சிரிப்பின் சிறப்பு (Special of laughter)
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனை பிரித்துக் காட்டும் அடையாளச் சின்னம் தான் சிரிப்பு (Special of laughter). மிருகங்களோ பறவைகளோ சிரிப்பதில்லை. அல்லது அவை சிரிப்பதை ,எம்மால் உணர முடிவதில்லை.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்
என்பார்கள் பெரியவர்கள்.
சிரிப்பு… ‘’இது மனித குலத்துக்கே உரிய தனிச் சிறப்பு’’
என்று மறைந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அடிக்கடி சொல்வார்.
இந்த மகத்தான சிரிப்பை செலவிடுவதில் கூட சிலர், சிக்கனம் காட்டுவதை நாம் பார்க்கலாம்.
மூளைக்கு சுறுசுறுப்பை முழுமையாகக் கொடுக்கக் கூடியது சிரிப்பு மட்டுமே. உடல் முழுவதற்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய சக்தி பெற்றது சிரிப்பு மட்டுமே.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த சிரிப்பை (Special of laughter) நம்மில் பலர் மறந்து போய்விட்டோம்.இப்பொழுதுள்ள இயந்திர வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிப்பதையே மறந்துவிட்டனர்.நமது முன்னோர்கள் சிரிப்பு மனித உடலுக்கு ஒப்பிட முடியாத மருந்து என்று கூறுவர்.
சினிமாவில் சிரிப்பு
சினிமாக்களில் நகைச்சுவைக்கென்றே ஒரு பகுதியை ஏற்படுத்தி சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள். எத்தனையோ திரையிசைப் பாடல்களில் சிரிப்பின் முக்கியத்துவமும் மருத்துவ மகத்துவத்தையும் பற்றி பல பல திரைப்பாடல்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு 1956ஆம் ஆண்டில் கலைஞர் மு. கருணாநிதி கதை வசனத்தில் பிப்ரவரி மாதம் வெளிவந்த ”ராஜா ராணி” என்ற படத்தில் சிரிப்பின் சிறப்பை விளக்கி கலைவாணர் கலைநயமிக்க இந்தப் பாடலைப் பாடுவார்.
”சிரிப்பு… இதன்
சிறப்பை சீர் தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு!”
”சிரிப்பு”க்கும் ”இதன்” என்னும் வார்த்தைக்கும் இடையில் சிரித்துக் காட்டுவார் கலைவாணர்.
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடி சிரிப்பு…!
இது களையை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு!
துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தையைப் புரிவது சிரிப்பு!
இதைத் துணையாய் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனிச் செழிப்பு!
பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப் பல்லிளிப்பதும் ஒருவகை சிரிப்பு!
அதன் பலனாய்க் கிடைப்பது காதறுந்த பழஞ் செருப்பு!
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்திற்கே சொந்தமான கையிருப்பு….!
வேறு ஜீவராசிகள் செய்யமுடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு.
இது… அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு!
அடங்கி நடப்பவன் அசட்டு சிரிப்பு!
இது… சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு!
சங்கீத சிரிப்பு”
இப்படி சிரிப்பில் எத்தனை வகையுண்டோ அத்தனையும் சிரித்துக் காட்டி தான் பிறவி எடுத்த பயனை நிரூபித்துக் காட்டினார் கலைவாணர்.
திரைப்படம் மனிதனுக்கு பொழுது போக்கிற்காக மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் வரும் பாடல்களில் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஆரோக்கியம் மற்றும் சமூக அக்கறையையும் விளக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.
சிரிப்பின் சக்தி (Special of laughter)
சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி.மனதை மயக்கும் மந்திர சக்தி.அனைவரையும் கவரும் அற்புத சக்தி. ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழ வைக்கும் நிரந்தர சக்தி.
பூமியில் வாழும் எந்த ஜீவராசிகளுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்திருக்கும் விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு.
பூட்டிக் கிடக்கின்ற வாழ்க்கையை திறக்கின்ற மந்திரச்சாவி சிரிப்பு மட்டும் தான்.
‘சிரித்து வாழ வேண்டும்.பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னம்பிக்கையை ஊட்டியவர் சினிமா பாடலாசிரியர் புலமைபித்தன்.
உன் சிரிப்பின் நீளம் எவ்வளவோ – அந்தளவு உன் ஆயுளின் நீளம் என்பார்கள்.
அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரே மொழி சிரிப்பு மட்டும் தான். சிரிப்பு நம்மிடம் இருக்கும் போது கோபம், பொறாமை, அச்சம், வெறுப்புணர்வு காணாமல் போய்விடுகிறது.
சிரிப்பின் இன்றைய தேவை (Today’s need for laughter)
வாழ்க்கை என்பது ஒரு தராசு போன்றது. ஒவ்வொரு நாளும் தராசு நம்முன் துாக்கிப் பிடிக்கப்படுகிறது. ஒரு தட்டில் மகிழ்ச்சியை வைக்கிறோம். மறுதட்டில் கோபம், எரிச்சல், ஆத்திரம், சோம்பேறித்தனம் போன்றவைகள். நம்மாலோ அல்லது நம்மை சார்ந்தவர்களாவோ அடுக்கப்படுகிறது.
மகிழ்ச்சி தட்டை விட இந்த தட்டு கனம் அதிகமாகி கீழே இறங்கிவிடுவதால், அந்த நாள் மகிழ்ச்சியற்ற நாளாக கடந்து போய் விடுகிறது.
ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியை அவர் மனமே தீர்மானிக்கிறது. அந்த மனம் பக்குவப்பட, மனம் லேசாக நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை தான் சிரிப்பு. என்னதான் பணம், பதவி, உறவுகள் என எல்லாம் இருந்தாலும்,
நாம் விலை கொடுத்து வாங்க முடியாத விஷயங்களில் ஒன்றுதான் மகிழ்ச்சி.
நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ஒரே நிமிடத்தில் கோபப்பட வைத்துவிடலாம். ஆனால், அந்த நபரை ஒரே நிமிடத்திற்குள் சிரிக்க வைக்க முடியாது. அதுதான் கோபத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள பெரிய வித்தியாசம்.
இந்த நிலை மாற, குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க, குடும்பங்களில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும்.அப்போது இல்லம் சொர்க்கமாகும். உள்ளம் கோவிலாகும்.
இதனால் மனம் மகிழ்ச்சி அடைகிறது. மனம் மகிழ்ச்சி அடையும்போது சிரிப்பு தானாக வரும்.
சிரிப்பு தானாக வரும்போது நிறைகள் தெரியும். குறைகள் தெரியாது.
மனைவி கணவனிடம், ‘ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கவா, ரசம் வைக்கவா?’- உடனே
கணவன், ‘முதல்ல ஏதாவது ஒண்ணு வை. அப்புறமா அதுக்கு பேர்
வைக்கலாம்’ என்றார்.
போகிற போக்கில் சில நகைச்சுவை தானாக வரும்.
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு.நமக்கு அழகு சிரிப்பு.
நான்கு வயது குழந்தை தினமும் 500 முறைக்கு மேல் சராசரியாக சிரிக்கிறது. ஆனால் வாழ்க்கையை எதிர்கொள்ள துவங்கியவுடன் தினமும் 15 முறை சிரித்தாலே அதிகமென்றாகிவிட்டது. மனம் விட்டு சிரிப்பது (Special of laughter) ஹார்மோன்களை துாண்டி உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
‘சிரிப்பு என்பது மந்திரம்,கலை,கருவி,மகத்துவம், மருத்துவம்’
எப்போதும் நம் உதடுகளில் புன்னகை இருக்கட்டும். அது தரும் தன்னம்பிக்கையை வேறு எதனாலும் தரமுடியாது.
அதனால்
சிக்கனமின்றி சிரிப்போம்!
வாழ்வில் சிறப்போம்!