குறட்டையை போக்கும் எளிய வழிகள் (Snoring)
குறட்டை (Snoring) என்பது ஒரு கோளாறு. இது தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது.மூச்சு விடும் போது தொண்டையில் உள்ள மெல்லிய தசை ஆடுவதால் குறட்டை சத்தம் வருகின்றது.
இன்னும் விளக்கமாக சொல்வதானால், மூக்கின் பின்புறம் அடினாய்ட் தசையும், தொண்டைக்குள் டான்சிலும் இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக ,உள்ளே போய் வெளியே வர முடியாத நிலை ஏற்படும்.
அதன் போது ,ஒருவர் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும் போது, காற்று அடுத்துள்ள தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.
குறட்டை (Snoring) விடுவது ஒரு சிரிப்பிற்குறிய விஷயம் அல்ல. குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணையை,குடும்பத்தவரையும் பாதிக்கின்றனர். இதனால் உலகில் உள்ள பலரும் நல்ல தூக்கமின்றி அவதிப்படுகின்றனர்.
குறட்டை வருவதற்கான காரணங்கள் (Causes of snoring)
பல காரணங்களால் குறட்டை ஏற்படுகிறது. உடல் பருமன், தொண்டை அடைப்பு மற்றும் தொண்டை தசையிலுள்ள தளர்வு மற்றும் வீக்கம் என பலவற்றை குறட்டைக்கு காரணமாக சொல்லலாம்.
சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது.
ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றாலும் குறட்டை ஏற்படுகிறது.
குறட்டை மன உளைச்சலை தரக்கூடியது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.குறட்டை உடல் நலத்தைப் பாதிப்பதோடு, பாசமான உறவு பிணைப்புகளில் பிரச்சனையை உண்டாக்கும்.
குறட்டையை நிறுத்துவதற்கு ஒரு சில எளிய வழிகளை பின்பற்றி எப்படி தவிர்க்கலாம் என பார்ப்போம்.
குறட்டை விடுவதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது (What are the effects of snoring?)
இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகின்றது.
குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும்.
மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவைகளால் ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்படும்.
குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும்.
இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் பாதிக்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவதுரையினர்.
மாரடைப்பு அபாயம்
7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.
ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.
இவர்கள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பல்தனத்தை உணர்வார்கள்.
ஆபத்தான நோய்
டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.
அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.
கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக்கோளாறாக இது கருதப்படுகிறது.
ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும்.
இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும்.
ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.
குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு ,திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.
ஆரோக்கியமான ஒரு மனிதர் 8 மணி நேரம் தூங்குகின்றார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும்.
அப்போது அவரது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிப்படுத்தும் விதத்தில் விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்து விடும்.
இது இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது.
அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ, இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும்.
அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலேயே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.
குறட்டையை (Snoring) தடுக்கும் இயற்கை மருந்துகள்
மஞ்சள்
- தேவையான பொருட்கள்:மஞ்சள், ஏலக்காய், தேன்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும். - இதில் ஏலக்காய் தட்டிபோடவும்.
- ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
- வடிகட்டி தேன் சேர்க்கவும்.
- இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சக சளியை கரைக்கும்.
திப்பிலி பொடி
- அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுக்கவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும்.
- இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.
பசு நெய்
பசு நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும்.
காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்சனை தீரும்.
குறட்டையை விரட்டும் சில உணவுகள் ( Foods that repel snoring)
தேன்: குறட்டையை நிறுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த உணவாகும். எரிச்சல்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வர விடாமல் தேன் தடுக்கின்றது. இதனால் மூச்சு குழாயில் உள்ள அடைப்புகள் சரியாகி தொண்டையில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன.
சோயா பால்: சோயா பால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபர்கள் மாட்டுப் பால் அருந்தினால் அவர்களுக்கு குறட்டை வரும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
பாலும், பால் சேர்க்கப்பட்ட எந்த உணவுகளும் குறட்டையை வரவழைக்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.
இது மூச்சுக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி குறட்டையை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக அளவு சளியையும் சுரக்கிறது. மாட்டுப் பாலிற்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தினால் குறட்டை இல்லாத உறக்கத்தைப் பெற முடியும்
மாமிச உணவு தவிர்ப்பு : குறட்டையை விளைவிக்கும் பொருளாக மாமிச இறைச்சி வகைகள் உள்ளன. இத்தகைய சிவப்பு இறைச்சிகளை(மாட்டு கறி) தவிர்த்து மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் குறட்டையை கட்டுப்படுத்த முடியும்.
இத்தகைய இறைச்சியில் உள்ள கொழுப்பு வகைகள் நமது இரத்த குழாய்களை அடைந்து தசை சுருக்கங்களை உருவாக்குகிறது. இதனால் தொண்டை வீக்கமடைகின்றது.
ஒலிவ் எண்ணெய்: ஒலிவ் எண்ணெய் தொண்டை பகுதியில் உள்ள இத்தகைய அடைப்புகளையும் வீக்கங்களையும் குறைத்து குறட்டையை வர விடாமல் தடுக்கின்றது.
தேனீர்: தொண்டையில் உள்ள அடைப்புகளையும், நெருடல்களையும் நீக்கும் சிறந்த பானமாக டீ உள்ளது. அதனால் குறட்டையும் வராமல் தவிர்க்கப்படுகிறது.
கெமோமில் தேயிலை, மின்ட் தேயிலை, பச்சை தேயிலை, மற்றும் டீ டிக்காசன் ஆகியவை இந்த விஷயத்தில் சிறந்த பலனை தருகின்றன. இதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் குறட்டையை அறவே நிறுத்த முடியும்.
நீங்கள் குறட்டையை நிறுத்த விரும்பினால் நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. ஒரு வேளை நீங்கள் அவற்றை சாப்பிட நேர்ந்தால், மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து உறங்கினால் சிறந்தது.
நாம் குறட்டையை குறைக்கும் முயற்சியில் தேவையான உணவை உண்ணும் போது நல்ல பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
உணவை உண்ட பின், சில மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது. இந்த இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் நடந்தால் சீக்கிரம் உண்ட உணவு எளிதில் செரிக்கும். அதோடு இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
குறட்டையை தடுக்கும் எளிய முறைகள் (Simple methods to prevent snoring)
குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து விட்டால், இலகுவாக அதிகமானோர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம்.
இந்த பழக்கத்தை நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.
உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தாலே போதும். இப்பிரச்னைகளிலிருந்து இலகுவில் விடுபட்டு விடலாம். ஏனெனில், உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும்.
குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலும், குறட்டை ஒலி குறையும்.
“ஸ்பைரோ மீட்டர்’ கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும்.
இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.