உக்ரைன் என்னும் போர் பூமி (Ukraine)
பணக்கார நாடுகள் அதிகம் இருக்கும் ஐரோப்பாவிலேயே ஏழ்மையான நாடுகளில் ஒன்று உக்ரைன்(Ukraine).
பனியும் குளிரும் சூழ்ந்த ஐரோப்பாவில் அதிகமான விவசாய நிலங்கள் இருக்கும் நாடும் இதுதான். ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு இது தான்.
நான்கு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்தப் பெரிய தேசத்தை ரஷ்யா தன்னுடன் இணைக்கப் பார்ப்பது தான் தற்போது உலகின் தலைப்புச் செய்தி.
உக்ரைன் என்பது எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது தான்’.நவீன கால உக்ரைன் ஒரு தனி தேசமாக எப்போதும் இருந்ததில்லை. அது, கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கிய குழப்பம்.
உக்ரைன் பேரரசின் பொற்காலம் (Golden age of the Ukrainian Empire)
இந்தியாவை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த அதே காலகட்டத்தில் கீவியன் ரஸ் (Kievan Rus) என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்கால உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்(Kiev), அப்போதும் அந்தப் பேரரசின் தலைநகராக இருந்தது. ஐரோப்பாவின் வலிமை வாய்ந்த தேசமாக அப்போது கீவியன் ரஸ் செல்வாக்கு செலுத்தியது.
தற்போதைய உக்ரைன், பெலாரஸ், போலந்து மற்றும் ரஷ்யாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக அது இருந்தது. ஹாலிவுட் வரலாற்றுப் படங்களில் காட்டப்படும் வைக்கிங் பேரரசர்களை (Viking Empire)போல ஒரு ராஜ பரம்பரையின் ஆட்சியில் கீவியன் ரஸ் பேரரசின் பொற்காலம் இருந்தது.
விளாடிமிர் தி கிரேட், அந்தப் பேரரசின் புகழ்பெற்ற அரசர். கீவியன் ரஸ் பேரரசின் பெயரிலிருந்தே ரஷ்யா தன் பெயரைப் பெற்றது. 13-ம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு அந்தப் பேரரசை வீழ்த்தியது. தலைநகர் கீவ், அந்தப் போரில் தரைமட்டமானது.
ரத்த ஆறு ஓடிய ரஷ்யப் புரட்சி
முதல் உலகப் போரில் ரஷ்யப் பேரரசும் போலந்து பேரரசும் பெரும் அழிவை சந்தித்தன. அதே நேரத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் புரட்சி, அங்கு மன்னராட்சியை வீழ்த்தியது. அந்த நேரத்தில் உக்ரைன் தலைவர்கள் சிலர் இணைந்து, தனி நாட்டை உருவாக்கினர்.
உக்ரைன் மக்கள் குடியரசு இப்படி 1918-ம் ஆண்டு தனி நாடாக உருவானது. பல நாடுகளிடம் சிக்கியிருக்கும் உக்ரைன் (Ukraine) நிலங்களை மீட்க இது உதவும் என்பதால், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முயற்சியை ஆதரித்தது.
ஆனால், உக்ரைனில் இருந்த ரஷ்ய மன்னரின் ஆதரவாளர்களுக்கும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூண்டது.
ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட இந்தப் போரால் உக்ரைனில் மூன்று ஆண்டுகள் ரத்த ஆறு ஓடியது. கடைசியில் கிழக்கு உக்ரைன் (Ukraine)பிரதேசம் முழுக்க சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் வந்தது. மேற்கு உக்ரைனை போலந்து ஆக்கிரமித்துக்கொண்டது.
மீண்டும் ஒன்றானது உக்ரைன்(Reunited Ukraine)
சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன்(Ukraine) பகுதியில் மக்கள் அந்த மொழியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர். உக்ரைனின் பாரம்பரியக் கலைகள், பண்பாடு எல்லாவற்றையும் மீட்கும் முயற்சியை அரசே ஆதரித்தது.
போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ‘உக்ரைன்’ என்ற வார்த்தையை உச்சரிக்கவே தடை விதிக்கப்பட்டது. அரசு நடைமுறைகள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உக்ரைன் மொழியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பகுதி போலந்து வசம் போக, அதை எதிர்த்து உக்ரைன்(Ukraine) மக்கள் கிளர்ச்சி செய்தனர். ‘கொசாக் கிளர்ச்சி‘ என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் இந்த உரிமைப் போரில் பல்லாயிரம் பேர் இறந்தனர்.
