கணையமும் சர்க்கரைநோயும் (Pancreas and diabetes)
மருத்துவ உலகிற்கும் தனி மனிதர்களுக்கும் பெரும் சவாலாக இருக்கும் நீரிழிவுநோய்க்கு அடிப்படை காரணமாக இருப்பது கணையத்தில் (Pancreas) சுரக்கும் இன்சுலின் ஹார்மோனின் சமநிலையின்மை தான்.
அதாவது கணையம் பாதிக்கப்படுவதால் ,இன்சுலின் முற்றாக சுரக்கா விட்டாலோ அல்லது இன்சுலின் குறைவாக சுரந்தாலோஅல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாவிட்டாலோ நீரிழிவு நோய் வரும்.
அதேபோல் நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு அவசியமான பணியைச் செய்வதும் கணையத்தின் (Pancreas) முக்கியமான பணி.
கணையத்தில் சுரக்கிற ஹார்மோன்(Gastrin ) , நாம் சாப்பிடுகிற உணவு செரிப்பதற்கு மிகவும் உதவி செய்கிறது. இதனை ‘கணைய நீர்’ என அழைப்பார்கள்.
பொதுவாக, நாம் உணவு சாப்பிடும் போதெல்லாம், உடலுக்கு தேவையான இன்சுலினை கணையம் (Pancreas) சுரந்து கொண்டே இருக்கும்.

கணைய அழற்சி எப்படி ஏற்படுகிறது (Inflammation of the pancreas)
கணையத்தில் சுரக்கும் செரிமான நீர் கடுமையானது. இயல்பை மீறி அது கணையத்தில் தேங்குமானால் கணையத்தையே (Pancreas) அழித்துவிடும். அந்த செரிமான நீர் உடனுக்குடன் முன் சிறுகுடலுக்கு சென்றுவிட வேண்டும். இல்லையெனில் கணைய அழற்சி ஏற்பட்டு கணையம் பாதிக்கப்படும்.
ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதால், கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகள், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். ரெட் மீட் (Red meat) எனப்படும் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக, மது அருந்துவோருக்கு கணைய குழாயில், ஒருவகை புரதப்பொருள் படிந்து, நாளடைவில் அந்த குழாயை அடைத்துவிடும்.
அப்போது, கணையத்தில் சுரக்கும், செரிமான நீர், கணையத்தில் தேங்கி கணையத்தில் உள்ள செல்களை அழித்து, கணையத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும்.
கணையம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் (Symptoms of pancreatic infection)
வயிற்றில் கடுமையான வலி ஏற்படும். இந்த வலி, மேல்வயிற்றில் ஆரம்பித்து முதுகுக்கு பரவும். சிலருக்கு தொப்புளை சுற்றி வலி இருக்கலாம்.
அதிகப்படியான, மது மற்றும் புகைப்பழக்கத்தால், கணையத்தில் (Pancreas)புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு எதற்கும் கட்டுப்படாது. அதனால் புகைப்பழக்கம், மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
உடல் பருமனும் கணையபாதிப்பும் (Obesity and pancreatic damage)
உடல் பருமனாக இருப்போருக்கு, இன்சுலின் (Insulin) தேவை அதிகரிக்கும். கணையம் நிறைய இன்சுலினை சுரந்து, சுரந்து, நாளடைவில் களைத்து விடும்.
விளைவாக, ஒருகட்டத்தில், கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போய், இதுவே நீரிழிவு நோய் (Diabetes)வருவதற்கு காரணமாகிறது.
பதப்படுத்தப்பட்ட, மைதா, சர்க்கரை போன்ற அதிகம் சுத்தகரிக்கப்பட்ட, நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.
இந்தச் செயல்பாடு காரணமாக, கணையம் பாதிக்கப்படலாம். கிளைசமிக் இண்டெக்ஸ் அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கணையத்தை எப்படி பாதுகாப்பது (To protect the pancreas)
அதிக உடல் எடை, உடல் பருமன் கணைய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யும்போது, உடல் உறுப்பு, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள்(Vitamin) சென்று சேருவது எளிதாகும். இதனால், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகச் செயல்படும்.
மது அருந்துவதை, தவிர்க்க வேண்டும்.
பித்தப்பை கற்கள் ஏற்படாமல் காத்துக் வேண்டும்.
மஞ்சள் காமாலை, அம்மை, ‘ருபல்லா’ போன்ற நோய்களுக்கு, குழந்தை பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
அதோடு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது மட்டுமல்லாமல், வாழ்வியல் முறையில் சில மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.
வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடங்களாவது, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
கார்போஹைட்ரேட் போலவே, புரதச்சத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்குத் தேவையான அளவு மட்டுமே புரதச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப் புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதைச் செரிப்பதற்கு, கணையம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
விலங்குக் கொழுப்பு, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்த காய்கறி, முழுதானியம், தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பாலுக்குப் பதிலாக, தாவரங்களிலிருந்து பெறப்படும் பாலை பயன்படுத்தலாம்.
வருண முத்திரை,பச்சிமோத்தாசனம், தனுராசனம் (Thanurasana)போன்ற யோகாசனங்கள் கனிய செயற்பாட்டை அதிகரிப்பதோடு அதனை பாதுகாத்தும் கொள்ளும்.