நவராத்திரிக்கு ஏற்ற அவல் உணவுகள் (Poha recipes)
நவராத்திரி நெருங்குகிறது. அவலை வைத்து இனிப்பான, காரமான நவராத்திரிக்கு ஏற்ற பிரசாதம் செய்யும் முறைகளை பார்ப்போம். எல்லா செய்முறைகளும் (Poha recipes) சுவையானதோடு, செய்வதும் மிக இலகு. ஏனெனில் அவல் விரைவாக அவிந்துவிடும்.
அவல் சர்க்கரை பொங்கல் (Poha recipes)
தேவையானவை
அவல் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – 6 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை
அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். கல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்கவும்.
மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
சர்க்கரைக்குப் பதில் கற்கண்டு சேர்த்து கற்கண்டு பொங்கலாகவும் செய்யலாம். அது இன்னொரு விதமாக சுவையாக இருக்கும்.
அவல் கேசரி (Rice flakes recipes)
தேவையானவை
அவல் – 2 கப், சர்க்கரை – ஒரு கப், கேசரி பவுடர் – 2 சிட்டிகை, முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை
அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.
வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் ‘கமகம’ அவல் கேசரி (Poha recipes) ரெடி!
அவல் லட்டு (Rice flakes recipes)
தேவையானவை
அவல் – 3 கப்
சர்க்கரை – ஒரு கப்
முந்திரி, திராட்சை – ஒரு கைப்பிடி
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – முக்கால் கப்.
செய்முறை
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் அவலை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த அவலுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
அவல் வடை (Rice flakes vada)
தேவையானவை
அவல் – 2 கப்,உருளைக்கிழங்கு – 2, பச்சைமிளகாய் – 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, இஞ்சி – ஒரு விரல் அளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும்.
ஊறிய அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இதனுடன் கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசைந்து, சிறு உருண்டை களாக உருட்டவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டை களை வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அவல் – தேங்காய்ப்பால் பாயசம் (Poha kheer)
தேவையானவை
அவல் – ஒரு கப்
தேங்காய் – ஒன்று
வெல்லம் – முக்கால் கப்
முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை
அவல், முந்திரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தேங்காயைத் துருவி இரண்டு விதமாக பால் எடுக்கவும். அவலை, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலில் சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.
தேங்காய்ப்பாலிற்கு பதிலாக பால் சேர்த்தும் செய்யலாம்.இது இன்னும் விரைவாக செய்யலாம். ஆனால் தேங்காய்ப்பால் சேர்த்த பாயாசம் தான் அதிக சுவையாக இருக்கும்.
அவல் புட்டு (Rice flakes recipes)
தேவையானவை
அவல் – ஒரு கப்
பொடித்த வெல்லம் – கால் கப்
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்.
செய்முறை
அவலை நெய் விட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், வெல்லப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை சுற்றி எடுக்கவும். இது புட்டு போன்று பொலபொலவென்று இருக்கும். விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி சேர்த்தும் பரிமாறலாம்.
அவல் பொரி உருண்டை (Rice flakes recipes)
தேவையானவை
அவல் பொரி – 3 கப்
வெல்லத்தூள் – ஒரு கப்
முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – 4 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா ஒரு கைப்பிடி
செய்முறை
அவல் பொரி, முந்திரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும்.
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக் கடலை, அவல் பொரியை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையை பாகில் கொட்டிக் கிளறி ,லட்டுக்களாக பிடிக்கவும்.
அவல் பொங்கல் (Poha pongal)
தேவையானவை
அவல், பயத்தம்பருப்பு – தலா ஒரு கப்
மிளகு – ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
நெய் – அரை கப்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
பயத்தம்பருப்பை வேக விடவும். பருப்பு வெந்ததும் அவலை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கடாயில் நெய்யை ஊற்றி மிளகு, சீரகம் தாளித்து, முந்திரி இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, அதை அவல் பொங்கலில் (Poha recipes) கொட்டிக் கிளறவும். இதைச் செய்வது சுலபம். ருசியும் அபாரம்!
புளி அவல் (Rice flakes recipes)
தேவையானவை
அவல் – 2 கப்
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 4
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அவலை நன்றாக கழுவி, கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசலில் ஊற விடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளை தாளித்து, ஊற வைத்த அவலை உதிர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
தேங்காய்ப்பொடி அவல் (Rice flakes recipes)
தேவையானவை
அவல் – 2 கப்
தேங்காய் – ஒரு மூடி
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை கப்
காய்ந்த மிளகாய் – 6
எண்ணெய் – 4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். தேங்காயை துருவி, கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். அவலை நன்றாக கழுவி, தன்ணீரை வடித்து, 2 நிமிடம் ஊற விடவும்.
பிறகு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஊறிய அவலை உதிர்த்து போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சுவைக்கேற்ப பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அவல் – சவ்வரிசி மில்க் அல்வா (Rice flakes halwa)
தேவையானவை
அவல் – ஒரு கப்
சவ்வரிசி – ஒரு கப்
மில்க்மெய்டு – அரை கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
பால் – ஒரு கப்
முந்திரி, பாதாம் – தலா ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை
வெறும் கடாயில் சவ்வரிசியை வறுத்துக் கொள்ளவும். வறுத்த சவ்வரிசியில் கால் பங்கை எடுத்து தனியாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு அவலை நன்றாக வறுத்துக் கொள்ள வும். பிறகு வறுத்த சவ்வரிசி, பாலை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த சவ்வரிசியை போடவும்.
பிறகு மில்க்மெய்டை சேர்த்து, எல்லாம் கெட்டியாக சேர்ந்து வந்ததும் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி இறக்கவும். முந்திரி, பாதாம் துண்டுகளை மேலே தூவி அலங்கரிக்கவும்.