சதுரகிரி மலை தெய்வீக தரிசனம் (Sathurakiri hill)

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சாப்டூர் மற்றும் தாணிப்பாறை மலைப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு கிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற 4 மலைகளுக்கு நடுவில், சதுரகிரி (Sathurakiri hill) என்கின்ற மலையில் சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது.

சஞ்சீவி கிரி மலை என்பதே பின்னாளில், ‘சதுரகிரி மலை’ என மாறியது. கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, சுந்தரலிங்கம், சந்தனலிங்கம் என்ற பெயர்களில் இரண்டு திருமேனிகளாக இறைவன் அருள்பாலிக்கிறார்.

இறைவன் தரிசிப்பதற்கு எளியனாய் தெருமுனைக் கோவிலிலும் அருள்பாலிப்பதுண்டு. சிரமங்கள் பல கடந்து வந்து தரிசனம் செய்யும் படி உயர்ந்த மலைகளில் கோவில் கொண்டு அருள்வதுமுண்டு.

அவ்வகையில், எங்கும் நிறைந்துள்ள ஈசன் லிங்க வடிவினனாய் பெருங்கருணை புரியுமிடம் சதுரகிரி (Sathurakiri hill).

சதுரகிரிமலையில் சுயம்புவாய் வெளிப்பட்ட சுந்தரமகாலிங்கர்

முன்பொரு காலத்தில் நடந்தத சம்பவம் இது. ஆநிரை மேய்ப்பவர்கள் சதுரகிரி மலைக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வருவது வழக்கம். அங்கு செழுமையாக வளர்ந்திருக்கும் புற்களை வயிறார உண்ணும் பசுக்கள் படிப்படியாய் பால் கறக்கும்.

இவ்வாறு மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பிய காராம் பசுக்களில் ஒன்று சற்றும் பால் கறக்கவில்லை. இப்படியே சில தினங்கள் தொடர, பசுவின் சொந்தக்காரருக்கு சந்தேகம் வந்தது.

மாடு மேய்ப்பவனை அழைத்து கடிந்து கொண்டார். மேய்ப்பனுக்கும் வருத்தம். தன் பக்கம் தவறில்லாத போது பேச்சுக் கேட்கும்படி ஆகிவிட்டதே என்ற கோபம்.

மறுநாள் காலை முதல் அந்தப் பசுவைக் கண்காணித்தபடியே இருந்தான். நண்பகல் வேளையில் மற்ற பசுக்களிடமிருந்து பிரிந்த அந்தக் காராம்பசு தனியே சென்றது. ஓரிடத்திலிருந்த கல்லின்மீது பாலைப் பொழியத் தொடங்கியது.

இதைக் கண்டு கோபம் கொண்ட பசு மேய்ப்பவன், ஓடிவந்து அதனை அடிக்க கம்பை ஓங்கினான். எதிர்பாராமல் மேய்ப்பவனைக் கண்ட பசு அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. பசு விலகியதால் அவனது பிரம்பு, பால் பொழியப்பட்ட கல்லை நோக்கி வந்தது.

திடீரென அந்தக் கல் ஒரு பக்கம் சாய்ந்து விலகியது. அப்போது தான் மேய்ப்பவன் அது வெறும் கல்லல்ல என்பதையும்; சுயம்புவாகத் தோன்றிய லிங்கம்

என்பதையும் அறிந்து திகைத்து நின்றான்.

சுந்தரமகாலிங்கர் தன்னை அடிக்க வந்த அந்த மேய்ப்பனுக்கு காட்சி தந்து மறைந்தார். இந்த சம்பவம் மூலம் அந்த மூர்த்தியின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவத் தொடங்கியது.

அன்று சாய்ந்த அதே கோலத்திலேயே இன்றும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் சதுரகிரி (Sathurakiri hill)  சுந்தரமகாலிங்கர். 

 

 

சதுரகிரியைச் சூழ்ந்து, அதன் துணை மலைகள் என்று சொல்லப்படும் பிரம்மகிரி, சித்தகிரி, ஏமகிரி, உதயகிரி, கயிலாயகிரி, சந்திரகிரி, விஷ்ணுகிரி, கும்பகிரி, மகேந்திரகிரி, சஞ்சீவிகிரி, இந்திரகிரி, சூரியகிரி, குபேரகிரி, சிவகிரி, சத்தகிரி பழனி, மேருகிரி ஆகிய பதினாறு மலைகள் உள்ளன.

இவற்றுக்கு நடுவில் அமர்ந்து சுந்தரமகாலிங்கர் அருள் பாலிக்கிறார்.

