இராசவள்ளிக்கிழங்கு களி (Rasavalli sweet kali)

இராசவள்ளிக்கிழங்குக்குத் தேங்காய்ப்பால் விட்டு அவித்துச் சீனி அல்லது சர்க்கரை போட்டு செய்யப்படும்  களி (Rasavalli sweet kali) மிக சுவையாக இருக்கும்.

தனித்துவமான அதன் நிறமும் மணமும் பார்ப்பதற்கும் உண்பதற்கும் அருமையாக இருக்கும்.பழைய காலத்தில் இராசவள்ளிக்களி  (Rasavalli sweet kali) விருந்துகளிற் கூடப் பரிமாறப்பட்டதாம்.

யாழ்ப்பாணத்து இராசவள்ளிக் கிழங்குக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும் மிகுந்த செல்வாக்கு இருந்தது, இப்பவும் இருப்பதற்கு அதன் தனித்துவமான நிறமே காரணம்.

காலனித்துவ காலத்தில் மேலைப்புலத்தவர்களும் இக்கிழங்கை விரும்பியுண்டதாகக் கூறப்படுகின்றது.

யாரும் செய்யலாம். மிகவும் இலகு. நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இராசவள்ளி ஊதா நிற தண்டில் வெற்றிலை மாதிரி இலைகளுடன் படர்ந்து வளரும். அதை அவித்து அதனுடன் சீனி , அதிக தேங்காய்ப்பால் விட்டு கூழாகவும்  குடிக்கலாம். நல்ல ருசியாக இருக்கும்.

முதியோர், குழந்தைகளுக்கு இந்த கூழ் மிக ஏற்ற உணவு.

அதன் ஊதா நிறம் பற்றி எப்போதும் எனக்குள் ஒரு வியப்பு. அடுத்தநாள் இப்படி வெட்டி சாப்பிட நன்றாக இருக்கும்.

இராசவள்ளி கிழங்கு களி செய்ய தேவையான பொருட்கள் மிக குறைவே.

தேவையானவை

இராசவள்ளிக்கிழங்கு – 1 கிலோ
சீனி -1/2 கிலோ
தேங்காய் – 1
உப்பு – ஒரு சிட்டிகை
சவ்வரிசி – 1 மேசைக்கரண்டி
 
rasavalli sweet kali ,annaimadi.com

செய்யும் முறை

1.இராசவள்ளிக்கிழங்கின் தோலை நன்றாகச் சீவி கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
2.தேங்காயைத் துருவி பிழிந்து பாலை எடுத்துக் கொள்ளவும்.
3.சட்டியை அடுப்பில் வைத்து சிறிது தேங்காய்ப்பாலும் அதோடு கிழங்கு மூழ்கும் அளவிற்கு நீரும் விட்டு கொதிக்கவிடவும்.
4.சிறிது கொதித்ததும் அதில் கிழங்கை சேர்த்து மூடி அவிய விடவும்.இடையிடையே கிண்டி விடவும்.
5.கிழங்கு நன்றாக அவிந்ததும் சீனியையும்  தேங்காய்ப்பாலையும் போட்டு கலக்கவும்.
6.மீண்டும் மூடி அவியவிடவும்.
7.நன்றாகக் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு சவ்வரிசியை தூவி மூடி வைக்கவும்.
 
இராசவள்ளி கிழங்கு களி ரெடி ஆகிவிட்டது!
 
வெள்ளை சீனி ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. பனம் சீனி,பனை வெல்லம்,சர்க்கரை,கருப்பட்டி பாவிக்கலாம். ஆனால் நல்ல நாவல் நிறம் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *