சித்தர்களும் ஜீவ சமாதிகளும் (Siddhar)

இடையறாது மக்கள் வெள்ளம் அலைமோதும் திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, சதுரகிரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற இடங்கள் எல்லாம் சித்தர்களின் (Siddhar) இறை அதிர்வு ஒளிரும் அற்புதங்களே! சித்தர்களால்(Siddhar) பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரத்யேகமான இறைச் சக்திகள் உண்டு!

மனம் லயித்து ஆன்ம உருக்கத்துடன் சித்தர்களின் ஜீவ சமாதிகளை(Siddhar) தரிசித்து, அங்கு அமர்ந்து தியானித்து வழிபட்டால் நம்ப முடியாத மாற்றங்களும் வியப்பான ஏற்றங்களும் எல்லோர் வாழ்விலும் நடக்கும் என்பது அனுபவித்துத் திளைத்த ஆன்றோர் வாக்கு!

சித்தர்களின் (Siddhar) வாழ்வு குறித்த முழுமையான வரலாற்றுத் தகவல்கள் மிகவும் சொற்பமாகவே கிடைத்துள்ளன. போகர் போன்ற சில சித்தர்களின் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகள் வழியாகவும் ‘கர்ண பரம்பரைக் கதைகள்’ எனப்படும் செவிவழிக் கதைகள் வழியாகவுமே அவர்களின் வரலாற்றை அணுக வேண்டியுள்ளது என்பது இதுவரையிலான சித்தர்(Siddhar) ஆய்வுகளின் சாரம்.

இந்நிலைக்கு சித்தர்களே ஒருவகையில் காரணமாக அமைகின்றனர். ஆம்! மெய்யுணர்வின் தொடக்கம் தனக்குள்ளே முகிழ்ப்பதை உணரும் ஒரு சித்தன், முதலில் துறப்பது தனது பூர்வாஸ்ரமப் பெயரையும் பிறந்த இடத்தையும் தான். காடோடியாகவும், தேசாந்திரியாகவுமே எல்லா சித்தர்களும் வாழ்ந்திருக்கின்றனர்.

அவர்களின் பாடல்கள் எல்லாமே குறியீட்டு மொழியில் இயற்றப்பட்டுள்ளன. ‘சூனிய சம்பாஷணை’ என்றும் ‘சந்தியா பாஷை’ என்றும் இரட்டுற மொழி நடையிலேயே அவைகள் உள்ளன.

“ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்

அஷ்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி

கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்

குவலயத்தி லிங்கமதாய் முளைத்தார் பாரே!”

-போகர் – ஜெனனசாகரம் – 313

 

சித்தர்கள் அனைவரும் அட்டாங்க யோகத்தால் ‘எட்டெட்டாகி’ பல்வேறு சித்துகள் புரிந்து ஜீவசமாதியில் உலகெங்கும் லிங்கரூபமாக வீற்றிருக்கின்றனர்!

மேலோட்டமான ஒரு வேடிக்கைப் பொருளும் – உள்ளார்ந்த நுட்பமான ஒரு தத்துவச் செய்தியாகவும் எல்லா சித்தர் பாடல்களும் அமைந்துள்ளன. அதைப்போலவே தங்களின் பெயர், ஊர், வாழ்க்கையை அவர்கள் மறைபொருளாகவே வைத்திருந்தனர்.

குரு சூட்டிய பெயர், அவர்களின் தோற்றத்தை வைத்து மக்கள் சூட்டிய பெயர், ஆன்ம அனுபூதியால் கிடைத்த பெயர் என்பவையே சித்தர்களின் பெயர்கள்.

ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்தால், காலத்தை வென்று உடலை இறவாமை நிலையில் வைக்க முடியும். இந்த சிவநிலையை அடைய நமசிவாய மந்திரம் ஒன்றே வழி.

காலத்தை வென்று சமாதி நிலையில் நிலைக்க ஒவ்வொருவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தியானிக்க வேண்டும்.

சித்தர் (Siddhar) என்பவர்கள் யார் ?

‘சித்தர்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘நிறைவடைந்தவன்’ என்று பொருள். ஆன்ம சுத்தியின் வழி மெய்யுணர்வின் உச்சத்தை அடைந்தவன். சீவனைச் சுத்தமாக்கி சிவத்தை அடைந்தவன் என்றும் கூறலாம்.

‘சிந்தை தெளிந்தார்’ என்கிறது திருமந்திரம். ‘நிறைமொழி மாந்தர்’ என்கிறது திருக்குறள். ‘சிந்தை தெளிந்திருப்பான் அவனே, அவனே சித்தன்’ என்கிறது வால்மீகி ஞானம். ‘அவன் சிவன் தெரிந்த ஞானி’ என்கிறார் சிவவாக்கியர்.

இந்திய ஆன்மிக மரபில் சித்தர்களை நாதசித்தர், ரசசித்தர், மகேஸ்வர சித்தர், சங்கத சித்தர் என வகைப்படுத்துகின்றனர்.

ஹடயோகிகளின் முக்கிய நூலான ‘ஹட யோக ப்ரதீபிகா’வில் சித்தர்களின் வரிசை ஆதி நாதரிலிருந்து தொடங்குகிறது ஆதிநாதர் என்பது சிவனின் ஆத்மானுபவநாமம். ஆதிநாதரின் மரபைச் சேர்ந்தவர்கள் நாதசித்தர்கள்.   

ரசசித்தர்கள் மருத்துவர்கள். சங்கத சித்தர்கள் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். தென்னிந்தியச் சித்தர்கள் மகேஸ்வரச் சித்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக ஆதிசித்தனாக விளங்குபவர் சிவபெருமான் என்பது மகேஸ்வரச்சித்தர்களின் சம்பிரதாயம். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவன் ‘சித்தன்’ என்றே அழைக்கப்படுகிறார்.

அந்த சிவத்தலமும் ‘சித்தீச்சரம்’ என்றே அழைக்கப்படுகிறது. சேலம் அருகே கஞ்சமலையில் உள்ள சிவன்கோயில் சித்தேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. சித்தர் காலாங்கி நாதரே அங்கு சிவனாக மாறியதாக ஐதீகம்.

தமிழ்நாட்டுச் சித்தர்களை மூன்று முக்கியப் பிரிவுகளாக ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். அவை கயிலாய வர்க்கம், பாலவர்க்கம், மூலவர்க்கம். கயிலாய வர்க்கத்தின் முதல் சித்தர் சிவன். பாலவர்க்கத்தின் முதல் சித்தர் முருகப்பெருமான். மூலவர்க்கத்தின் தலைச்சித்தர் திருமூலர்.

குண்டலினி சக்தியை (குலா எனும் பாம்புச்சக்தி) மேலெழும்பச் செய்து சகஸ்ராரத்தில் உள்ள சிவத்துடன் இணையச் செய்பவர்கள். அதில் வழியும் அமிர்தத்தை உண்டு மரணமிலாப் பெருவாழ்வு எய்துவார்கள் என்பது மெய்யுணர்வுப் பயிற்சியின் உச்சநிலை. ‘குலாமிர்தம்’ என்னும் இந்த அமிர்தத்தை அடைபவர்களே சித்தர்கள் என்கிறது அஷ்டாங்க யோகம்.

ஜீவசமாதி

இப்படி சித்தர்கள், சிவனை அடைந்து சிவனுடன் கலந்து உறையும் இடமே ‘ஜீவசமாதி!’ ‘ஆதிக்குச் சமமாக ஆவது!’ என்பதே சமாதி எனும் சொல்லுக்கு பதஞ்சலி முனிவரின் ‘அஷ்டாங்க யோகம்’ உரைக்கும் பொருள்.