சதுரகிரி மலைக்குச் செல்வதற்கு  மூன்று பாதைகள் உள்ளன. முதல் பாதை உசிலம் பட்டி, பேரையூர், சாப்டூர் வழியாக வாழைத் தோப்பு வரை செல்கிறது. இங்கிருந்து மலைப் பாதையில் ஐந்து கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இரண்டாவது பாதை ஆண்டிப்பட்டி, தேனி, வருசநாடு, கருப்பசாமி கோவில் வழியாக சதுரகிரி மலையடிவாரத்தைச் சென்றடையும். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் நடந்துசென்று சுந்தரமகாலிங்கரை தரிசிக்கலாம்.

மூன்றாவது பாதை டி. கல்லுப்பட்டி, ராஜபாளையம், கிருஷ்ணன்கோவில் வழியாக தாணிப்பாறையை அடைந்து, அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் நடந்துசென்று மகாலிங்கர் சந்நிதியை அடையலாம்.

சுந்தர மகாலிங்கரை தரிசிக்கச் செல்லும் வழியிலேயே பல்வேறு ஆலயங்களும், சித்தர் வனங்களும் காணப்படுகின்றன.

அவற்றுள் தாணிப்பாறை விநாயகர் கோவில், சுந்தர மூர்த்தி சுவாமி கோவில், சந்தன மகாலிங்க சுவாமி கோவில், அகத்தியர் வனம், இடைக்காடர் வனம், பெரிய மகாலிங்க சுவாமி கோவில், பெரிய கணபதி சுவாமி கோவில், ஊஞ்சல் கருப்பன் சுவாமி கோவில், சப்த கன்னிமார் கோவில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சதுரகிரிமலைக்கு செல்பவர்கள் அறிய வேண்டியவை (Sathurakiri hill)

காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 2.00 மணிக்குள்ளாக மலையேறத் தொடங்குவது நல்லது. ஆரோக்கியமானவர்கள் மூன்று மணி நேரத்திலும், வயதானவர்கள் நான்கு மணி நேரத்திலும் ஆலயம் சென்றடையலாம்.

நடைபயணத்தின்போது தேவையான உணவை கையோடு எடுத்துச்செல்வது நல்லது. வழியில் ஆங்காங்கே புனித தீர்த்தங்கள் கிடைக்கும்.

போகர் ,பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த போது தான் செய்தார் என்று சொல்கிறார்கள்.

இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும் என்கிறார்கள். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்ததாக சொல்லப்படுகிறது.

சதுரகிரி மலைக்குள் (Sathurakiri hill) சுற்றுச்சூழல் ரீதியாகவும் அங்கு வசிக்கும் உயிரினங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும் ஊற்று, சுனை போன்றவற்றை பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக்கொள்ள நேரிடலாம்.

ஒருவேளை அதுபோன்ற பொருட்களை எடுத்துச்செல்ல நேரிட்டாலும், அவற்றையும் இதர காகிதப் பொருட்கள், அட்டைகள் போன்றவற்றையும் மலையடி வாரத்தில் கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும்.


சதுரகிரி (Sathurakiri hill) மலையிலுள்ள தீர்த்தங்கள் மற்றும் சுனை நீரை பக்தர்கள் மூலிகைத் தீர்த்தமாகவும், இறைவனது பிரசாதமாகவும் பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு, சிகைக்காய், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

அவசர அவசரமாக வந்து திரும்புவதைத் தவிர்த்து, அமைதியும் பக்தியும் நிறைந்த மனதுடன் செல்லவேண்டும்.

சுந்தர மகாலிங்கரை தரிசித்து, ஓர் இரவு மலைப்பகுதியிலுள்ள மடங்களில் தங்கி இறைவனை தியானித்துச் செல்ல வேண்டும்.

தன்னை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கும் பக்தர்களின் பிறவித்தளைகளை அறுக்கவல்லவர் மகாலிங்கர் என்பது பக்தர்களின் சிறப்பு நம்பிக்கை .

சதுரகிரிமலையும் சித்தமருத்துவ மூலிகைகளும் (Sathurakiri hill)

சதுரகிரியை சித்தர்கள் மலையென்றே கூறலாம். இங்குள்ள மூலிகைகளும், தீர்த்தங்களும் சித்தர்கள் பிரார்த்தனையின் பலனாக வந்தவை என்றொரு ஐதீகம் நிலவுகிறது.

