உங்கள் உடல் எந்த விதமானது? (Vata, pitta, kapha body)

உடலில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் எல்லா உடல்களும் ஒரே மாதிரியானவைதான். ஆனால் செயற்படும் தன்மையைப்  பொறுத்து  உடலானது  மூன்று விதமாக (Vata, pitta, kapha body) உள்ளது.

 1. வாத உடல்
 2. பித்த உடல
 3. கப உடல்

இதில் உங்கள் உடல் எந்த வகையானது என தெரிந்துகொள்ள விருப்பமா?

எவ்வாறு மூன்று விதமான உடல் (Vata, pitta, kapha body) உருவாகிறது?

உயிர் உருவாகும் நேரத்தில் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று இயக்கங்களில் எந்த இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அந்த அடிப்படையிலேயே அந்த கரு, உடலாக உருவாகிறது.

இவை மட்டுமல்லாது கலப்பு உடல் அமைப்பும் உள்ளது. இவற்றையெல்லாம் மிகச் சரியாகக் கூறவேண்டுமானால் அடிப்படையாக நாடியை பரிசோதிக்க வேண்டும். மேலும் பல பரிசோதனைகளின் மூலமே ஒருவர் என்ன தேக நிலையை உடையவர் என கூற முடியும்.

ஆனாலும் சில பொதுவான குறிகுணங்களைக் கொண்டு தேக நிலையை வகைப்படுத்தலாம்.

வாத உடலமைப்பு கொண்டவர்கள்

 • உடல் மெலிந்து உயர்ந்து  இருக்கும்.
 • அடித்தொடைகள் பருத்திருக்கும்.
 • நடக்கும்போது மூட்டுகளில் ‘டக்’ என சத்தம் வரும்.
 • இமைகள் தடிப்பாக இருக்கும்.
 • கறுத்த தலைமுடி நுனி முடி வெடித்திருக்கும்
 • உடல் கருமை வெண்மை கலந்த  நிறத்தில் இருக்கும்.
 • இனிப்பு, புளிப்பு, உப்பு, சூடுள்ள உணவுப் பொருள்களில் விருப்பம் இருக்கும்.
 • அதிக உணவு உண்டாலும் , உடல் வலிமை குறைவாக  இருக்கும்.
 • உணர்ச்சி, அறிவு ஆகியவை நிலையில்லாதது.
 • இசை, விளையாட்டு போன்றவற்றில் விருப்பம் இருக்கும்.
 • ஈகை குணம் இருக்காது.
 • புலமைத் திறமை இருக்கும்.

பித்த உடலமைப்பு கொண்டவர்கள்

 • உடலில் எப்போதும் வெப்பம், வியர்வை காணப்படும்.
 • உள்ளங்கை,உள்ளங்கால் சிவந்தும் மஞ்சள் நிறமானதாக  இருக்கும்.
 • மெல்லிய இமைகள் இருக்கும்.
 • வெயில்,கோபம் ,மது அருந்துதல் போன்றவற்றால்  கண்கள் விரைவில் சிவந்துவிடும்.
 • தலைமுடி செம்பட்டை நிறத்தில் காணப்படும்.
 • உடலில் உரோமங்கள் குறைவாகக் காணப்படும்.
 • தலைமுடி விரைவில் நரைக்கும்.
 • இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, குளிர்ச்சியான  உணவுப் பொருட்களை விரும்புவர் .
 • பசி, தாகம், சூடு ஆகியவற்றை தாங்கிக் கொள்ள முடியாது.
 • தைரியம், எதிலும் வெறுப்பு, தர்மகுணம், அறிவாற்றல் ஆகியவை இருக்கும்.

கப உடலமைப்பு கொண்டவர்கள்

 • உடல் பருத்து இருக்கும்.
 • நெற்றி பரந்து விரிந்திருக்கும்
 • கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவைகளில் விருப்பம்
 • சூடான உணவை விரும்புவர்.
 • பசி, தாகம் பொறுத்துக்கொள்வர்.
 • உடல் வலிமை இருக்கும்.
 • குறைந்த அளவே சாப்பிடுவர்.
 • அமைதியான குணம் கொண்டவர்கள்.

இவை தவிர,வாத ,பித்த, கப ,மூன்றின் (Vata, pitta, kapha body type)  பல்வேறு விதமான கலப்பு உடலமைப்பு கொண்டவர்களும் உள்ளனர்.

வாத ,பித்த, கப ,மூன்றில் ஏற்படும் மாற்றங்களால்  நோய்கள் ஏற்படுகின்றன.

வாத பிரகோபம் இல்லாமல் உடம்பு வாட்டம் அடையாது. பித்தம் உடம்மை கெடுக்காமல் வாந்தியும் உண்டாகாது. கபம், பிரகோபம் இல்லாமல் இருமல் இல்லை. குடலில் குளிர்ச்சி ஏற்படாமல் ஜ்வரம் தீராது. மந்தம் ஏற்படாமல் ஜ்வரம் உண்டாகாது. மந்தம் மாறாமல் ஜ்வரமும் மாறாது. வாயு அதிகரித்தால் வீக்கமும் அதிகரிக்கும்.

ஜீரணம் ஏற்படாமல் ஜ்வரம் விடாது. திரிதோஷ காரணங்கள் இல்லாமல் ஜன்னி உண்டாகாது. நீர் இல்லாமல் சோகை ஏற்படாது. மேக ரோகம் இல்லாமல் சூலை ரோகம் ஏற்படாது. அபத்தியம் இல்லாமல் தோஷ பிரகோபம் குறைவடையாது. கப பிரகோபம் இன்றி காச ரோகம், சுவாச ரோகம் இவைகள் ஏற்படாது. கபம் இல்லாமல் வியர்வையும் குளிர்ச்சியும் உண்டாகாது.

தோஷங்களும் சுவைகளும்

 • வாத தோஷம் அதிகமிருந்தால் புளிப்பு சுவையில் நாட்டம் ஏற்படும்.
 • பித்தம் அதிகமிருந்தால் கசப்பு சுவையில் நாட்டம் இருக்கும்.
 • கபம் அதிகரித்தால் தித்திப்பு சுவையில் நாட்டம் இருக்கும்.

ஆயுர்வேதத்தில், நீரிழிவு கபம் சம்பந்தப்பட்ட நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கபம் சம்பந்தப்பட்ட நோய்களில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஜீரண சக்தி குறைவு  காரணமாக  அதிக அளவிலான சர்க்கரை ரத்தத்தில் தேங்கிவிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *