துளசி என்னும் தெய்வீக மூலிகை (Thulasi)
நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது துளசி (Thulasi).
துளசி கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால் தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்பார்கள்.
ஆரோக்கியத்திற்கு உகந்த பாதுகாப்பளிக்கும் மூலிகையாக விளங்குவதாலேயே துளசி தெய்வமாகப் பூஜை செய்யப்படுகிறது. பூஜையில் துளசிமாலையும் சாத்தப்படும். திருமாலின் பூஜையில் சிறப்பு பிரசாதமாகவும் உள்ளது.
இறைவன் வழிபாட்டிற்கு உரியதாதலால் இதை மிக புனிதமாக உபயோகிப்பர்.
துளசி (Thulasi) பயிரான இடத்தில் உள்ள சூழ்நிலையே – காற்றும் தண்ணீரும் மண்ணுமே சுத்தமாகிவிடும். தன்னுடன் கலந்தவைகளை அழுகவிடாது.
மலேரியா (maleria),வைரஸ் (Influenza) முதலிய தொற்றுநோய்கள் பரவும் போது துளசியின் மணத்தை நுகர்ந்து கொண்டே இருந்தால் நோய் குணமாவதோடு மற்றவருக்கும் தொத்தாது.
உடம்பில் கதகதப்பைப் பாதுகாக்கவும், குறைந்தால் அதிகரிக்கச் செய்யவும் திறமை படைத்தது.
இந்தக் கதகதப்பும் காரமும் காரணமாக மார்பு தொண்டை முதலிய இடங்களில் கட்டி உபத்திரவிக்கும் கபத்தை இளக்கி வெளியேற்றும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்க நல்மருந்து. நாக்கில் சேரும் குழகுழப்பையும் பூச்சையும் இளக்கி வெளியேற்றி வாயில் சுரசுரப்பையும், நல்ல சுவையுணர்ச்சியையும் அளிக்கும். ரத்த அழுத்தம் குறையும்!
தினமும் சில துளசி (Thulasi) இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க, ஏராளமான பணத்தை செலவழித்து எதுவும் பயனில்லை என புலம்புபவர்களுக்கான தீர்வும் துளசியிடத்தில் இருக்கிறது.
துளசி (Thulasi) சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.

தோல் நோய் நீங்க Cure skin disease
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும் என சித்த மருத்துவம் சொல்கின்றது.
என்றும் இளமை
இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும்.
இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.
உடலுக்கான கிருமிநாசினி துளசி (Thulasi as a Disinfectant for the body)
மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்சனைகள் அறவே வராது. குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி(Thulasi) இலைகளை ஊறவைத்து குளித்தால் வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.
நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும்
என்கிறது வேதம்.
துளசியில் எத்தனை வகை? (Types of basil)
துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும்.
விளையும் நிலத்தையும் சூழ்நிலையையும் ஒட்டி நிறத்திலும் மணத்திலும் உருவிலும் தான் எத்தனை மாறுதல்கள்! நல்துளசி,வெண்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்). எனினும் அதிகமாக எளிதில் கிடைப்பவை வெண்துளசியும், கருந்துளசியும் தான்.
இரண்டுக்கும் குணத்தில் அதிக வேற்றுமை இல்லை. மணற்பாங்கான உஷ்ணபூமியில் உஷ்ணதேசத்தில் விளைவதில் காரம் அதிகம். நீர்ப்பாங்கான இடத்தில் குளிர்ந்ததேசத்தில் விளைவதில் காரம் சற்று குறைவு.
ஜூரத்திற்கு சிறந்த மருந்தாக துளசி
உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். ஜூரம் வந்த பின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
துளசி, மிளகு, பழயவெல்லம் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு கழற்சிக்காயளவு தொடர்ந்து சாப்பிட்டு வர மலேரியா, யானைக்கால் ஜூவரம் வராது.
ஜூரம் வரும் போலிருக்கும் போதே பத்து துளசி இலையையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட ஆரம்பநிலையிலேயே ஜூரம் தவிர்க்கப்பட்டுவிடும்.
துளசி மிளகு இவைகளுடன் தும்பை இலையையும் சேர்த்துக் கஷாயமிட்டுச் சாப்பிட குளிர் ஜ்வரம், வாயுவால் ஏற்படும் குடைச்சல் வலி இவை நீங்கும்.
