உடனடியாக செய்யக்கூடிய மொறு மொறு கச்சான் (Peanut masala)
மாலையில் சூடான டீ, காபியுடன் சாப்பிட கச்சான் (வேர்க்கடலை) மசாலா அருமையாக இருக்கும். ஒவ்வொரு நாளும் வேர்க்கடலையை சாப்பிட்டால் புரதம், விற்றமின்கள், தாதுக்கள் மற்றும் பல சத்துகள் உடலுக்கு கிடைக்கும். வேர்க்கடலை மற்ற கொட்டை வகை உணவுகளை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது.
இதில் ஏராளமான அத்தியாவசிய விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகளின் மூலமாகும். மற்றும் வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம்.
அவற்றில் அதிக அமினோ அமிலங்களும் உள்ளன. இதில் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் அமினோ அமிலம் மிக அதிகமாக உள்ளது. இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.’
கச்சான் மசாலா (Peanut masala) செய்யும் முறை எப்படி என்று வீடியோவில் பார்போம்.
கச்சான் மசாலா செய்ய தேவையான பொருட்கள் (Peanut masala)
- வறுத்த வேர்க்கடலை – 1 1/2 கப்
- கடலை மாவு – அரை கப்
- அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 5 பற்கள்
- செத்தல் மிளகாய் – 5
- மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
கச்சான் மசாலா (Peanut masala) செய்முறை
முதலில் பூண்டு மற்றும் செத்தல் மிளகாயை தண்ணீரில் போட்டு, அதனை 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள மிளகாய்-பூண்டு பேஸ்ட், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மேலும் தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கட்டி சேர்ந்து வராதவாறு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையினுள் வேர்க்கடலையை கொட்டி நன்கு கலக்கி எடுக்க வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும்
பிறகு பிசைந்து வைத்துள்ள, மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இவ்வளவு தான் இலகுவான சுவையான வேர்க்கடலை மசாலா ரெடி.
நீரழிவு நோய்க்கு வேர்க்கடலை
வேர்க்கடலையின் ஜி.ஐ (கிளைசெமிக் குறியீடு) மதிப்பெண் 14 ஆகும். இதன் பொருள் வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெயை உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில்இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.