பருத்தித்துறை வடை (Paruththithurai-vadai)
ஒரிஜினல் பருத்தித்துறை வடை செய்முறை
மிக சுவையான அருமையான பிரசித்தமான பலகாரம் பருத்தித்துறை வடை (Paruththithurai-vadai) என அழைக்கப்படும் தட்டைவடை செய்வோம். பிறந்தநாள் ,கல்யாணம், பண்டிகைகள் என எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் ஏற்றது இது.
மிக உறைப்பாக அருமையான சுவையில் இருக்கும். ஆனாலும் குழந்தைகளுக் கூட விரும்பி உண்பார்கள்.உண்ண உண்ண தெவிட்டாது. பின்னேர தேநீருக்கு ஏற்றது. இடைநேரப்பசியை போக்கும்.
காற்று போகாத கண்ணாடி போத்தல்களில் போட்டு வைக்கலலாம்.ஏறக்குறைய ௧ மாத காலத்திற்கு வைத்து உண்ணமுடியும். விரைவில் கெடாது.
தேவையான பொருட்கள்
- உழுந்து – 1 கிலோ கிராம்
- அவிக்காத கோதுமை மா – 200 கிராம்
- அவித்த கோதுமைமா – 200 கிராம்
- வெங்காயம் – 2 பெரிது
- காய்ந்த மிளகாய் – 25
- பெருஞ்சீரகம் – 2 மே.க
- கறிவேப்பிலை – 2 கையளவு
- உப்பு – 1 மே.க அல்லது சுவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிக்க
பருத்தித்துறை வடை செய்முறை (paruththithurai-vadai recipe)
1.உழுந்தை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறிய உழுந்தை தோல் நீக்கி நீரில்லாமல் வடித்துகொள்ளவும்.
3.வெங்காயம், கருவேப்பிலையை பொடியாக வெட்டி வைக்கவும்.
5. உழுந்துடன் அவித்த , அவிக்காத மா, செத்தல் தூள், வெங்காயம், கருவேப்பிலை, பெரியசீரகம், உப்பு போட்டு சேர்த்துக் கலக்கவும்.
6.உழுந்தில் உள்ள நீர், வெங்காயம், உப்பு போன்றவை நீர் விடும் என்பதால் அதிக நீர் தேவைப்படாது.தேவை எனில் மிக குறைந்த அளவு நீர் விட்டுக் குழைக்கவும்.மா கையில் ஓட்டக் கூடாது.
7.கையால் நன்றாக கலவையை அடித்து பிசையவும்.
8.பிசைந்தமாவை இவ்வாறு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
9.உருட்டிய வடைமா உருண்டைகளை மெல்லியதாக வட்டமாக தட்டவும். ஒரு பேணியில் மேல் வைத்து பொலித்தீன் பேப்பரில் தட்டலாம்.

10.கொஞ்ச வடைகளை தட்டி வைத்து விட்டு, எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் சூடானதும் வடைகளைப் போட்டு இரு பக்கமும் திருப்பி பொரித்து எடுக்கவும்.
ஒரு பகுதி பொரிவதற்குள் அடுத்த பகுதியை தட்டி வைக்கலாம்.
இதோ எந்த கொண்டாட்டத்திற்கும் ஏற்ற எல்லோருக்கும் பிடித்த உறைப்பான தட்டவடை.
குறிப்பு முள் முருக்கமிலை போன்ற இலையில் வைத்து தட்டினால் நல்லது.தற்போது உயிர் கருவேப்பிலை கிடைக்காததால் உலர்த்திய கருவேப்பிலை பயன்படுத்தியுள்ளேன்.
பச்சைகருவேப்பிலை என்றால் மணம் நன்றாக இருக்கும்.பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
உப்பு,வெங்காயம் நீர் விடும் என்பதால் சுடஆரம்பிக்க சற்று முன்னர் மாவைக் குழைப்பது நல்லது.