இதை சாதகமாக வைத்துக்கொண்டு, உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய மன்னர்கள் ஆக்கிரமித்தனர்.
உக்ரைன் மண்ணில் ரஷ்யர்கள் பலர் வந்து குடியேறினர். கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைன் மொழியை அழிக்கும் முயற்சியும் அப்போது நடந்தது.
இதை எதிர்த்து உக்ரைன்(Ukraine) இன மக்கள் போராடினர். முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள் பலரும் ஆயுதம் ஏந்திப் போர் நடத்தினர்.
1939-ம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படைகள் போலந்தை தாக்கின. அதேநேரத்தில் சோவியத் ரஷ்யாவும் போலந்து மீது போர் தொடுத்தது. இரண்டு நாடுகளும் போலந்தை பங்கு பிரித்துக்கொண்டன. போலந்தின் வசமிருந்த உக்ரைன் பகுதிகள் எல்லாம் சோவியத் வசம் வந்தன.
வரலாற்றில் முதல் முறையாக உக்ரைன் மொழி பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசம் முழுக்க ஒன்றானது. உக்ரைன் மக்கள் மகிழ்ந்தனர்.
ஆனால், அதுதான் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்பதும், போரில் உக்ரைன் பேரழிவைச் சந்திக்கப் போகிறது என்பதும் அப்போது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
உக்ரைனிடம் தோல்வியைத் தழுவினாரா ஹிட்லர்?(Hitler embrace defeated in Ukraine?)
இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவின் பல பகுதிகளை வசப்படுத்திய ஹிட்லரின் ஜெர்மனி படைகள் அப்படியே ரஷ்யா மீது தாக்குதல் தொடுத்தன. 1941 ஜூன் மாதம் ஆரம்பித்த அந்தப் போரில் இரண்டு ஆண்டுகள் உக்ரைன் பிரதேசமே உக்கிரமான தாக்குதலைச் சந்தித்தது.
இன்றைய உக்ரைன் தலைநகரான கீவ் (Kiev) நகரை ஜெர்மனி படைகள் முற்றுகையிட, சோவியத் படைகள் அவர்களை எதிர்த்துப் போரிட்டன. எல்லா இடங்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்து வந்த ஹிட்லரின் படைகளுக்கு வீழாத ஹீரோ நகரமாக கீவ் பெயர் பெற்றது.
இரண்டு ஆண்டுகள் போர் புரிந்தும் அந்த நகரை ஹிட்லரின் நாஜி படைகளால் ஆக்கிரமிக்க முடியவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கிழக்கு உக்ரைன் மக்கள் சோவியத் ராணுவத்துடன் இணைந்து ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். அதே நேரத்தில் மேற்கு உக்ரைனில் ,உக்ரைன் போராளிப் படை, உக்ரைனிய தேசியவாத அமைப்பு என்ற இரண்டு புதுக் குழுக்கள் உருவாகின.
ஹிட்லரின் உதவியுடன் போலந்து மற்றும் ரஷ்ய நாடுகளை வீழ்த்திவிட்டு சுதந்திர உக்ரைன் தேசத்தை உருவாக்கலாம் என்று இவர்கள் கனவு கண்டனர்.
இவர்களில் ஒரு பிரிவினர் நாஜி படையுடன் இணைந்து ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக மோதினர். இன்னொரு பக்கம், ‘உக்ரைன் மண்ணிலிருந்து போலந்து மக்கள் வெளியேற வேண்டும்’ என்றும் கெடு விதித்தனர்.
மேற்கு உக்ரைன் பிரதேசத்தில் குடியேறி இருந்த சுமார் ஒரு லட்சம் போலந்து இன மக்களைக் கொன்று குவித்தது உக்ரைன் போராளிப் படை.
யூதர்களைக் கொன்று தன் கைகளை ரத்தக்கறையாக்கிக் கொண்ட ஹிட்லரின் கொடூரத்துக்கு இணையானது இந்த இனப் படுகொலை.
பெரும்பான்மை இனவாதம் எங்கெல்லாம் உச்சம் பெறுகிறதோ, அங்கெல்லாம் சிறுபான்மையினர் பாதிப்புக்கு ஆளாவார்கள். உக்ரைன் பிரதேசத்தில் சிறுபான்மை மக்களாக இருந்த போலந்து இனத்தவர் இப்படித்தான் கொல்லப்பட்டார்கள்.
உக்ரைனில் 60 லட்சம் பேரை பலிகொண்ட 2ம் உலக போர்!(Ukraine & 2nd world war)
தன்னை நம்பிய உக்ரைன் மக்களுக்கு, தனது ஆக்கிரமிப்பு முகத்தை சீக்கிரமே காட்டினார் ஹிட்லர். வளமான உக்ரைன் நிலங்களில் ஜெர்மானியர்களைக் குடியமர்த்தினார்.
உள்ளூர் மக்கள் அடக்குமுறைக்கு ஆளானார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்ற பிறகு தான் உக்ரைனில் அமைதி திரும்பியது. அந்தப் போரில் உக்ரைன் பிரதேசத்தில் மட்டுமே 60 லட்சம் பேர் இறந்தனர்.
போரால் அனைத்து நகரங்களும் கிராமங்களும் சிதைந்து போயிருந்தன. போர் முடிந்த உடனே பஞ்சமும் வந்தது. அதிலும் பல ஆயிரம் பேர் இறந்தனர்.
உக்ரைனில் மரணத்தைப் பார்க்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த பஞ்சத்தை ஒரு காரணமாக வைத்து, உக்ரைனில் இருந்த மக்களில் பலரை சைபீரியப் பிரதேசத்துக்கு அனுப்பினார் அப்போதைய சோவியத் அதிபர் ஸ்டாலின்(Stalin).
அந்த இடங்களில் ரஷ்யர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினார். இப்படித்தான் உக்ரைனில் ரஷ்யாவின் ஆதிக்கம் நிறுவப்பட்டது.
2ம் உலக போரின் பின் உக்ரைன்வளர்ச்சி
ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியனில் ஆட்சிக்கு வந்த நிகிதா குருசேவ், உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தவர் என்பதால், அவருக்கு உக்ரைன் பற்றி சகலமும் தெரியும்.
அதனால் உக்ரைனை வளர்க்க முயன்றார். இரும்புத்தாதும் நிலக்கரியும் அதிகம் இருக்கும் பகுதி என்பதால், வேகமான தொழில் வளர்ச்சி ஏற்பட்டது.
வேலைவாய்ப்பு பெருகியது. ஒருகட்டத்தில் ஐரோப்பாவிலேயே பெரிய தொழில் மையமாக உக்ரைன் இருந்தது.
ரஷ்யாவுக்குத் தேவையான ஆயுதங்களும் அணு ஆயுத முயற்சிகளும் இங்கு தான் நஹயாராகின. சோவியத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் பலர் உக்ரைனில் உருவானார்கள்.
சோவியத் ஆட்சி அதிகாரத்தில் முக்கியமான இடத்துக்குப் பலர் வந்தார்கள். குருசேவுக்குப் பிறகு சோவியத் யூனியனை ஆட்சி செய்த பிரஷ்னேவ் இங்கிருந்து சென்றவர் தான்.
அணு ஆயுதங்களை நிராகரித்த உக்ரைன்!
1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது உக்ரைன் தனி நாடாக உருவானது. பல தலைமுறைகளுக்கு முன்பாக அவர்கள் விரும்பிய விடுதலை கிடைத்தது.
சோவியத் யூனியனிலிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் படைவீரர்கள் கொண்ட ராணுவம் உக்ரைனுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அணு ஆயுதங்களும் கூடவே வந்தன. ஒரே நாளில் உக்ரைன், உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் கொண்ட மூன்றாவது வல்லரசாக மாறியது.
ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்க உக்ரைன் விரும்பவில்லை. சமாதான உடன்படிக்கையில் கையெழுத்து போட்டு, எல்லா அணு ஆயுதங்களையும் அழிப்பதற்காக ரஷ்யாவிடம் கொடுத்துவிட்டது.
நான்கே ஆண்டுகளில் அணு ஆயுதமே இல்லாத தேசமாகிவிட்டது. ஒருவேளை உக்ரைன் அவற்றை வைத்திருந்தால், இப்போது புடின் போர் தொடுக்கத் தயங்கி இருப்பார்.
