முளைகட்டிய பாசிப்பயறு சூப் (Sprouted soup)
நம் பாரம்பரிய ஆரோக்கிய உணவு வகைகளில் முக்கியமானஒன்றாக முளைகட்டிய பயறுகள் இடம்பெறுகின்றன.
சாதாரணப் பயறுகளை விட முளைகட்டிய பயற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம். முளைகட்டிய பாசிப்பயறில் புரதம், நார்ச்சத்து ,விற்றமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், தயாமின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முளைகட்டிய பயறு வகைகளை நாம் தினசரி எடுத்துக்கொள்ளலாம். அதிலும் இலகுவாக செய்யக் கூடிய சூப் (Sprouted soup) விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள் இது.
முளைகட்டிய பாசிப்பயறில் குழம்பு,குருமா,சுண்டல்,சலாட் ,இனிப்பு சுண்டல்,சத்துமா என பலவிதமாக தயாரித்து உண்ணலாம். இங்கு முளைகட்டிய பாசிப்பயற்றில் சுவையான சத்துமிக்க சூப் (Sprouted soup)செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் (Ingredients for Sprouted soup)
முளைகட்டிய பாசிப்பயறு – அரை கப்
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
தனியாதூள் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
புதினா, கொத்துமல்லி – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் – ஒரு கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை (Sprouted soup recipe)
- கொத்தமல்லி, புதினா, வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு,மஞ்சள்தூள், வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
- இதில் 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாகக் கொதிக்கும் போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும்.
- பயறு அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். இந்த சூப் தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் .
- விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம்.
சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.
முளைகட்டிய பச்சைப்பயறு நன்மைகள்(Benefits of Sprouted Green Beans)
முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான சக்தியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
விற்றமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது.பார்வைத் திறனை மேம்படுத்தும்.
இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன.
முளைகட்டிய பயறுகளில் உள்ள விற்றமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்.
இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients), சருமத்தில் ஏற்படும் செல் இழப்பு, பாதிப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது.
அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்கிறது.
இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது. ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது.
`அனீமியா’ என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது. உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, நடுக்கத்தைச் சரிசெய்கிறது.
முளைகட்டிய பச்சைப்பயறை நீர் சேர்த்து அரைத்து, அதில் வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிபனாகச் சாப்பிடலாம்.
அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். அல்சரைக் கட்டுப்படுத்தும். பளபளப்பான சருமம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இவற்றை வேகவைத்தோ,எண்ணெயில் பொரித்தோ சாப்பிடக் கூடாது.
வயது முதிர்ந்தவர்கள் முளைகட்டிய பயறுகளை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
பலவிதமான தானியங்களை முளைகட்டவைத்து நவதானிய சூப்பாகாவும் செய்யலாம்.
முளைகட்டிய நவதானிய சூப் (Mixed Sprouted soup)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முளைகட்டிய நவதானிய சூப் .
இதை வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடலாம். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சத்து கிடைக்க இந்த நவதானிய சூப் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய பயறுகள் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
பூண்டு – 2 பல்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – காரத்துக்கேற்ப
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.
பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.