டைப் 1 ,டைப் 2 சர்க்கரைநோய் (Type1 & Type2 Diabetes)

டைப் 1 ,டைப் 2 சர்க்கரைநோய்  (Type1 & Type2 Diabetes) வெல்ல நல்வழிகாட்டி!

விளக்கமாக அறிந்து கொள்ளுவோம்.

உடல் உழைப்புக் குறைவு, தவறான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த சர்க்கரை நோய் இன்று 20 வயதினருக்குக்கூட வர ஆரம்பித்துவிட்டது என்பதே கசப்பான உண்மை. நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட, வரும் முன் காப்பது தான் புத்திசாலித்தனம்;

”சர்க்கரை நோயை ‘மெட்டபாலிக் டிசீஸ்’ என்போம். நாம் சாப்பிடும் உணவு செரிமானத்தின்போது சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரை தான் நம் உடலில் உள்ள திசுக்களுக்கான உணவு.

ரத்தம் உடல் முழுக்கப் பாயும்போது திசுக்கள் ஆக்சிஜனையும், சர்க்கரையையும் எடுத்துக்கொள்ளும். இந்தச் சர்க்கரையை திசுக்கள் நேரடியாக எடுத்துக்கொள்ளாது. இதற்கு இன்சுலின் தேவை.

சிலருக்கு இன்சுலின் முற்றிலும் சுரக்காது அல்லது போதுமான அளவு சுரக்காது. சிலருக்கு சுரக்கும் இன்சுலினின் செயல்திறன் போதுமானதாக இருக்காது.

இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை திசுக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதையே ‘சர்க்கரை நோய்’ என்கிறோம்.

சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2, கர்ப்பகால சர்க்கரை நோய் (Type1 & Type2 Diabetes) என்று மூன்று வகை உள்ளன.

டைப் 1 சர்க்கரை நோய் (Type1 & Type2 Diabetes) 

இந்த பாதிப்பில் இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரப்பது இல்லை. இதனால் இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது குழந்தைகள் மத்தியில் காணப்படுகிறது.

டைப் 2 சர்க்கரை நோய்

இந்த டைப் நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்காது. அல்லது சுரக்கும் இன்சுலினைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இதை, ‘இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ என்போம்.

இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் நரம்பு மண்டலம் மற்றும் கண், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள மிகச்சிறிய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.

ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால் நீர் இழப்பு ஏற்பட்டு, தாகம் எடுக்கும்.

டைப் 2 சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரலாம்?  

45 வயதைக் கடந்தவர்கள்

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள்

கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வந்தவர்கள்

குடும்பத்தில் பெற்றோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்

ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள்

உடல் உழைப்பு அற்றவர்கள்

உடற்பயிற்சி செய்யாதவர்கள்

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள்

சர்க்கரை நோய் ஏற்பாட்டுள்ளதற்கான அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

தாகம்

உடல் சோர்வு

பசி

பார்வை மங்கல்

உலர் சருமம் மற்றும் தோலில் அரிப்பு

காயங்கள் ஆறுவதில் தாமதம்

எதிர்பாராத உடல் எடை இழப்பு அல்லது  உடல் எடை அதிகரிப்பு

  

அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏன் ஏற்படுகிறது?

திசுக்கள் சர்க்கரையைப் பயன்படுத்த முடியாத நிலையில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. சிறுநீரகம் அதிகப்படியான சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

இதனால் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது சர்க்கரையுடன் சேர்த்து சோடியம், பொட் டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் வெளியேறு கின்றன.

தாகம் ஏன் எடுக்கிறது?

உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்த போதுமான அளவு தண்ணீர் தேவை. அடிக்கடி சிறுநீர் வெளி யேறுவதால் உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்டுவதற்காகவே தாகம் எடுக்கிறது.

சோர்வு ஏன் ஏற்படுகிறது?

போதுமான அளவு இன்சுலின் சுரக்காததால் அல்லது இன்சுலின் செயல்திறன் குறைவாக உள்ள காரணத்தால் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைப்பது இல்லை. இதனுடன், சிறுநீரகமும் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றும்போது உடலுக்குத் தேவையான நீர் மற்றும் தாது உப்புக்களையும் சேர்த்தே வெளி யேற்றிவிடுகிறது. இதனால் சோர்வு ஏற்படுகிறது.

சர்க்கரையைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஏன் பசி ஏற்படுகிறது?

பொதுவாக பலருக்கு தாகம் என்ற உணர்வு பசியாக வெளிப் படும். மேலும் உடல் சோர்வாக உள்ள நேரத்தில், போதுமான ஆற்றலைப் பெற உடலும் பசி உணர்வை ஏற்படுத்தும். இதனால் தான் பலருக்குப் பசி உணர்வு ஏற்படுகிறது.

சருமம் ஏன் உலர்கிறது?

நீரிழப்பு ஏற்படுவதால் சருமத்துக்குத் தேவையான நீர் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போய்ச் சேருவது பாதிக்கப்படுகிறது. இதனால் சருமம் சுருங்கி, வறண்டுபோய் அரிப்பு ஏற்படுகிறது.

புண் ஆற ஏன் நாளாகிறது?

காயங்கள் ஆற ஊட்டச்சத்து அந்த இடத்துக்குப்போய் சேர வேண்டும். ஆனால், சர்க்கரை நோயாளிக்கு ஊட்டச் சத்து குறைவாகவே இருக்கிறது. மேலும், சர்க்கரை நோய் இருக்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாடும் குறைவாகவே இருக்கும்.

உடல் எடை ஏன் குறைகிறது அல்லது கூடுகிறது?

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாத நிலையில் உடல் எடை குறைகிறது. சிலர், அதிகப் பசி காரணமாக அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்கின்றனர்.

இதனால் அதிகப்படியான சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *