வேர்க்கடலையில் உணவு செய்முறைகள்(Peanut recipes)
வெறும் வேர்க்கடலையை மட்டும் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், அதனை பலவிதமாக சமைத்தும் (Peanut recipes) சாப்பிடலாம்.
வேர்க்கடலை தோலில் நார்ச்சத்து நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. வேர்க்கடலையில் கொழுப்பு, புரதங்கள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. ஒரு கப் வேர்க்கடலையில் சுமார் 830 கலோரிகள் உள்ளன.
வேர்க்கடலை சுண்டல் (Peanut recipes/Sundal)
தேவையான பொருள்கள்
- பச்சை வேர்க்கடலை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
- வரமிளகாய் – 4
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
பச்சை வேர்க்கடலையை உப்பு போட்டு குக்கரில் நான்கைந்து விசில் வரும் வரை விட்டு வேக வைத்து எடுக்கவும். வேக வைத்த கடலையை வடித்து எடுத்து தனியே வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு (2 ஸ்பூன் அளவு போதும்) கடுகு உளுந்தைப்பருப்பு கடலை பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும். அதனுடன் வரமிளகாய்களை கிள்ளி போட்டு கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் வாசனையான வேர்க்கடலை சுண்டல் தயார்.
இதனை மாலை வேளைகளில் முதியவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தால் அவர்கள் கை கால் வலியின்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
கடலை மிட்டாய் ரெசிபி (Peanut recipes/Sweets)
தேவையான பொருட்கள்
- 250 கிராம் வேர்க்கடலை
- 200 கிராம் சர்க்கரை / வெல்லம்
- 25 கிராம் பட்டர்
செய்முறை
தோல் நீக்கிய வேர்க்கடலையை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
வேர்க்கடலையை அதில் சேர்த்துக் கிளறவும்.
தட்டில் பட்டர் தடவி கலவையை ஊற்றி சிறிதாக வெட்டி ஆற விடவும்.
காற்று போகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
வேர்க்கடலைக் குழம்பு
தேவையான பொருள்கள்
- நிலக்கடலை – ஒரு கப்
- நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்
- பச்சை மிளகாய் – 2
- பதியாக நறுக்கிய ஏலக்காய் – 1
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- கிராம்பு – 2
- இலவங்கப்பட்டை – 1
- துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி – ஒரு ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு – அரை ஸ்பூன்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் – சிறிதளவு
- சிவப்பு மிளகாய்த்தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 2 கப்
செய்முறை
நிலக்கடலையுடன் உப்பு, தண்ணீர் கொஞ்சம் சேர்த்து வேகவைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு வாணலியில் எண்ணெயை சூடுபடுத்தி, அரைத்த வெங்காயத்துடன் நறுமணப்பொருட்கள் எல்லாம் சேர்த்து பொன் நிறமாகும் வரைக்கும் நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு, ஏற்கனவே வேக வைத்திருந்த நிலக்கடலையை, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
அதோடு சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். இறுதியாக இதன் மீது தேங்காய்த் துருவல்களை தூவி விடவும்.
இதனை சாப்பாடு மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
வேர்க்கடலை பக்கோடா(Peanut recipes/pakora)
தேவையானவை
- வறுத்த வேர்க்கடலை – 1 1/2 கப்
- கடலை மாவு – அரை கப்
- அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 5 பற்கள்
- வரமிளகாய் – 5
- மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பூண்டு மற்றும் வரமிளகாயை தண்ணீரில் போட்டு, அதனை 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் கடலை மாவு, கொஞ்சம் அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள வரமிளகாய்-பூண்டு பேஸ்ட், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மேலும் தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கட்டி சேர்ந்து வராதவாறு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையினுள் வேர்க்கடலையை கொட்டி நன்கு கலக்கி எடுக்க வேண்டும்.
கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள, மசாலா கலவையை கொஞ்சம்கொஞ்சமாக எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வேர்க்கடலை பக்கோடா ரெடியாகி விடும்.
வேர்க்கடலை சட்னி
கோயம்புத்தூர் ஈரோடு பக்கங்களில் பிரபலமானது இந்த வேர்க்கடலை சட்னி. ஆரம்பத்தில் இது ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சட்னியின் சுவையை எழுத்தால் விளக்க முடியாது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் இந்த வேர்க்கடலை சட்னியை தொட்டுக் கொள்ளலாம்.
வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருள்கள்
- தேங்காய் – 1/2 மூடி
- வேர்க்கடலை – 1 கப்
- வரமிளகாய் – 5
- புளி – சிறிதளவு
- கருவேப்பிலை 1 கைப்பிடி
- உப்பு தேவையான அளவு
- தாளிக்க கடுகு மற்றும் உளுந்து
வேர்க்கடலையை தோல் நீக்கி அதனுடன் தேங்காய், வரமிளகாய் மற்றும் புளி, உப்பு ,கைப்பிடி கறிவேப்பிலையில் பாதி அளவு சேர்க்கவும். இவற்றை நன்றாக மைய அரைக்கவும். அதில் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு , மிகுதி கறிவேப்பிலை போட்டு தாளித்து போடவும்.அவ்வளவு தான் சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.