அதாவது, பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்வை ஆகிய மூன்று நிலைகளின் ஐக்கியமே சமாதி!

இதன்படி ஒரு சித்தரானவர் தன் சமாதி தினத்தை முன் கூட்டியே அறிந்து கொள்கிறார். அதன்படியே அந்நாளில் அந்த இடத்தின் சமாதியில் தன் ஜீவனை உறையச் செய்கிறார்.

சாதாரண மனிதனுக்கு மலம், சிறுநீர், விந்து, நாதம் (ஆணின் உயிர்ச்சத்து – விந்து; பெண்ணின் உயிர்ச்சத்து – நாதம்) ஆகியவை வெளியேறி மரணம் சம்பவிக்கும். ஒரு யோகியின் மரணத்தில் இது நிகழாது.

விந்துவாகிய உயிர்ச்சக்தி உச்சந்தலையில் உறைந்து விடும்! உடல் இயக்கமும் மன இயக்கமும் நின்றுவிடும்! பேராற்றல் வாய்ந்த அந்த சூக்கும தேகம் கண்ணுக்குத் தெரியாத உயிர்த்தன்மையுடன் காலகாலத்துக்கும் மண்ணில் உறைந்திருக்கும்!

மரணமிலாப் பெருவாழ்வை அடைந்த ஒரு சித்தர், தான் விரும்பிய காலம் வரை வாழவும், நினைத்த இடத்தில் சஞ்சரிக்கவும், வேறொரு இடத்தில் மறுசமாதி (Siddhar) அடையவும், நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் சராசரி மனித நிலைகளை வெல்லவும் முடியும். 

ஜீவ சமாதிக்குள் உறையும் சித்தர்களின் உடலை மண் அரிக்காது. உடலில் முடி வளரும், நகம் வளரும், உடல் சிதையும் நாற்றத்துக்குப் பதில் நறுமணம் கமழும் என யோக உபநிடதங்கள் கூறுகின்றன.

அருட்பேராற்றல் மையங்களாகவும் தியான பீடமாகவும் திகழ்ந்து, இறை அதிர்வுகளை வெளிப்படுத்தும் சித்தர்களின் ஜீவ சமாதிகள் ஆலயங்களுக்கு நிகரானவை.

மரபுத் தொடர்ச்சியாக மனிதர்களை வஞ்சிக்கும் ஊழ்வினைகள், கிரக தோஷங்கள், தீரா நோய்கள், ஜன்ம சாபங்கள் போன்ற தீவினைகளைத் தீர்க்கும் ஜீவாலயங்களாக ஜீவசமாதிகள் திகழ்கின்றன.

சித்தர்கள் சூக்கும உடலாக உறைந்திருக்கும் தமிழ்நாட்டின் அபூர்வமான ஜீவ சமாதிகளுக்கு இந்தத் தொடரின் வழியாக பயணிக்க இருக்கிறோம். அந்த இடங்களின் பேராற்றல், அற்புதங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை தொல்புராணத்தோடும் வரலாற்றோடும் கலந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

சித்தர்கள் அனைவரும் அட்டாங்க யோகத்தால் ‘எட்டெட்டாகி’ பல்வேறு சித்துகள் புரிந்து ஜீவசமாதியில் உலகெங்கும் லிங்கரூபமாக வீற்றிருக்கின்றனர்!

‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்தால், காலத்தை வென்று உடலை இறவாமை நிலையில் வைக்க முடியும். இந்த சிவநிலையை அடைய நமசிவாய மந்திரம் ஒன்றே வழி.

காலத்தை வென்று சமாதிநிலையில் நிலைக்க ஒவ்வொருவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்; தியானிக்க வேண்டும்.

சேலம் அருகே கஞ்சமலையில் உள்ள சிவன்கோயில் சித்தேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. சித்தர் காலாங்கி நாதரே அங்கு சிவனாக மாறியதாக ஐதீகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *