பீர்க்கங்காய் (Ridge guard) நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடியது.பீர்க்கங்காய் எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது.
பீர்க்கங்காய் (Ridge guard) வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு சிறந்தது.
பீர்க்கங்காயில் புரதம் ,கல்சியம் , பொஸ்பரஸ்,,இரும்புச் சத்து , விற்றமின் ‘ஏ’ ,ரிஃபோபிளவின் , தயாமின் , நிகோடின் அமிலம் உள்ளது.
பீர்க்கங்காய் சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.பீர்க்கங்காயை அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவு அதிகமானால் பித்தம், சீதளம் போன்றவை ஏற்படும்.
பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள் (Medicinal uses of ridge guard)
பீர்க்கங்காயில் எல்லா விதமான உயிர்ச்சத்துகளும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.
சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாகத் பயன்படுகிறது.
கண்பார்வை நன்றாக தெரியவும், நோய் எதிர்ப்புச்சக்திமேம்படவும் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளவது சிறந்தது.
வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் காக்கும், மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
பீர்க்கங்காயை சாப்பிடுவதால் எந்த நோய்கள் குணமாகும்?
எடை குறைய
உடலுக்குக் குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது.
இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்கள் உள்ளதால் , ரத்தம் சுத்தமாவதோடு கல்லீரல் பாதிப்பை சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்பட வைக்கிறது.
மஞ்சள் காமாலை குணமாக
பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப்பகுதி மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்து செய்ய பயன்படுகிறது.
பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது.
சரும பளபளப்பை தரும்
பீர்க்கங்காய் (Ridge guard) முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோலில் உள்ள அழுக்குகள் அகன்று ஆரோக்கியமான, பளபளப்பான தன்மையை தரும்.
தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது.
உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.
வயிற்றுப் பூச்சிக்கு
பீர்க்கங்காயைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு சுவைக்காகப் போதிய உப்பு சேர்த்து, காலை, மாலை என இரு வேளை பருகி வருவதால் வயிற்றினுள் துன்பம் தருகிற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும்.
உணவுப்பாதையின் உட்புறப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகிறது.
சிறு நீரக கற்கள் கரைய
பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியைச் சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை சிறிதளவு உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேற உதவும்.
வயிற்று கடுப்பு
பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பும் தணியும்.
கண்பார்வைக்கு
பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் குடித்து வந்தால் நமக்கு அதிலுள்ள பீட்டா கரோட்டீன் சத்து கிடைக்கும்.
இதனால் தெளிவற்ற கண் பார்வை நலம் பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இடைக்கிடை பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.
மேலேகுறிப்பிடப்பட்ட பீர்க்கங்காயின் நன்மைகள் மிகச் சிறிய அளவே.
உண்மையில், பீர்க்கங்காய் (Ridge guard), பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற ,அதிகம் சமையலில் சேர்க்காத காய்களில் இருக்கும் சத்துக்கள் ஏராளம் . அப்படி அருமையான மருத்துவ குணங்களை வைத்திருக்கும் பீர்க்கங்காயை அதிகமாக பயன்படுத்துதி பலன் பெறுவோம்.