி இடது தொடைமேல் அமைத்துக்கொண்டு அதன் பின்னர் இடது காலைத்தூக்கி வலது தொடைமேல் பொருத்தமுடியாது சிரமப்படுவார்கள். அவர்கள் முதலில் இடது பாதத்தைத் தூக்கி வலது தொடைமேல் பொருத்திக் கொண்டு அதன்பின்னர் வலது பாதத்தைத் தூக்கி இடது தொடையின்மேல் பொருத்திக் கொள்ளலாம். இதில் பிழையேதுமில்லை. இருப்பினும் முதலில் வலது பாதத்தை எடுத்துச் செய்வது சுபமானது.

இன்னும் சிலர் ஒரு பாதத்தைத் தூக்கிப் பொருத்தி விடுவார்கள். மற்றப் பாதத்தைத் தூக்கிப் பொருத்த முடியாமல் போய்விடும்.

அப்படிப் பட்டவர்கள் ஒரு காலைமட்டும் தூக்கிப் போட்டுக்கொண்டு வணக்கத்தைத் தொடங்கலாம். இது அர்த்த பத்மாசனம் எனப்படும்.பின்னர் படிப்படியாக மற்றக் காலையும் தூக்கி அமைத்துக்கொண்டு பழகிக்கொள்ளலாம்.

சிலநாட்கள் பயிற்சிக்குப் பின்னர் இரண்டு கால்களும் சரியான இணக்கத்துக்கு வந்து,பத்மாசனம் சரியாக அமைந்துவிடும்.

இவ்வாசனத்தை ஆண், பெண் இருபாலரும் வயது பேதமில்லாமல் செய்யலாம். கர்ப்பிணித் தாய்மார்கள் கூட இப்படிப் பத்மாசனத்திலோ அல்லது அர்த்த பத்மாசனத்திலோ இருந்து பழகுவதும், தியானம் செய்வதும் அவர்களுக்கு மட்டுமன்றி கருவில் இருக்கும் சிசுவிற்கும்  மிகவும் நல்லது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *