ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்ரீ காளஹஸ்தி (Sri kalahasti)

திருக்காளத்தி  அல்லது  ஸ்ரீ காளஹஸ்தி (Sri kalahasti), இத்தலம் சிறந்த ‘ராகு, கேது க்ஷேத்ரம்’ என்று அழைக்கப் படுகிறது. தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது. சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். அன்புக்குச்சான்றான கண்ணப்பர் தொண்டாற்றி வீடுபேறு பெற்ற விழுமிய தலம்.

‘அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி’ எனச் சிறப்பிக்கப்படும் தலம். நக்கீரர் ‘கயிலை பாதி காளத்தி பாதி’ பாடியுள்ள பெருமை பெற்ற தலம். முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

கண்ணப்பரின் பக்தியை வியந்து ஸ்ரீ ஆதிசங்கரர், தம் சிவானந்தலஹரியில் பாடியுள்ளதை அனைவரும் அறிவர். அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ – காளம் – அத்தி  (சிலந்தி, பாம்பு ,யானை) ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம். மலையடிவாரத்தில் உள்ள அருமையான திருக்கோயில்.

திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் அமைப்பு (Sri kalahasti)

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி (Sri kalahasti), பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும்.

இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

மூலையில் 2 கால்களை வெளியே நிறுத்திச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் வலப்பக்கமாக சுவரோரமாகவுள்ளது. கவனித்தால் தான் இது தெரியும்.

வலப்பக்கம் உள்ள கோபுரம் ‘திருமஞ்சனக் கோபுரம்’ எனப்படும். இக்கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

மூலவர், சுயம்பு தீண்டாத்திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. சந்நிதியில் மூலவர் பக்கத்தில் மனோன்மணி சக்தியின் திருமேனி உள்ளது.கீழே ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் போக மூர்த்தத் திருமேனி உள்ளது.
சந்நிதியில் வேடர் பெருமானாகிய கண்ணப்பரின் மூலத் திருமேனி உள்ளது.
மூலவருக்கு எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன.
பக்கத்தில் வில் ஏந்திய கண்ணப்பர் திருவுருவம் கம்பீரமாகத் தரிசனம் தருகிறது. வரிசையாக வல்லபை கணபதி, லட்சுமி கணபதி சக்தி கணபதிகள் உள்ளனர். கிருஷ்ணதேவராயரும் அவருடைய மனைவியாரும் பிரதிஷ்டை செய்ததாக லிங்கங்கள் உள்ளன.
இவ்வாறே அடுத்தடுத்து, பெரியதும் சிறியதுமாகவும், சீதை லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள் முதலியோர்கள் பிரதிஷ்டை செய்ததாகவும் பல சிவலிங்கங்கள் உள்ளன.
கனகதுர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நடராச சபையில் இரண்டு திருமேனிகளும், இரண்டு சிவகாமித் திருமேனிகளும் உள்ளன. அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் அழகுற உள்ளன.
திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘அர்த்தமேரு’ உள்ளது. அம்பாள் இடுப்பில் ஒட்டியாணத்தில் ‘கேது’ உருவமுள்ளது.
சந்நிதிக்கு வெளியில் பிராகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசிச் சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.
அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது.சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
அடுத்து வலமாக வரும் போது சித்திரகுப்தர், இயமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன.

மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின் போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்.

அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்று கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம்.

அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.

இதற்குப் பக்கத்தில் அருமையான பெரிய ஸ்படிகலிங்கம் உள்ளது. இது ஸ்ரீ ஆதி சங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.

பக்கத்தில் சிலந்தி, யானை, பாம்பு, கண்ணப்பர் முதலிய திருவுருவங்கள் உள்ளன.

கைலாசகிரி

கைலாசகிரி மலையிலிருந்து பார்த்தால் ஊரின்தோற்றம் நன்கு தெரிகிறது. இது  கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம்.இம்மலையில் காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பரின் திருவுருவங்களும் உள்ளன.

மலைப்படிகளேறும் போதே திரும்பிப் பார்த்தால்  தொலைவில் ‘பரத்வாஜதீர்த்தம்’ – குளம் நன்கு தெரியும். கரையில் அம்மகரிஷி தவம்புரிந்த கோயில் உள்ளது. சிவலிங்கத்திருமேனியும், பரத்வாஜ மகரிஷியின் திருவுருவமும் கோயிலில் உள்ளன.

பொங்கல் விழாவில் ஒரு நாளிலும் பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இருநாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்.

அவ்வாறு வரும் போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வது வழமை. இவ்வலம் காலை தொடங்கி அடுத்த நாளே முடிவுறும்.

சுவாமியின் திருக்கல்யாண விழாவின் போது பொதுமக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்திலும் உள்ளது.

தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முத்தி எனப்படுகிறது. “ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி” என்கின்றனர்.

பொன்முகலி உத்திரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது பண்டை விசேஷமாகும். பண்டை நாளில் ரிஷிகள் பொன்முகலியில் நீராடி கிழக்கு நோக்கித் தரிசிக்க அவர்களுக்கு காட்சி தரவே சுவாமி மேற்கு நோக்கினார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

கைலாசகிரியில் சற்று சுற்றினாற்போல் கற்களின் மீது ஏறிச் சென்றால் ஒரு சிறிய கோயில் உள்ளது.

ஒரு கால் மடக்கி ஓரு காலூன்றியவாறு உள்ள ஒரு உருவம் அதில் உள்ளது. இதை ஒரு சிலர் நக்கீரர் என்கின்றனர். நக்கீரர் இம் மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்ற வரலாறும், இத்தலத்தின் மீது கயிலைபாதி நூலைப் பாடியுள்ளதும் நாம் அறிந்தவையே.

சிவராத்திரியையொட்டி பத்து நாட்களுக்கு இத்தலத்தில் பெருவிழா நடைபெறுகிறது.

தோஷங்கள் விலக பரிகார பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி (Sri kalahasti), காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது.

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து , பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

திருக்காளத்தி தல வரலாறு/சிலந்தி யானை பாம்பு வழிபட்ட  கதை

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது.

பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது.

கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது.

பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது.

சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார்.

மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

பாதாள விநாயகர்

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள விநாயகர் கோவில் உள்ளது. பெயருக்கேற்ப, விநாயகர் 35′ ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது.

தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது.

இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

திருக்காளத்தி கோயிலின் சிறப்புக்கள் (Highlights of Sri kalahasti Temple)

சொக்கப்பனை கொழுத்தி, எரிந்த அக்கரியை அரைத்து சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவது இங்கு சிறப்பு. இரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும்.

பிரதான கோபுரம் தக்ஷிண கோபுரம் எனப்படுகிறது.

இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை  உள்ளது.

மூலவர், சுயம்பு – தீண்டாத் திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.

சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன.

சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது.

ஆலய நுழைவு வாயில் எதிரில் இரு கொடிமரங்கள். ஒன்று கவசமிட்டது. மற்றொன்று கல்லால் ஆனது. 60 அடி உயரமுள்ள இது ஒரே கல்லால் ஆனது. பலிபீடமும் நந்தியும் உள்ளன.

கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லை.
பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு தரிசிப்போர்க்கு அத்தீர்த்தத்தையே தருகின்றனர்.
மூலவருக்குக் கங்கை நீரைத் தவிர வேறெதுவும் மேலே படக் கூடாது என்பதால் பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.

சுவாமி மீது தங்கக் கவசம் சார்த்தப்பட்டுள்ளது. இக்கவசத்தைச் சார்த்தும் போதும் எடுக்கும் போது கூட சுவாமி மீது கரம் படக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

சர்ப்பதோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்திகள் செய்தல் முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகின்றது.

இக்கோயிலில் உச்சிக்காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை. காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

தினமும் நான்கு கால பூஜைகள், பரத்வாஜ, மகரிஷி இங்குத்தவஞ்செய்து பேறு பெற்றாராதலின் அக்கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே இங்குப் பூஜைகளைச் செய்து வருகின்றார்கள்.

இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனி பகவான் மட்டும் உள்ளார்.

இத்தலத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பு, இங்கு அர்த்தசாமப் பூஜை கிடையாது. சாயரட்சை பூஜையுடன் முடிவு. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை, பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விடுவார்கள்.

காளத்தியானைக் கண்ணுளானாகக் கண்டு தொழ – எத்தனை நேரம் தொழுதாலும் தெவிட்டாத தரிசனம். இச் சந்நிதியில் கிடைக்கும் சாந்திக்கு ஈடேது. விட்டுப் பிரிய மனமில்லை. அப்போ  கண்ணப்பரின் நிலை என்னவாக  இருந்திருக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *