இனிப்பான ஒடியல்மா பிட்டு (Sweet Odiyal flour puttu)
ஓடியல்மாவில் தயாரிக்கப்படும் இந்த பிட்டு (Sweet Odiyal flour puttu) தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.இது அதிக நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியம் சேர்க்கும் உணவு.இனிப்பான ஒடியல்மா பிட்டு அதிகமான தேங்காய்ப்பூ போட்டு,சீனி அல்லது பனை வெல்லம் சேர்த்து செய்யப்படும்.
தேவையான பொருட்கள்
ஒடியல் மா
தேங்காய்ப் பூ
தண்ணீர்
பனைவெல்லம் அல்லது சர்க்கரை
உப்பு (சிறிதளவு )
ஒடியல்மா பிட்டு செய்யும் முறையை வீடியோவில் பார்க்கலாம்.
ஒடியல்மா பிட்டு (Sweet Odiyal flour puttu) செய்யும் முறை
- ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.
- மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும்.
- பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும்.
- இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும்.
- தாராளமான தேங்காய்ப் பூவைச் சேர்த்து அவித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.தேங்காய்ப்பூவிலிருந்து பாலை ஒரு தரம் பிழிந்து எடுத்து விட்டு பிட்டுடன் சேர்த்து அவித்தால் பிட்டு நீர்த்துப் போகாது.
அதில் சர்க்கரை சேர்த்து சுடச்சுட சாப்பிடுவது மிக சுவையாக இருக்கும்.
பச்சை மிளகாய், நெத்தலிக்கருவாடு போட்டு உறைப்பு பிட்டாகவும் அவிக்கலாம்.
சாதாரணமாக ஒடியல் பிட்டு கூடுதலாக மதிய உணவாகவே உண்ணப்பட்டது. சாதாரண ஒடியல்பிட்டு தேங்காய்ப்பூ போட்டு அவிக்கப்பட்டு சோறுடன் சேர்த்து உண்ணப்படும்.
பிட்டை அவித்து இறக்கியதும் உடனேயே பிரித்து, உதிர்த்து விட வேண்டும். இல்லாவிடில் பிட்டு கட்டியாக இறுகி விடும்.அவித்த உடனே சுடச்சுட சாப்பிடுவது சுவையாக இருக்கும்.
பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து சேகரித்து வைப்பார்கள். இதை ‘ஒடியல்’ என்போம் . ஒடியலை பல மாதங்கள் பழுதுபடாமல் வைத்திருக்கலாம். ஒடியலைத் துண்டுகளாக்கி இடித்து மாவாக்கி பத்திரப்படுத்தி வைப்பார்கள்.இந்த மா தான் ‘ஒடியல்மா’.
ஒடியல்மா உடன் கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.
உணவுப்பொருள் செரிமானம், ரத்த உற்பத்தி, நச்சுப்பொருள் உற்பத்தி, ரத்த சிதைவு என இவற்றிற்கெல்லாம் முக்கிய உறுப்பாக நம் உடலில் கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் உபாதைகளுக்கு பனம் பொருட்கள் மிக சிறந்த மருந்தாக இயற்கை நமக்களித்திருக்கிறது.
எனவே பனம் பொருட்களான ஒடியல்,புழுக்கொடியல் ,பனாட்டு போன்றனவற்றை சரியாக பயன்படுத்தி பலன் பெறுவோம்.
ஒடியல்மாவை பிட்டு,ஒடியல் கூழ் போன்ற உணவுகளாக அடிக்கடி சேர்த்து நலமோடு வாழ்வோம்.