சோவியத் ஒன்றியம் 1991-ல் உடைந்தபோது, சோவியத்தின் அணு ஆயுதக் கிடங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அது உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்கு என்று கூறலாம்.
இதிலிருந்தே முன்பு நிலவிய உக்ரைன்-ரஷ்ய பரஸ்பர உறவைப் புரிந்துகொள்ள முடியும். பின்பு, இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பின் கண்காணிப்பில் இருந்தன.
உக்ரைன் 1994-ல் ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்பு, தன்னிடம் இருக்கிற அனைத்து அணு ஆயுதங்களையும் 1996-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.
உக்ரைன் மக்கள் போராட்டம் – 2013
ரஷ்ய ஆதரவாளராக இருந்த உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் இந்த நடைமுறையை மாற்றினார். 2013-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இருந்த உறவைத் துண்டித்துக்கொண்டு ரஷ்யாவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டார்.
உக்ரைன் மக்கள் கோபமாகி வீதிக்கு வந்து போராடினார்கள்.
சுயமரியாதைக்கான புரட்சி எனப்பட்ட இந்தப் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிடுவதாக புடின் குற்றம் சாட்டினார். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் விக்டர் அரசு வீழ்ந்தது.
அவர் நாட்டை விட்டே ரஷ்யாவுக்கு ஓடினார்.புடின் கோபமாகி உக்ரைன் மீது 2014-ல் படையெடுத்தார். அதன் தெற்கில் இருந்த கிரீமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார். அப்போது தொடங்கிய மோதலின் இரண்டாவது இன்னிங்ஸ்தான் இப்போதைய போர்.
ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ரஷ்யப் பேரரசு கிரீமியா தீபகற்பத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டது.
ரஷ்யப் பேரரசில் உக்ரைன் இணைந்ததன் 300-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், 1954-ல் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் நிகிதா குருஷேவ் கிரீமியாவை உக்ரைனுக்குப் பரிசாக வழங்கினார். 40 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் தகர்ந்துவிடும் என்று அவர் அன்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.
சிதறுண்ட சோவியத் ஒன்றியம் (Collapse of Soviet union)
1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால், தன்னுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் ரஷ்யாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்களைத் தோற்றுவித்துள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகளால் தூண்டப்படுகின்றன. குறிப்பாக, ஐரோப்பியக் கூட்டமைப்பு, அமெரிக்கா ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உள்ள வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) உக்ரைன் சேர்வதற்கான முயற்சிகளைத் தனது பாதுகாப்புக்கான பெரும் அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது.
உக்ரைன் மக்களில் ஒருசாராரிடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் ஆர்வம் இருக்கிறது. சோவியத் ஆட்சிமுறையில் கட்டுப்பாடுகளை அனுபவித்த அம்மக்கள், ஐரோப்பிய சுதந்திர ஜனநாயகத்தைப் பெரிதும் விரும்புகின்றனர்.
இதனால், உக்ரைன் அதிபர் தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்வதற்கு முன்மொழியும் தலைவருக்கே கூடுதல் ஆதரவு கிடைத்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சாத்தியங்கள் இன்னும் அங்கு உருவாகவில்லை.
குறிப்பாக, அதன் வளர்ச்சி பெறாத பொருளாதாரம், வலுப்பெறாத ஜனநாயக அமைப்பு, அரசுக்கு எதிராக நடக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ரஷ்ய உக்ரைன் உறவு நிலை (Russia-Ukraine relations)
உக்ரைன் மக்கள் தொகையில் ஐந்து பேரில் ஒருவர் ரஷ்ய இனத்தவர். நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ரஷ்ய மொழி பேசத் தெரியும்.
ரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரைன் மக்கள் ரஷ்யாவை நேசிப்பார்கள்.மேற்கு உக்ரைனில் ரஷ்யாவை வெறுப்பார்கள். அதனால் ஒருபுறம் ரஷ்யாவுடன் இணக்கமாக இருந்தபடி, இன்னொரு பக்கம் ஐரோப்பிய யூனியனுடன் உறவாடி வந்தது உக்ரைன்.
மாஸ்கோவின் சுற்றுப்பாதையிலிருந்து கீவ் விலகி மேற்கத்திய சித்தாந்தத்தை நோக்கிய மாற்று வழியில் பயணிக்கத் தடைக்கல்லாக உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யெனுகோவேய்க் இருந்தார்.
