இரும்புச்சத்து நிறைந்த கம்பு சிற்றுண்டிகள் (Pearl millet recipes)
அதிக சத்துக்களைக் கொண்டு உடலுக்கு தெம்பு தரும் கம்பை உணவில் (Pearl millet recipes) அடிக்கடி சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்டது கம்பு. கனிமம், கல்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அரிசியை விட இதில் அதிகம்.
கம்பை அன்னமாகவோ, கூழாகவோ சமைத்து தயிர் அல்லது மோருடன் சாப்பிட்டு வர குடல் கொதிப்பு அடங்கும். உடல் வளர்ச்சிக்கும், பலத்துக்கும் உதவும். உடம்பை தூய்மையாக்கும்.
கம்பு உணவுகள் (Pearl millet recipes) நீரிழிவு இருப்பவர்களுக்கு சிறந்த பயனளிக்கும். கம்பில் நார்ச்சத்தும் அதிகம். இது செரிமானத்தை தாமதமாக்குகிறது.அதனால் ரத்தத்தில் மெல்ல கலப்பதால் சர்க்கரையளவு உடனடியாக ஏறாது. சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவாக இருக்கிறது.
ஆனால் சொறி, சிரங்கு, இருமல், காசம் உள்ளவர்கள் கம்பை தவிர்ப்பது நல்லது. கம்பு இந்த நோய்களை அதிகப்படுத்தும்.
கம்பு இடியப்பம் (Pearl millet recipes)
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
வெல்லத் துருவல் – 1 கப்
ஏலப்பொடி – சிறிது
நெய், உப்பு- தேவைக்கு
செய்முறை
கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும். இடியப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். சத்து நிறைந்த கம்பு இடியப்பம் ரெடி.
வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.
கம்பு சத்து மாவு
தேவையானவை
கம்பு – 300 கிராம்
கோதுமை, ஜவ்வரிசி, உடைத்தகடலை தலா -100 கிராம்
வேர்கடலை வறுத்து தோல் நீக்கியது- 50 கிராம்
சுக்கு பொடி – 2டீஸ்பூன்
செய்முறை
முதல் நாள் இரவு கம்பை தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் நன்றாக சுத்தம் செய்து வடிகட்டி நிழலில் ஒரு துணியில் பரவி ஈரம் போக காய போடவும்.
காய்ந்ததும் கம்பை கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும். முழுவதுமாக வறுத்த பின் அதே கடாயில் கோதுமை, ஜவ்வரிசி, உடைத்த கடலை தனித்தனியாக வறுத்து கொண்டு ஆறிய பின் எல்லாமாக சேர்த்து வேர்கடலையும் சேர்த்து மாவாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் சுக்குபொடி கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவில் கஞ்சி செய்து சிறுவர்கள் முதல் வயதானவர்கள்வரை குடித்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
2 ஸ்பூன் மாவுடன் சிறிது வெல்லம் பொடித்து போட்டு நெய் சூடாக்கி மாவில் சேர்த்து பால் சிறிது சேர்த்து கலந்து 4-5 வயதான குழந்தைகள்,ஏன் எல்லோருமே சாப்பிடலாம். கம்பு மிகவும் குளிர்ச்சியும் கூட உடம்புக்கும் நல்லது.

கம்மங்கொழுக்கட்டை
தேவையானவை
கம்பு – 1/4 கிலோ
வெல்லம் – 200 கிராம்
துருவிய தேங்காய் – 1 மூடி
ஏலக்காய் – 4
செய்முறை
கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.
கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும்.ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்.
கம்பு இனிப்பு அடை
தேவையானவை
கம்பரிசி – 1 கப்கடலைப்பருப்பு – அரை கப்
வெல்லம் /கருப்பட்டி – அரை கப்
முந்திரி – 6
ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவியது – கால் கப்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
வாழை இலை – 5
செய்முறை
மேல் மாவுக்கு…
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கைவிடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவும்.
பூரணம் செய்ய
கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வேகவிட்டு எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

கம்பு கொழுக்கட்டை (Pearl millet recipes)
தேவையானவை
கம்பரிசி – 1 கப்
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 5
பொடியாக நறுக்கிய மிளகாய் வற்றல் – 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிது
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
கம்பரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய் வகைகள், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு வதக்கவும்.
உப்பு சேர்க்கவும்.அரைத்த மாவை கொட்டி, அடுப்பைக் குறைத்துக் கிளறவும். மாவு கெட்டிப் பட்டதும் அத்துடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். ஆறியதும் கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.
இட்லிப் பொடி, கார சட்னியுடன் பரிமாறவும்.