இலகுவான முறையில் பயற்றம் பணியாரம் (Payatham paniyaram recipe)
வீட்டு கொண்டாட்டங்களுக்கு செய்யப்படும் இனிப்பான பலகாரங்களில் எல்லோருக்கும் பிடித்த பயற்றம் பலகாரமும் ஒன்று .ஆனால் இது கடினமான செய்முறை (Payatham paniyaram recipe) என்று நினைத்து பலரும் செய்வதில்லை.
நீங்கள் நினைப்பது போல் கடினம் இல்லை. பல படிமுறைகள் உள்ளது. அவ்வளவு தான்.
இலகுவான செய்முறையில் மிகவும் சுவையான பயற்றம் பணியாரம் செய்வோம்!
நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அரிசி – 1/4 கிலோ
பச்சைப்பயிறு – 1/2 கிலோ
சீனி – 3/4 கிலோ
ஏலக்காய் – 10
துருவிய தேங்காய் – 1
மைதா – 1/4 கிலோ
எண்ணெய் – 1/2 லிட்டர்
உப்பு – சிறிதளவு
செய்முறை (Payatham paniyaram recipe)
பச்சரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கி வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பயறை (தோல் நீக்கி உடைத்த பயறு) வறுத்து அதனையும் அரைத்து மாவாக்கவும்.
இரண்டுவகையான மாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் சீனியை போட்டு, சீனி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
அதில் ஏலக்காயை பொடியாக்கி சீனியுடன் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்து பாகு கொதித்து ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாகப் போட்டு கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு கிளறவும்.
பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் கோதுமை மா அல்லது பச்சை அரிசிமா வுடன், உப்பு, சிறிது மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி மறுபக்கம் வேக விடவும்.
இதோ அருமையான சுவையில் பயத்தம் பணியாரம் தயாராகி விட்டது.
3,4 வாரங்கள் வரை, காற்று புகாத பாத்திரத்தில் பாதுகாத்து வைத்து சாப்பிட கூடியது பயத்தம் பணியாரம்.
பனைவெல்லம் அல்லது சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியத்துக்கு நல்லது.சுவையாகவும் இருக்கும்.
குறிப்பு: ஒரு கம்பி பதம் என்பது பாகு காயும் போது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பாகை தொட்டு ஒட்டிப் பார்த்தால் ஒரு நூல் போல இழுபடும்.
வீடியோ செய்முறையையும் இங்கே பார்க்கலாம்.
பயற்றம் பணியாரம் திருமணம், பிறந்தநாள், கிறிஸ்துமஸ் , பூப்புனித நீராட்டுவிழா, தீபாவளி, புதுவருட பிறப்பு என எல்லாவதமான கொண்டாட்டங்களுக்கும் ஏற்ற இனிப்பு பலகாரம்.
பயற்றம்மா, தேங்காய், பனைவெல்லம் சேர்ந்த கலவை அபரிமிதமான சுவையைத் தரும். ஆரோக்கியமான சிற்றுண்டியும் கூட.
ஏலக்காய் சேர்க்காமல் மிளகு, சின்ன சீரகம் சேர்த்து செய்யலாம்.அதுவும் சற்று வேறுவிதமாக சுவையாக இருக்கும்.