அவர் ஒரு ரஷ்ய ஆதரவாளர். 2010-ல் அவருடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பெண் வேட்பாளர் டைமோஷென்ஸ்கோ இருமுறை பிரதமராகப் பதவி வகித்தவர். இவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் அங்கம் வகிக்க வேண்டும்.
அவ்வாறு இணைந்தால் உக்ரைன் செழிப்படையும் என்று வெளிப்படையாக ஆதரவு திரட்டியவர். உக்ரைனின் பாதுகாப்புக்கு நேட்டோவுடன் இணைவது முக்கியம் என்ற கருத்தைக் கொண்டவர். அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அவர், அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தன் மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜெர்மனி செல்லவும், உக்ரைனில் அரசியல் பதற்றம் தணியவும் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நவம்பர் 2013-ல் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பேரலையைப் போல அங்கு போராட்டங்கள் வெடித்தன.
தற்போதைய ரஷ்ய உக்ரைன் போர் ஏன் (current Russian-Ukrainian war)
அதிபர் விக்டர் யெனுகோவேய்க் தலைமையிலான அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக்கொண்டு, ரஷ்யாவுடன் கைகோக்கத் தயாரானது.
இதன் காரணமாக, ஏற்கெனவே நடந்துகொண்டிருந்த போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன.
இதற்கிடையே, எதிர்க் கட்சியினருக்கும் அதிபர் விக்டர் யெனுகோவேய்க்குக்கும் இடையே ஒருங்கிணைந்த ஒரு அரசை நிறுவுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கும் ஒரு இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் விக்டர் யெனுகோவேய்க் அதிபர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றம் பிரகடனப்படுத்தியது. அதற்கு முன்பே அவர் ரஷ்யாவின் உதவியை நாடி, அங்கு தப்பி ஓடினார்.
இதன் தொடர்ச்சியாக ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் ஐரோப்பிய ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல்கள், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் தோன்றின.
பூர்விக ரஷ்யர்கள் பெருமளவில் வாழும் கிரீமியாவில் கீவுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. ரஷ்ய ஆதரவாளர்கள் கிரீமியாவில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும் விமான நிலையங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உக்ரைன் முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது. மேலும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ராணுவத்தை அனுப்பவும் மார்ச், 2014-ல் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டார்.
கிரீமியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு ஒன்றும் நடந்தது. பெரும்பான்மையினர் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்தனர். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஷ்யாவும் கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது.
பனிப்போர் காலகட்டத்துக்குப் பிறகு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. உக்ரைனுடனான ரஷ்யாவின் உறவும் தீர்க்கவியலாத சிக்கலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில், உக்ரைன் சிக்குண்டு தன்னுடைய நிலப்பரப்பை ரஷ்யாவிடம் இழந்தது, சர்வதேசச் சட்டங்களுக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது.
உக்ரைனின் எல்லையோரப் பிராந்தியமான டான்பாஸில் ரஷ்ய ஆதரவுப் படையினருக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2021-லிருந்தே மோதல்கள் தொடங்கிவிட்டன.
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், ‘நோட்டோ’வுடன் உக்ரைன் சேர்வதற்கு ஊக்கமளித்தார். ஜோ பைடனுடனான காணோளிப் பேச்சுவார்த்தையின் போது, இந்த முயற்சிகள் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று புடின் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார்.
அதற்கு பைடனின் பதில், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்பதாகவே இருந்தது.
இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படை குவிப்புக்கு புடின் உத்தரவிட்டார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையை நோக்கி விரைந்தனர்.
கூடுதலாகத் தனது நேசநாடான பெலாரஸில் அணு ஆயுதப் போர்ப் பயிற்சியிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுவந்தது. உக்ரைன் மீது முப்படைகளின் மூலமும் முழுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார் புதின்.
தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே செர்னோபில் அணுமின் உலை இயங்கிய பகுதியை ரஷ்யா கைப்பற்றிவிட்டது.
இந்நடவடிக்கை உக்ரைன் அரசை மட்டுமல்லாது முழு ஐரோப்பாவையுமே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய எல்லையில் இரு நாடுகள் மோதிக்கொள்வது இதுவே முதல் முறை.