விஷ ஜூரங்கள் பரவும் போது இதைத் தடுப்பிற்காக உபயோகப்படுத்தலாம்.
துளசியின் மருத்துவ பயன்பாடு
நோய்களில் அனுபவமுள்ள பெரியோர்கள் துளசியை நூற்றுக்கணக்கான முறைகளில் உபயோகிப்பர். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகசக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
துளசியிலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
பசியைத் தூண்டி நல்ல ஜீரணசக்தியை அளிக்கும். குளிருடன் ஏற்படும் ஜூரம், மார்பில் கபக்கட்டுடன் ஏற்படும் இருமல், மூச்சுத் திணறல், நுரையீரலில் கபம் நீர் நிரம்பி ஏற்படும் விலாவலி, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றில் அஜீர்ணம், மார்பில் சளிக்கட்டு, தலையில் நீர்க்கோர்வை, இனந்தெரியாத வேதனையால் அழுகை, உடலை முறித்துக்கொள்ளுதல் முதலியவைகளில் அனுபானமாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.துளசிச் சாற்றை அடிக்கடி சாப்பிடுவது, துளசி போட்ட வெந்நீரைக் குடிப்பது, துளசியை அரைத்து வேதனையுள்ள இடங்களில் பூசுவது, துளசியை முகர்வது முதலியவை ஆச்சரியமான வகையில் வேதனையைக் குறைத்து நோயாளிக்கு மனத்தெம்பு ஊட்டும்.
உடலில் எப்பகுதியாவது அழுக ஆரம்பித்தாலோ, அழுகிக் கிருமிகள் உண்டானாலோ, துளசியைத் தொடர்ந்து உபயோகித்து வர கிருமிகள் அழிந்து புண் ஆறும். வயிற்றில் ஆகாரம் அழுகி ஏற்படும் கீரைப் பூச்சிகளையும் இது ஒழிக்கும்.
தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி இவைகளில் மேல் பூச மிகவும் நல்லது.
பச்சைத் துளசியைக் கசக்கிப் பிழிந்து சாறாகவோ, கஷாயமாகச் செய்தோ நிழலில் உலர்த்தித் தூளாக்கிக் கொண்டு சூரணமாகவோ,கஷாயமாகவோ, டீயாகவோ சாப்பிடலாம். துளசியைப் பச்சையாகவோ காய்ந்ததாகவோ அரைத்தும் பூசலாம்.
துளசியுடன் மிளகுக்குப் பதில் ஓமத்தைச் சேர்த்துச் சாப்பிட வயிற்றில் அஜீரணத்தாலும், வாயுவாலும் ஏற்படும் பொருமல்,வலி, அஜீரணபேதி, பூச்சிகளால் ஏற்படும் பேதி, முதலியவைகளில் நல்ல குணம் கிடைக்கும்.
சிசுக்களுக்கு ஏற்படும் வயிற்றுநோய்களிலும் கபக்கட்டிலும் இம்முறைகள் மிகவும் பயன்தரும்.
கபம் அதிகமாக இருக்கும் போது ஓரிரண்டு வெற்றிலையைக் கசக்கிப் பிழிந்த சாறும் சேர்த்துக் கொடுக்க நல்லது.
இதுமாதிரியே துளசியுடன் இஞ்சி சுக்கு திப்பிலி இவைகளில் ஒன்றைப் பக்குவப்படுத்தி எல்லா நிலைகளிலும் கொடுக்கலாம்.
துளசிச்சாற்றுடன் கிராம்புத் தூளும் கற்பூரமும் சேர்த்து, சொத்தையுள்ள பற்களிலும் ஈறு வீங்கிய இடங்களிலும் வைக்க வேதனை நீங்கும். துளசியை அரைத்து உடலில் பூசி சிறிது நேரத்திற்குப் பின் குளிக்க காணாக்கடி நீங்கும்.
துளசிச் சாற்றையும், எலுமிச்சம் பழச்சாற்றையும், கற்பூரமும் சேர்த்துத் தடவ தலையிலுள்ள பேன்களும், அரிப்பு, படை, தேமல், வரட்டுச் சொரி முதலியவைகளும் நீங்கும்.
கராம்பையும் சுக்கையும் துளசியைக் காயவைத்துத் தூள் செய்து இட மூக்கடைப்பு, தலைச்சளி, தலைவலி, தலைக் குடைச்சல் இவை நீங்கும்.