ராம- இராவண யுத்தத்தின் போது, இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தினால் லட்சுமணன் மூர்ச்சையுற்று சாய, அதைத் தெளிவிக்க அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு வான் வழியே பறந்து வந்தான்.

சதுரகிரி பகுதியை அவன் கடக்கும்போது, இம்மலையிலிருந்த சித்தர்கள் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கு விழவேண்டும் என்று பிரார்த்தித்தனர்.

அவ்வாறே சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்தது. அதன்காரணமாக இங்குள்ள மூலிகைகளும் தீர்த்தங்களும் கடும்நோயையும் தீர்க்கும் அற்புத சக்தி கொண்டு திகழ்வதாகக் கூறுகின்றனர்.

இவ்வாலயத்தை பரம்பரையாக பராமரித்து வருபவர்கள் பரதேசி என்னும் அடைமொழியைக் கொண்ட குடும்பத்தினர்.

இவர்கள் சித்தர்களுடனான அறிமுகம் மூலம், சித்த மருத்துவத்தைக் கற்று மலையடிவாரத்திலுள்ள மக்களின் பிணிகளைத் தீர்ப்பதிலும் அக்கறைகாட்டி வந்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்குடும்பத்தினரின் வன பராமரிப்பைப் பாராட்டும் விதமாகவும், அருள்மிகு சுந்தர மகாலிங்கரின் திருப்பணி, பாதுகாப்பு கைங்கர்யங்களுக்காகவும் செப்புப் பட்டா ஓலையாக 63 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர்.

இன்றும் அந்தக் குடும்பத்தினரின் சேவை தொடர்கிறது.

இந்த மலையில் சித்தர்களும் ரிஷிகளும் சூட்சுமமாக உலவுகின்றனர். இங்கு நிறைய நாய்களுண்டு. அந்த நாய்களின் வடிவில்கூட அவர்கள் நமக்குத் துணையாக வருவார்கள்.

வழிதவறியவர்கள் பலர் நாய்களின் வழிகாட்டலால் சரியான இடத்தையடைந்த சம்பவங்கள் பலவுள்ளன.

சதுரகிரி (Sathurakiri hill) மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலையில் ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று உடலில் பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
 
அகத்தியர் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும், காயகற்ப மூலிகை வளம் நிறைந்ததுமாக இருக்கிறது இந்தத் தலம். போகர் ,பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த போது தான் செய்தார் என்று சொல்கிறார்கள்.

இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும் என்கிறார்கள். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்ததாக சொல்லப்படுகிறது.

சதுரகிரிமலையின் சிறப்பு விழாக்கள் (Sathurakiri hill)

ஆடி அமாவாசைத் திருவிழா, புரட்டாசி நவராத்திரி கொலு பூஜை முளைப்பாரி, அம்பு எய்தல் திருவிழா, தை அமாவாசைத் திருவிழா, ஆவணி அமாவாசைத் திருவிழா, மார்கழி முதல் தின புஷ்ப அலங்கார விழா, மாசி மகாசிவராத்திரி விழா, சித்திரை அமாவாசை பதினெண் சித்தர்கள் அலங்கார பூஜை, மாத அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடை பெறும்.

அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.
இங்கே அன்னதானக் குழுவினரால் பல இடங்களில் மூன்று வேளை அன்னதானம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

சந்தன மகாலிங்கம் கோவில் அருகே 18 சித்தர்கள் சன்னிதி உள்ளது. இங்கு ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகமாக  இருக்கும்.

மகாலிங்கம் கோவிலின் வடக்கே ‘ஊஞ்சல் கருப்பண சாமி’ ஆலயம் உள்ளது.
சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் தொடங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் இங்கு பிரசாதமாக தரப்படுகிறது.

பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் தரிசிக்காமல் சென்றார்.
இதனால், சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தார், பார்வதி தேவி. சிவலிங்கத்திற்கு தினமும் சந்தனம்  கொண்டு அபிஷேகம் செய்தார்.
அந்த தலமே , சுந்தர மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று மேடான பகுதியில்  உள்ள சந்தனமகாலிங்கம் கோவில் ஆகும்.
 
சதுரகிரி (Sathurakiri hill)  சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களால் ஏற்பட்ட பாவங்களில் இருந்து நீங்கி புண்ணியம் பெறலாம் என்பது வலுவான நம்பிக்கை.
 
சித்தர்களின் ஆசிர்வாதத்தையும் சிவனின் அருளையும் வேண்டுவோர் வாழ்வில் ஒருமுறையாவது சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்!!

Leave a Reply

Your email address will not be published.