சரியான தலையணையின் அவசியம் (Right pillow)
நிம்மதியான, முறையான உறக்கத்திற்கு சரியான தலையணை (Right pillow) அவசியம். தலையணை தலைக்கு மட்டுமல்ல, உடலின் பல பாகங்களுக்கும் உத்வேகம் தருகிறது. முதுகு, கழுத்து, வயிறு, கால், கை என எல்லாவற்றிற்கும் இதம் வழங்கி நன்றாக தூங்குவதற்கு துணைபுரிகிறது.
தலையணையில் தலைசாய்த்து உடலை நேர்வாக்கில் வைத்துப் படுக்கும்போது உடல் ரிலாக்ஸாகும். அந்த ரிலாக்ஸ் நேரத்தில் எதை கேட்டாலும் அது வேகமாக மூளைக்குச் செல்லும். நன்றாக மூளையில் பதிந்துவிடவும் செய்யும். அதனால் தான் குழந்தைகளை தூங்கச்செய்யும்போது கருத்தாழமிக்க கதைகளை சொல்கிறார்கள் போலும்!
எல்லோருக்கும் ஒரே மாதிரி தலையணை ஒத்துவராது. அவரவர் உடலுக்கு ஏற்ப வசதியானதை தேர்வு செய்யவேண்டும். தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் ,வெகுநேரம் தூக்கம் வராதவர்கள், தங்கள் தலையணை அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சரியான தலையணையை வைத்து படுத்தால்தான் நல்லதூக்கம் வரும். மறுநாளுக்கு தேவையான புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
இரவில் சாப்பிடும் மாத்திரைகள் பலவும், நாம் தூங்கும்போதுதான் வேலை செய்கிறது. மருந்தின் முழு பலனை அடைய நல்ல ஓய்வும், தூக்கமும் அவசியம். அதற்கு நல்ல தலையணை மிக அவசியம்.
சரியான தலையணையை (Right pillow) தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. அதை பயன்படுத்தி சரியாக படுக்கவும் வேண்டும்.
சரியாக படுப்பது எப்படி ?

நேராக முதுகுத் தண்டு தரையில் அல்லது கட்டிலில் படும்படி படுக்கவேண்டும்.
முதுகு தண்டு பிரச்சனை, எலும்பு தேய்மானம், இடுப்பு எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் தங்களுக்கு பொருத்தமான தலையணையை பாவிக்க வேண்டும்.
படுக்கையில் தலையின் பின்புறமும், முதுகெலும்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.
அதிக உயரம் இல்லாத தலையணையை பயன்படுத்துங்கள்.
ஒருக்களித்து படுக்கும் பழக்கமிருந்தால் காது, தோள்பட்டைக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்கு மென்மையான தலையணையை பயன்படுத்தி படுக்கவேண்டும்.
கைகால், வலி உள்ளவர்கள் மென்மையற்ற, படுக்கும்போது உள்ளே அழுத்தம் ஏற்பட்டு குழிவிழாத தலையணையை வைத்து படுக்கவேண்டும். அப்போதுதான் ரத்தஓட்டம் அதிகரித்து வலிக்கு இதமாக இருக்கும்.
மிக மென்மையான இறகு போன்ற தலையணைகள், உடலின் அழுத்தத்திற்கேற்ப செயல்பட்டு உடலை மென்மையாக வைத்திருக்கும்.
‘மெமரி போம்’ (Memory foam) தலையணைகள் தூக்கத்தில் உருண்டு படுக்கும்போது ஏற்படும் அழுத்தத்திற்கேற்ப மாறும் வடிவமைப்பைக் கொண்டது.
உடலுக்கு குளிர்ச்சியை தரும் பிரம்பு நார் தலையணை, அக்குப்பிரஷர் தலையணைகளும் இருக்கின்றன. வலிகளால் அவஸ்தைப்படுகிறவர்கள், அதற்கு ஏற்ற தலையணைகளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
வீட்டில் நமக்கு ஏற்ற தலையணையை தேர்வு செய்து பயன்படுத்துவோம்.ஆனால் வெளியுடங்களில் தங்கும்போது வேறு மாதிரியான தலையணைகளை பயன்படுத்த வேண்டியதிருக்கும். அது சிலருக்கு அசவுகரியத்தை ஏற் படுத்தும்.
கர்ப்பிணிகளுக்காகவும், கைக் குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியாக தலையணைகள் வடிவமைக்கப்படுகின்றன.பெண்கள் எப்போதும் மென்மையான தலையணைகளைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் இலவம் பஞ்சு தலையணைகளே அவர்களை கவர்கிறது.
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வரும் நிறைய வெளிநாட்டு பயணிகள்,நோயாளிகளுக்கு ஏற்றவகையில் பல விதமான தலையணைகளை உருவாக்கி வழங்குகிறார்கள்.அது அவரவர்கள் உடல் நலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டதாகும்.
இவற்றில் இருந்து தலையணை நமது நல்ல நிம்மதியான தூக்கத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று புரிகின்றது.உங்கள் தலையணையையும் சரி பார்த்துக்கொள்ளுங்கள்!